twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் மைல்கல் பாலச்சந்தர்! - முதல்வர் கருணாநிதி

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் மைல்கல் இயக்குநர் பாலச்சந்தர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

    இயக்குநர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அந்த செய்தி:

    கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளிவீசி வருபவரும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கித் தயாரித்தவரும், பல படங்களுக்கு ஏற்கனவே தேசிய விருதுகளும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவரும், தமிழ்த் திரையுலகில் பழுத்த அனுபவமும், ஏகோபித்த புகழும் கொண்டவரும், நீண்டநெடுங்காலமாக எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்பவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு; திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக; மத்திய அரசு 2010ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

    தாதா சாகேப் பால்கே விருது பெறும் முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலசந்தர் என்பது கூடுதல் சிறப்பாகும். அருமை நண்பர் கே.பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர். தமிழ்த் திரைப்படப் பரிணாமத்தில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலும் மறுத்திட இயலாது.

    கே.பாலசந்தர் அவர்களுக்கு இந்த விருதின் மூலம் அகில இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு எனது உள்ளம் பேருவகை கொள்கிறது. நண்பர் கே.பாலசந்தர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் முதல்வர்.

    பாலச்சந்தரை வீடு தேடிப் போய் வாழ்த்திய அழகிரி - ஸ்டாலின்

    பால்கே விருது பெற்ற பாலச்சந்தரை வீடு தேடிப்போய் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர் மத்திய அமைச்சர் முக அழகிரியும் துணை முதல்வர் முக ஸ்டாலினும்.

    பாலச்சந்தருக்கு பொன்னாடை அணிவித்த முக அழகிரி, அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருப்பதாகவும், தமிழ் சினிமாவின் பெருமை பாலச்சந்தர் என்றும் கூறினார்.

    முக ஸ்டாலின் கூறுகையில், "நான் பாலச்சந்தரின் தீவிர ரசிகன். அவர் இயக்கிய பல படங்களை நான் பார்த்துள்ளேன். அவற்றில் சில படங்களை பலமுறை பார்த்துள்ளேன். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. அதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த விருது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த கவுரவம்," என்றார்.

    முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கேபி:

    பின்னர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கே பாலச்சந்தர். இச்சந்திப்பின் போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்தர், "ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு செஞ்சுரி ஆர்ட்டிஸ்ட். அவருக்குப் பிறகு எனக்கு இந்த விருது கிடைத்து இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். விருது கிடைத்ததற்காக முதல்வர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    இந்த விருதை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் எனக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Tamil Nadu chief minister M Karunanidhi praised and wished the Dada Saheb Pahlke award winner director K Balachander today and described him as the milestone of Tamil cinema. Deputy CM M K Stalin, Union Minister M K Azhagiri have visited Balachander at his resident and offered their respects to the veteran film maker.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X