»   »  'வெளியே நில்லுங்க'... இயக்குநரை அவமானப்படுத்திய சென்சார் அதிகாரி.. யு சான்றுக்கு பேரம்!!

'வெளியே நில்லுங்க'... இயக்குநரை அவமானப்படுத்திய சென்சார் அதிகாரி.. யு சான்றுக்கு பேரம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்சார் அதிகாரி மற்றும் குழுவினர் மீது இப்போதெல்லாம் ஏகத்துக்கும் புகார்கள் குவிகின்றன.

அவமானப்படுத்துகிறார்கள், படைப்பாளிகளை மதிப்பதில்லை, அநியாயத்துக்கு தாமதம், யு சான்று தர பணம் கேட்கிறார்கள்... இப்படி.


Kanna Pinna movie director's fight with Censor board

இவை எல்லா புகார்களுடனும் ஒரு இயக்குநர் மீடியாவில் முறையிட்டுள்ளார். அவர் இயக்குநர் தியா. கன்னா பின்னா படத்தை இயக்கிவிட்டு, வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.


என்ன சொல்கிறார் தியா?


"சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தைத் திரையிட்டு காட்டினேன். படத்தைப் பார்த்த தணிக்கை குழு முதன்மை அதிகாரி மதியழகன் இந்தப் படத்தில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுக்கமுடியும் என்றார்.


இதுகுறித்து நான் விளக்கம் கேட்டேன். சில குறிப்பிட்ட வசனங்களையும் சில காட்சிகளையும், ஒரு பாடலையும் நீக்கும்படி கூறிவிட்டார். வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த திணிப்பும் இல்லாமல்தான் எடுத்திருக்கிறேன்.


ஆனாலும் படத்திற்கு 'யு' சான்றிதழ் முக்கியம் என்பதாலும், தயாரிப்பாளரை தேவையில்லாத நட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாலும் சென்சார் அதிகாரி சொன்ன மாற்றங்களை செய்தேன். ஆனாலும் சில இடங்களில் அவர் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கினால் கதையின் தன்மையே மொத்தமாக சிதைந்துவிடும் என விளக்கினேன். ஆனாலும் 'யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும் என பிடிவாதமாக இருந்தார் மதியழகன்.


இதுதவிர, படத்தின் தயாரிப்பாளரையும் வைத்துக்கொண்டே, 'இந்த மாதிரி படங்களை எல்லாம் ஏன் எடுத்து காசை வீணாக்குகிறீர்கள்? பேசாமல் என்ன தொழில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதையே உருப்படியாக பண்ணலாமே, அல்லது படம் எடுப்பதற்கு முன் என்னைக் கலந்து ஆலோசித்திருக்கலாமே," என்றார். நான் அதிர்ந்துவிட்டேன்.


Kanna Pinna movie director's fight with Censor board

கோபம்


படம் எடுப்பதற்கு முன்பே அதுகுறித்து சென்சார் அதிகாரியிடம் ஆலோசிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என அவரைக் கேட்டேன். சமீபத்தில் வெளியான ஆபாசமான காட்சிகள், வசனங்கள் நிறைந்த, ஒரு படத்திற்கு எந்த அடிப்படையில் 'யு' சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்றும் கேட்டேன்.


இதனால் கோபமான மதியழகன், 'மற்ற படங்களைப் பற்றி பேச உங்களுக்கு அதிகாரமில்லை. உங்களுக்கு 'யு' சான்றிதழ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லுங்கள்,' என்றார் தெனாவெட்டாக. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சமுத்திரக்கனியின் 'அப்பா' படம் பார்த்தீர்களா..? அதற்கு எப்படி 'யு' சான்றிதழ் கொடுத்தோம் தெரியுமா? என அவரே இன்னொரு படம் குறித்து பேச ஆரம்பித்தார்.


இப்போது மட்டும் இன்னொரு படம் குறித்து நீங்கள் எப்படி பேசலாம் என கேட்டேன். இதனால் டென்ஷனான அவர், 'இந்தப்படத்தின் ரைட்ஸ் ஏதாவது இயக்குநரிடம் கொடுத்திருக்கிறீர்களா,' என தயாரிப்பாளரைக் கேட்டார்.


அதற்கு 'இல்லை' என தயாரிப்பளார் பதில் சொன்னதும், என்னை தனது அறையைவிட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் தனியாக நீண்ட நேரம் பேசினார். அது யு சான்றுக்கான பேரம்.


சான்றிதழ் வழங்குவதை இந்த அதிகாரி மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதல்லவா..? அதனால் இவருடன் படம்பார்த்த மற்ற தணிக்கை குழு உறுப்பினர்கள் விபரங்களைக் கேட்டேன். ஆனால் முறைப்படி ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தால்தான் தருவேன் என்றார். கடிதம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் பதிலில்லை.


பெரிய படங்கள், சிறிய படங்கள் என பாரபட்சம் காட்டி தணிக்கை சான்றிதழ் வழங்கினால், சிறிய தயாரிப்பாளர்கள் எப்படி படம் தயாரிக்க முன்வருவார்கள். வந்தவர்களும் நட்டப்பட்டு, அத்துடன் படத்தொழிலுக்கே கும்பிடு போட்டு வெளியேறும் சூழலைத்தான், தன்னிச்சையாக செயல்படும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இந்த சென்சார் அதிகாரி உருவாக்குகிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு இயக்குநரின் பல வருட உழைப்பை, கனவை கருவிலேயே சிதைக்கும் வேலையையும் செய்கிறார்," என குமுறுகிறார் இயக்குநர் தியா.


இயக்குநர் தியா முன் வைக்கும் கேள்விகள்...


எஸ்.வி.சேகர் போன்ற தணிக்கை குழுவில் இருக்கும் நபரே, இந்த அதிகாரியிடம் தனது படத்திற்கு 'யு' சான்றிதழ் வாங்குவதற்கு 'கபாலி' படத்தை உள்ளே இழுத்திருக்கிறார். அதன் பின்னர்தான் அவர் தயாரித்துள்ள படத்திற்கே 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் எங்களைப்போன்ற சிறிய படங்களை எடுப்பவர்கள் அப்படி கேள்வி எழுப்ப முடியுமா..?


படத்திற்கு 'யு' அல்லது 'ஏ' என எந்த சான்றிதழும் தராமல் 'யு/ஏ' தான் தருவேன் என தணிக்கை அதிகாரி மதியழகன் அடம்பிடிக்கவேண்டிய காரணம் என்ன..?


ஆபாசமான, சர்ச்சைக்குரிய சில படங்களுக்கு மட்டும் அவர் 'யு' சான்றிதழ் வழங்கியிருப்பது எதன் அடிப்படையில்..?


எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் ஒரு படத்தை தயாரித்து ரிலீஸுக்காக கொண்டுவரும் நேரத்தில், எந்தவித காரணமும் சொல்லாமல் இல்லாமல் இப்படி சான்றிதழ் தர தணிக்கை அதிகாரி மறுப்பது ஏன்.,?


ஒரு படத்தின் இயக்குநரை வெளியே போ எனச் சொல்லிவிட்டு, தயாரிப்பாளருடன் தனியாக் பேசும் உரிமை தணிக்கை அதிகாரிக்கு இருக்கிறதா..?


என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பும் இயக்குனர் தியா, ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி தயாரிப்பாளருக்கு இன்னும் செலவு வைக்க விரும்பவில்லை. அதேசமயம் தணிக்கை அதிகாரியின் பேரத்துக்கு படிந்து பணம் கொடுத்து படத்திற்கு 'யு' சான்றிதழ் வாங்கவும் விரும்பவில்லை என்கிறார்.


வரும் டிச-9ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதே நேரம், சென்சாருக்கு எதிரான சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதாகக் கூறுகிறார் தியா.

English summary
Dhiya, director of Kanna Pinna movie has levelled various allegations including bribe to give U certificate on regional censor office Mathiazhagan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil