பொத்தி வச்ச காதல்... திடீரென திருமண ஏற்பாடு... ட்ரெண்டாகும் நட்சத்திர ஜோடியின் ரகசிய போட்டோஸ்
மும்பை: 2014ம் ஆண்டு வெளியான ஃபிக்லி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கியாரா அத்வானி.
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் சாக்ஷி கேரக்டரில் நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
கியாரா அத்வானிக்கும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே காதல் என செய்திகள் வெளியாகி வந்தன.
இதனை இருவரும் மறுத்து வந்த நிலையில், தற்போது திருமணத்திற்காக மும்பையில் இருந்து ராஜஸ்தான் கிளம்பி சென்ற கியாரா அத்வானியின் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

பொத்தி வச்ச தெய்வீக காதல்
சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக்கான 'எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் சாக்ஷி கேரக்டரில் நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்தப் படம் அவரை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் அடிக்கடி ரகசியமாக டேட்டிங் சென்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

காதலை மறுத்த நட்சத்திர ஜோடி
ஷாருக்கானின் 'மை நேம் இஸ் கான்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சித்தார்த் மல்ஹோத்ரா, அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தினார். ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், ஏக் வில்லன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தான் கியாரா அத்வானியும் சித்தார்த்தும் காதலித்து வரும் செய்திகள் வேகமாக பரவின. ஆனால் இதனை சித்தார்த் மல்ஹோத்ரா திட்டவட்டமாக மறுத்து வந்தார். எங்களுக்குள் காதலே கிடையாது என கற்பூரம் அடித்து சொல்லாத குறையாக கூறி வந்தார்.

ரகசியமாக திருமண ஏற்பாடுகள்
ஆனாலும் ஷெர்ஷா' படத்தில் இணைந்து நடித்தபோதே கியாராவும் சித்தார்த்தும் காதலிக்கத் தொடங்கியதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. மேலும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவது உறுதியாகியுள்ளது. திருமண உடை குறித்து பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் ஷர்மாவை அவருடைய வீட்டில் சந்தித்து விவாதித்திருந்தார் கியாரா அத்வானி. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தன.

பிப் 6ம் தேதி திருமணம்
அதன்படி இருவரும் பிப்ரவரி 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய் சாலிமர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரையுலக பிரபலங்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ராஜஸ்தான் சென்ற கியாரா
இந்நிலையில், கியாரா அத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்த கியாரா அத்வானியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அதேபோல், சித்தார்த் மல்ஹோத்ராவும் டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறாது. திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் இந்த ஜோடி இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் - ஆலியா பட், கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் போன்ற பாலிவுட் ஜோடிகள் பட்டியலில் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஜோடியும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











