»   »  சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- 'கங்காரு' சுரேஷ் காமாட்சி குமுறல்

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- 'கங்காரு' சுரேஷ் காமாட்சி குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை 2-ஐத் தயாரித்தவர். இப்போது தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'சாமி இயக்கத்தில் 'கங்காரு' என்கிற படத்தை தயாரித்து ஏப்ரல் 24ம் தேதி வெளியிடுகிறார். 150 திரையரங்குகளில் படம் வெளியாகிறது .

Kangaroo Suresh Kamatchi's open talk

அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம்? கேட்டவுடன் குமுறிவிட்டார் மனிதர்.

''சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்கள் வரை சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல,'' என்றவர் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார்.

பட்ஜெட்டில் பிரச்சினை!

"ஒரு படக்குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அதற்குள் சொன்ன அந்த தேதிக்குள், சொன்ன செலவுக்குள் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும் வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும்.

சொன்ன தேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப் பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால் கூட விடமாட்டார்கள்.

படப்பிடிப்பில் பிரச்சினை!

படப்பிடிப்பு தொடங்கினால் தினம் தினம் செலவுதான். அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். இப்படி 24 கிராப்டுக்கும் சம்பளம் தர வேண்டும். 2, 3நாள் கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேன் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும். ஒரு ஹேர் டிரஸ்ஸர் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்த முடியும். ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால்... ம்ஹூம், ஒண்ணும் பண்ணமுடியாது!

அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நேர்ந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள். கொடைக்கானலில் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர முன்னே பின்னே ஆகலாம். 2 நாள் கூட பொறுக்க முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர்கள் மட்டும்தான்.

Kangaroo Suresh Kamatchi's open talk

சங்கங்களின் அச்சுறுத்தல்!

திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளை பெற, ஊதியப் பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். நான் ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்கள் கூட சொல்லமுடியாது, நான் சங்கங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லையென்று.

பேட்டா தாமதனதற்கு லைட்மேன் யூனியன் தலைவர் ராஜா என்னை மிரட்டுகிறார். உன் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறார். படப்பிடிப்பு நிறுத்தப் பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா?

24 கிராப்ட்டையும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன. ஆனால் முதல்போட்ட தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்?

வியாபாரத்தில் போராட்டம்!

ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால் அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்வதற்கு தாவு தீர்ந்துவிடுகிறது. ஆளாளுக்கு ஒன்றைக் கூறுவார்கள்.

இந்தச் சூழலில் ஒருதயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்காக எடுக்க வேண்டுமா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்கு எடுக்க வேண்டுமா? விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா ? ஒன்றுமே புரியாது. பேசியபடி வியாபாரம் நடப்பதில்லை.

சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. சினிமாவில். எங்களால்தான் தொழில் நடக்கிறது, ஆனால் எங்களுக்குத்தான் மரியாதை இல்லை.

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால்தான் விநியோகஸ்தர்கள் வருகிறார்கள், வியாபாரம் பேசுகிறார்கள். அவர்களின் முதல் கேள்வியே பெரிய நடிகர்கள் இருக்கிறார்களா என்பதுதான்.

பெரிய நடிகர்கள் ஆறு, ஏழு பேர்தானே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வருஷத்துக்கு எத்தனை படம் எடுக்க முடியும்? ஆறு, ஏழு படம்தானே எடுக்க முடியும். மற்ற நாட்களில் யார் படங்களை திரையரங்கில் வெளியிடுவது? பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேர்தான் இருக்கிறார்கள். மற்றபடங்கள் தயாரிப்பது சின்ன தயாரிப்பாளர்கள்தானே?

திருட்டு விசிடி, சென்டார்...

ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் நோகாமல் திருட்டு விசிடி போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை.

ஒரு படத்துக்கு 'யூ' சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார்யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாகக் கேட்பார்கள். 'யூ' சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும்டா சாமி என்றாகிவிடும்.

இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்ற அச்சுறுத்தல்..

இப்போ சொல்லுங்க தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா இல்லையா?" என்று நம்மையே கேட்கிறார் சுரேஷ் காமாட்சி.

சரி, முதல் படம் அமைதிப்படை 2 பரபரப்பா அமைஞ்சிடுச்சி.. இரண்டாவது படம் கங்காரு எப்படி வந்திருக்கு?

''கங்காரு' நல்லா வந்திருக்கு. ஒவ்வொரு தயாரிப்பாளரும் சொல்றதுதான் இது என்றாலும், படத்தின் மீது அதன் தரத்தின் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதால் இதைச் சொல்கிறேன். எந்தப் போட்டியுமில்லாமல் ஏப்ரல் 24-ம் தேதியன்று வெளியாகிறது.'' என்றார்.

English summary
Suresh Kamatchi, the producer of upcoming movie Kangaroo shares his experience as a producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil