அதிர்ச்சி.. கேஜிஎஃப் 2 நடிகையின் தந்தை காலமானார்.. அப்பா உங்களை தனியா போக விட மாட்டேன் என உருக்கம்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டான்டனின் தந்தையும் தயாரிப்பாளருமான ரவி டான்டன் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த ரவீனா டான்டன் கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தந்தையின் மறைவை ஏற்க முடியாத நடிகை ரவீனா டான்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் மரணம்
பாடகி லதா மங்கேஷ்கர், பீமராக நடித்த பிரவீன் குமார் சோப்தி என தொடர்ந்து பாலிவுட்டின் புகழ்பெற்ற பிரபலங்கள் காலமாகி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரவீனா டான்டனின் தந்தை ரவி டான்டனின் மறைவு மீண்டும் பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தி படங்களை இயக்கி, தயாரித்து நடித்துள்ளார் இவர்.

ரவி டான்டன் காலமானார்
பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவி டான்டன் பிப்ரவரி 11ம் தேதி வயதுமூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. மும்பை ஜூஹுவில் உள்ள அவரது இல்லத்திலேயே இன்று காலை உயிர் பிரிந்த நிலையில், மாலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

பாலிவுட் பிரபலம்
1935ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிறந்த ரவி டான்டன் தனது 87வது பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடவிருந்த நிலையில், காலமாகி இருப்பது அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1973ல் அன்ஹோனி எனும் படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குநரான இவர் 1987ம் ஆண்டு வரை பல பாலிவுட் வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார். ராஜேஷ் கன்னா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான நஸ்ரானா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என அசத்திய இவரது மறைவு பாலிவுட் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரவீனா டான்டன் தந்தை
தமிழில் அர்ஜுனின் சாது மற்றும் கமல்ஹாசனின் ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த ரவீனா டான்டன் தற்போது கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அவரது தந்தையின் மறைவு அவரை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது. தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ரவீனா டான்டனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஐ எம் நெவர் லெட்டிங் கோ
தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை ரவீனா டான்டன் "You will always walk with me , I will always be you, I'm never letting go. Love you papa" என மிகவும் உருக்கமான பதிவை போட்டு தனது தந்தை காலமான செய்தியை பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவித்து இருந்தார். அவரது போஸ்ட்டை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் சிலர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











