கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி… அழகுக்காக கன்னட நடிகை எடுத்த முயற்சி மரணத்தில் முடிந்த பரிதாபம்
பெங்களூர் : பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கன்னட தொலைக்காட்சி நடிகை திடீரென உயிரிழந்துள்ளார். இது கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் முக அழகுக்காக சிகிச்சை மேற்கொண்டார். அதில் ஏதோ குளறுபடி ஆகி, முகம் வீங்கி காணப்பட்டது சர்ச்சையான நிலையில், கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் உயிரிழந்துள்ளது பலருக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட நடிகை சேத்தனா ராஜ்.
21 வயதே ஆன நடிகை சேத்தனா ராஜ் கன்னட தொலைக்காட்சி கீதா, டோரேசனி போன்ற கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு 21 வயதுதான் என்ற போதும் உடல் எடை கூடி காணப்பட்டார். உடல் எடையை குறைக்க எண்ணிய சேத்தனா ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்காக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுயநினைவை இழந்தார்
அவருக்கு, உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை நேற்று மதியம் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது, நடிகை சேத்தனா சுயநினைவை இழந்தார். இதனால், பதற்றம் அடைந்த மருத்துவர்கள் அவரை அருகில் உள்ள வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இதையடுத்து, நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
நடிகை சேத்தனா பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து தனது பெற்றோருக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நடிகை சேத்தனாவின் உடல் தனியார் மருத்துவமனையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடிகை சேத்தனாவின் பெற்றோர் மகளின் மரணத்திற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் மருத்துவமனை குழுவின் மீது புகார் அளித்துள்ளனர்.

மரணத்திற்கு என்ன காரணம்
உடலை அழகுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரியால் வெறும் 21வயதே ஆன நடிகை உயிரிழந்துள்ளது பெங்களூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நடிகை இழப்புக்கு என்ன காரணம் என்றும், அந்த நடிகைக்கு என்ன சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த தனியார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளம் நடிகையின் மரணம் கன்னட திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











