கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்.. ஹீரோ ரஜினியின் ‘மாப்பிள்ளை’!
கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
சென்னை: ரஜினியைத் தொடர்ந்து அவரது மருமகனான தனுஷை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி ரிலீசானது. தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் வசூலிலும் உலகளவில் சாதனை புரிந்து வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியை இளமையாக, துள்ளலான நடிப்புடன் பார்த்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. ரஜினியை வைத்து இப்படியொரு படத்தைத் தந்ததற்காக கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட கொண்டாட்டம்:
இந்நிலையில் பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை காசி திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்தார். பின்னர் பேட்ட வெற்றியை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

அடுத்து தனுஷ்:
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘ரஜினியைத் தொடர்ந்து தனுஷை இயக்க இருப்பதாகத்' தெரிவித்தார். பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கார்த்திக் சுப்புராஜின் இந்த பேட்டி மூலம், அடுத்ததாக அவர் தனுஷை இயக்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
பேட்ட படத்திற்கு மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜுன் இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அசுரன் படப்பிடிப்பு:
தற்போது, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து வட சென்னை படத்தில் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே பவர் பாண்டி படத்தைத் தொடர்ந்து நாகர்ஜுனா உள்பட நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படமொன்றை தனுஷ் இயக்கும் வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











