»   »  இடியாப்ப சிக்கலில் கோடம்பாக்க சினிமா!

இடியாப்ப சிக்கலில் கோடம்பாக்க சினிமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிமாய் கோஷ் சினிமா தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்புக்காக, தொழிலாளர்களுக்கான அமைப்பை 50 வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய போது இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் வரும் என எண்ணியிருக்க மாட்டார்.

வேலை நேரத்தையும், அதற்கான ஊதியத்தை முதலாளிகளுடன் பேசி உறுதிப்படுத்துவதை பிரதான வேலையாக கொண்டவை தொழிற்சங்க அமைப்புகள். அதனை நேர்மையாகவும், நியாயமாகவும் அமுல்படுத்த பெப்சி அமைப்பு முயற்சி செய்த போது அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தது தயாரிப்பாளர்கள் அமைப்பு.

Kollywood in big crisis

தொழிலாளர்கள் அமைப்புக்குள் சர்வாதிகார மனம் படைத்தவர்கள், வேலையே செய்யாமல் பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள், ஊழல்வாதிகள் பொறுப்புக்கு வந்த பின் ஃபெப்சி அமைப்பு தன் உண்மையான நோக்கத்தை தொலைத்தது.

அதன் கொடுர முகம் பாலுமகேந்திரா இயக்கத்தில உருவான ராமன் அப்துல்லா படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வெளிப்பட்டது. பேக் அப் சொல்ல வேண்டிய இயக்குநர் உரிமை மறுக்கப்பட்டு, ஃபெப்சி அமைப்பினரால் பேக் அப் சொல்லி படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஸ்ட்ரைக் தொடங்கியது. ஃபெப்சி உறுப்பினர்களுடன் இணைந்து வேலை செய்ய முடியாது என அறிவித்த தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் என்ற அமைப்பை தொடங்கினார்கள். இதற்கு ஃபெப்சி அமைப்பில் அங்கம் வகித்த இயக்குநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து அமைப்பிலிருந்து வெளியேறியது.

பாரதிராஜா தலைமையில் படைப்பாளிகள் அமைப்பை தொடங்கி பல ஆயிரம் புதியவர்களிடம் சந்தா வசூல் செய்யப்பட்டது. படப்பிடிப்புக்கு தொழிலாளர்களை தயார் செய்து அனுப்புவதில் இவ்வமைப்பு தோல்வி கண்டது. ஃபெப்சி அமைப்பு இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான சூழல் உருவாகி படப்பிடிப்புகள் நடைபெற்றது வரலாறு.

அதே நிலைமை தற்போது நிலவுகிறது. மதுரையில் நடைபெற்று வந்த பில்லா பாண்டி படப்பிடிப்பை ஃபெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினைக்காக நிறுத்தியதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆவேசப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் கணக்காக ஃபெப்சி உறுப்பினர்களை வைத்து வேலை செய்ய மட்டோம், அவர்கள் கேட்கும் சம்பளத்தை தரமட்டோம் என அறிவித்து ஒரு வாரமாகியும் பெப்சி உறுப்பினர்கள்தான் படப்பிடிப்புகளில் வேலை செய்து வருகின்றனர்.

அன்றைக்கு பாலுமகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா, இன்றைக்கு தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஆர்கே சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி படப்பிடிப்பு. அன்றைக்கு இயக்குநர் சுயமரியாதைக்காக ஃபெப்சிக்கு எதிராக களத்தில் தலைமை தாங்கியது இயக்குநர்கள் சங்கம். தன் செயற்குழு உறுப்பினர் பிரச்சினைக்காக ஃபெப்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஃபெப்சி அமைப்புக்கு தலைவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஒரு நடிகர்... என்ன வினோதம். ஃபெப்சி தொழிலாளர்களால் படம் இயக்கிய போது பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான ஆர்கே செல்வமணி ஃபெப்சி அமைமப்புக்காக பேச வேண்டிய நிர்பந்தம். தான் நாயகனாக நடித்த படங்களுக்கு தகுதிக்கு மீறி சம்பளம் வாங்கி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகமே ஃபெப்சி வேலை நிறுத்தம்.

ஃபெப்சி உறுப்பினர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என விஷால் அறிவித்தது அனைத்தும் கபட நாடகம் என்கின்றன கோடம்பாக்க சினிமா குருவிகள். படத்தின் தயாரிப்பு செலவு அதிகரிக்க, நஷ்டம் வர காரணம் ஃபெப்சி தொழிலாளர்களின் அதிகப்படியான சம்பளம் என்ற மாய தோற்றத்தை விஷால் தரப்பு உருவாக்க முயல்கிறது.

உண்மையான பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி என்கின்றனர் திரை விமர்சகர்கள். 150 கோடியில் தயாரிக்கப்படும் ஒரு தமிழ் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பளம், தங்குமிட மற்றும் உணவு போக்குவரத்து என அனைத்தும் சேர்த்து 100 நாட்களுக்கு 10 கோடிகூட ஆகாது. இது ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டில் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 60%க்கும் அதிகமாக உள்ளது. வியாபாரத்திற்கும் வசூலுக்கும் ஏற்ப சம்பளத்தை நிர்ணயிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்தாலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எந்த படமும் நஷ்டத்தை சந்திக்காது.

ஃபெப்சியில் அங்கம் வகிக்கும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்யக் கூடிய அடாவடித்தனங்களை முன் நிறுத்தி பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பது தவறு என்கிறது ஃபெப்சி வட்டாரம்.

இரு தரப்பும் இறங்கிவந்து பேச்சுவார்த்தை மூலம் ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பளத்தை மறு ஆய்வு செய்து வரையறை செய்ய வேண்டும். நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்களின் சம்பளங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் ஆசை.

- ஏகலைவன்

English summary
Fefsi Vs Producers Council issue has turned as a big issue in Kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil