தம்மை உணர்ந்து மதிப்பிட்டதிலும் உயர்ந்த கவிஞர் - கண்ணதாசன்

By Ka Magideswaran

Recommended Video

காவிய கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் மகுடேசுவரன்

தன்னை மதிப்பிடுவதில் கண்ணதாசனை மிஞ்ச முடியாது. தாம் எழுதியவற்றைக் குறித்து எவ்வொரு மிகை மனப்பான்மையும் இல்லாத நடைமுறைக் கவிஞராக வாழ்ந்து சென்றிருக்கிறார். “ஆயிரம் திரைப்பாடல்களை அச்சிட்டுப் பார்த்து, மேலும் இரண்டாயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டதையும் பார்த்துவிட்டேன். எழுதியது ஐயாயிரம் என்றாலும், படித்தால் கவிதைபோல் இருப்பது ஆயிரம் இருக்கும்.”

ஐயாயிரம் பாடல்களுக்கு மேலாக எழுதியிருப்பேன், அவற்றில் ஆயிரம் பாடல்கள் நூலாகியிருக்கின்றன. மேலும் இரண்டாயிரம் பாடல்களைத் தொகுத்துத் தந்துவிட்டேன். அவற்றில் படித்துப் பார்த்தால் கவிதையாகத் தெரிபவை ஆயிரம் பாடல்கள் இருக்கலாம் என்ற பொருளில் அவர் தெளிவாகக் கூறுகிறார். இன்றைக்குள்ள பலரின் செருக்குகளோடு ஒப்பிடுகையில் அவர் எள்ளளவும் பெருமைப்பட்டுக்கொண்டவராகத் தெரியவில்லை. இந்த மேன்மைதான் அவரைப் பிறரிடமிருந்து மலையளவு உயர்த்திக் காட்டுகிறது.

kannadasan self valuation and his abilities


திரையிசையைப் பற்றியும் அங்கே எழுதப்படும் பாடல்களில் சிதையும் இலக்கணத்தைப் பற்றியும் அவர் அன்றே வருத்தப்பட்டுச் சொன்னவை இவை :

“அறிந்தோ அறியாமலோ நாளாக நாளாக சங்கீதம் என்பது தலை தடுமாறிப் போய்விட்டது. சினிமா சங்கீதம் மட்டுமல்ல; கர்நாடக சங்கீதத்தைத் தவிர, பாக்கி அனைத்துமே இலக்கணமில்லாமல் போய்விட்டன. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கும் வேடிக்கையான இசைகளை இன்றைக்குக் கேட்கிறோம். இந்த இசைகளுக்கு எழுதப்படும் பாடல்களைப் படித்துப் பார்த்தால், உரைநடையைவிட இலக்கணம் இல்லாமல் இருக்கும். இந்த இசைகளை எந்த வகைகளில் சேர்ப்பது ? இந்தப் பாவத்தைத் தமிழ்நாடு மட்டும் செய்யவில்லை. உலகமே செய்து வருகிறது.”

திரைப்பாடலில் இலங்கும் இசையின் வீழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார். அதனுடன் அவர் திரைப்பாடல்கள் இலக்கணமின்றி எழுதப்படும் போக்கையும் கூறுகிறார். எவ்வகைக் கட்டுகளும் இல்லாமல் எழுதப்படுகின்ற உரைநடை எழுத்துகள்கூட ஓரளவு இலக்கணத்தோடு இருக்கும். உரைநடை எழுதுவோர்க்கு மொழி இலக்கணம் தெரியாதிருப்பது வாடிக்கை. இலக்கணம் தெரிந்துவிட்டால் அவர்கள் கவிதைகளையும் பாடல்களையும் எழுதத் துணிவார்களே. மொழி இலக்கணக்கூறுகளை அறியாதோரே உரைநடை எழுதத் தலைப்பட்டனர். அத்தகையோர் எழுதும் உரைநடையிலேகூட ஓரளவு இலக்கணச் சுத்தம் இருப்பதைக் காண்கிறார் கண்ணதாசன். ஆனால், திரைப்பாடல்களில் உரைநடை எழுத்தில் இருக்கும் இலக்கணம்கூட இருக்கவில்லை என்று நொந்துபோகிறார். கண்ணதாசன் காலத்திலேயே அப்படி இருந்திருக்கிறது என்றால் இக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள் எவ்வாறிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால்தாம் தாம் எழுதுகின்ற பாடல்களின் கவிதைத் தரம்குறித்து அவர்க்கே ஒரு மதிப்பீடு இருந்திருக்கிறது. அதைச் சொல்லத் தயங்கவுமில்லை.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கண்ணதாசன் கோவையில் ஜூபிடர், சென்ட்ரல் ஆகிய படப்பிடிப்பு நிறுவனங்களுக்கு எழுதுகிறார். அதன்பிறகுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு அவர் தொடர்ந்து கதை உரையாடல் எழுதிக்கொடுக்கும்படி ஆகிறது. டி. ஆர். சுந்தரத்தின் முன்னால் அமர்ந்து பேசக்கூடிய ஒரேயொருவராக நற்பெயர் ஈட்டியிருக்கிறார். பணம் என்று சொல்லி வாய்மூடும் முன்பு “வாங்கிக்கொள்” என்று சொல்லும் தெய்வம் என்று சுந்தரத்தைக் குறிப்பிடுகிறார் கண்ணதாசன். தமிழ்நாட்டில் கடனே வாங்காமல் படமெடுத்த ஒரே நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்.

தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகள்தாம் ஒருவர்க்கு ஊக்கமூட்டுகின்றன. அதிலிருந்து பெறுகின்ற நம்பிக்கைதான் நம்முடைய முழுத்திறன்களையும் வெளிப்படுத்துவதற்கு வழியமைக்கிறது. அக்காலத்தில் உடுமலை நாராயணகவியே முதன்மையான பாடலாசிரியர். அவர் ஒரு பாடலை எழுதித் தருவதற்கு ஏழு நாள்களை எடுத்துக்கொள்வாராம். அந்நிலையில் கண்ணதாசனுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரும்புகழ் பெற்றவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வாத நிலையில் அவர்களைத் துறந்து புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பவர் இயக்குநர் கே. இராம்நாத். “நான் எழுதிய முதல் பாட்டு இப்பொழுது படித்துப் பார்த்தால், மிகவும் சாதாரணமானதுதான். ஆனால் அதை ஒப்புக்கொண்டதன் மூலம் அதற்குப் பெருமையைத் தேடித் தந்தார் கே. ராம்நாத். அதிலே ஒரு தெம்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்த பாடல்களை உற்சாகமாக எழுத முடிந்தது…” என்று கூறுகிறார் கண்ணதாசன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இதழாசிரியர் பொறுப்பிலிருந்தபோதே கண்ணதாசனின் எழுத்துத் திறமையை நன்கு அறிந்தவர் சுந்தரம். அவர்க்கு ஆங்கிலம்தான் நன்கு தெரியும் என்பதால் தமிழ் தெரிந்தவர்களிடம் எப்போதும் தனியன்போடு பழகுவாராம். கண்ணதாசன் அங்கிருந்து விலகிச் சென்று வெவ்வேறு படங்களுக்குப் பணியாற்றியபோதும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கும் தொடர்ந்து எழுதித் தந்தார்.

படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கிய நிலையிலும் அதில் கண்ணதாசனால் தொடர இயலவில்லை. மெட்டுக்குப் பாட்டு என்னும் தொடக்க நிலைக் குழப்பம் அவரையும் தொற்றியது. “மெட்டுக்குள் பாட்டெழுதுவது என்பது கிடுக்கிக்குள் சிக்கிக்கொண்ட எலி மாதிரிதான். சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல முடியாது. பாடலுக்கான இலக்கணம் இருக்காது. படித்துப் பார்த்தால் வசனம் மாதிரி இருக்கும். அனாவசியமாக வார்த்தைகளும் நீட்டலும் இருக்கும். போதுமடா சாமி என்று வசனம் எழுதப் புகுந்தேன்…” என்கிறார்.

ஆதித்தன் கனவு என்ற படத்துக்கு முதன்முறையாக திரைக்கதை எழுதினார். அதன்பிறகு கதை உரையாடல்கள் எழுதுவதில் பெயர்பெற்ற எழுத்தாளரானார். மாயாவதி, கல்யாணி, வளையாபதி, திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே ஆகிய படங்கள் வந்தன. நாடோடி மன்னனுக்குக் கண்ணதாசனும் இரவீந்தர் என்பவரும் ஆளுக்கு இரண்டாயிரம் பக்கங்கள்வரை எழுதினார்களாம். எம்ஜிஆர் படங்களுக்கான பங்களிப்பு மகாதேவி, மதுரைவீரன், மன்னாதி மன்னன் என்று தொடர்ந்தது.


கண்ணதாசன் ஒன்றைச் சொன்னால் அது அப்படியே “அறம் பாடியதாகிப்” பலித்தும் இருக்கிறது. தெனாலிராமன் படத்தின் முதலாளி கண்ணதாசனின் நண்பர்தான். அவர் தம்முடைய பட நிறுவனத்துக்கு “விக்ரம் புரொடக்ஸன்ஸ்” என்று பெயர் வைத்திருக்கிறார். அந்தப் பெயரை மாற்றும்படி கோரியிருக்கிறார். “நிறுவனம் தொடங்கிய உடனே விக்கிறோம்னு சொல்ற மாதிரி இருக்கு…” என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதுபோலவே அனைத்தையும் விற்கும்படி ஆயிற்றாம். கே. ஆர். இராமசாமிக்குக் கண்ணதாசன் எழுதிய பாட்டு “பாட மாட்டேன் நான் பாடமாட்டேன்” என்று தொடங்கிற்று. அந்தப் பாடலுக்குப் பிறகு நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே. ஆர். இராமசாமியினுடைய திரைவாழ்க்கையில் மேலும் பாடமுடியாதபடி ஆனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X