For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோலிவுட் 2012: உதிர்ந்த நட்சத்திரங்கள்!

  By Shankar
  |

  ஆண்டு தோறும் புதிய நட்சத்திரங்கள் கோலிவுட்டுக்குள் வருவதுபோலவே, பல நட்சத்திரங்கள் மரணத்தைத் தழுவுவதும் நடக்கிறது.

  இதே தலைப்பில் வருடத்துக்கு ஒரு முறை இறந்த நட்சத்திரங்களைப் பட்டியலிடும் சடங்கும் தொடர்கிறது. இந்த ஆண்டு மரணத்தைத் தழுவிய திரையுலகக் கலைஞர்கள் எண்ணிக்கை 19.

  இவர்களில் தயாரிப்பாளர் கேஆர்ஜி, கதாசிரியர் பி கலைமணி, நடிகர் காகா ராதாகிருஷ்ணன் போன்றோர் முக்கியமானவர்கள்.

  இயக்குநர் மோகன், ஜனவரி 1

  இயக்குநர் மோகன், ஜனவரி 1

  அன்னக்கிளி, கவிக்குயில், ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களின் இரட்டை இயக்குநர்கள் தேவராஜ் - மோகன். இவர்களில் மோகன் கடந்த ஜனவரி முதல் தேதி மரணத்தைத் தழுவினார். அவருக்கு வயது 81.

  இடிச்சபுளி செல்வராஜ், ஜனவரி 30

  இடிச்சபுளி செல்வராஜ், ஜனவரி 30

  எம்ஜிஆர் காலத்திலிருந்து நடித்து வந்தவர். எங்க சின்ன ராசா, வேலைக்காரன், முத்து உள்பட ஏராளமான படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களைச் செய்தார். 73 வயதில் மரணமடைந்தார்.

  ஆர் என் கே பிரசாத், பிப்ரவரி 15

  ஆர் என் கே பிரசாத், பிப்ரவரி 15

  அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் இவர். 82 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

  எஸ்என் லட்சுமி, பிப்ரவரி 20

  எஸ்என் லட்சுமி, பிப்ரவரி 20

  தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகைகளுள் ஒருவர் எஸ்என் லட்சுமி. சர்வர் சுந்தரம், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன் என எக்கச்சக்க படங்கள். விருதுநகரைச் சேர்ந்து சுத்தத் தமிழச்சி. 85 வயதில் மரணமடைந்தார். தன் இறுதி மூச்சு வரை சின்னத் திரை, பெரிய திரை என அனைத்திலும் முத்திரை பதித்தவர் எஸ்என் லட்சுமி.

  முத்துராஜ், பிப்ரவரி 22

  முத்துராஜ், பிப்ரவரி 22

  மிக இளம் வயதில் இறந்து போன திறமையான நடிகர் இந்த முத்துராஜ். வாளமீனுக்கும்.. பாடலில்தான் பளிச்சென்று வெளியில் தெரிந்தார். அடுத்து களவாணி, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை போன்ற படங்களில் ஹீரோவின் நண்பர்களுள் ஒருவராக வந்தார். நகைச்சுவை வேடங்களில் பிரகாசித்த இந்த இளைஞர், திருமணமாகி சில தினங்களில் இறந்துவிட்டார். வயது 22.

  எம் சரோஜா, ஏப்ரல் 2

  எம் சரோஜா, ஏப்ரல் 2

  பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'டணால்' கே.ஏ. தங்கவேலுவின் மனைவி. தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகை எம். சரோஜா. 79 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். மயிலாடுதுறையைச் சேர்ந்த எம் சரோஜா 14 வயதில் நடிக்க வந்தார். மறைந்த இயக்குநர் கே சுப்பிரமணியம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த மறைந்த நடிகர் டணால் கே ஏ தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, காதலித்து மணந்தனர் (1958). அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தனர்.

  பி கலைமணி, ஏப்ரல் 3

  பி கலைமணி, ஏப்ரல் 3

  எண்பதுகளின் மிகச் சிறந்த சினிமா கதாசிரியர், வசனகர்த்தா. எவரெஸ் பிலிம்ஸ் பேனரில் பல படங்களைத் தயாரித்தவர். தெற்கத்திக் கள்ளன் படத்தில் விஜயகாந்தை இயக்கியவர். விஜயகாந்துக்கு ஒரு பேமிலி இமேஜை உருவாக்கித் தந்த பெருமை கலைமணியைச் சேரும். அதேபோல மனோபாலாவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைத் தந்தவர் கலைமணி. 62 வயதில் ஏப்ரல் 3-ம் தேதி மரணத்தைத் தழுவினார்.

  சண்முக சுந்தரி, மே 1

  சண்முக சுந்தரி, மே 1

  சண்முகசுந்தரியும் ஒரு அருமையான தமிழ் நடிகை. மதுரைக்காரர். பிரபல பாடகி டிகே கலாவின் தாயார். எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்தவர். 45 ஆண்டுகளில் 800 படங்களில் நடித்த சாதனை நடிகை. 75 வயதில் மரணமடைந்தார்.

  தாருணி சச்தேவ், மே 14

  தாருணி சச்தேவ், மே 14

  ரஸ்னா விளம்பரம் மூலம் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ். நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் அகாலமாக இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 13. அமிதாப்புடன் பா என்ற இந்திப் படத்திலும், வேறு சில தமிழ்ப் படங்களிலும் கூட நடித்திருந்தார். வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் ஒப்பந்தமாகியிருந்தார் தாருணி.

  திலீப், மே 25

  திலீப், மே 25

  வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். விசுவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர். 80களில் இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர் வேடங்களில் நடித்தவர். கிளிஞ்சல்கள், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை என ஏராளமான படங்களில் நடித்த திலீப் 52 வயதில் இறந்துபோனார்.

  காகா ராதாகிருஷ்ணன், ஜூன் 14

  காகா ராதாகிருஷ்ணன், ஜூன் 14

  எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து ரஜினி, கமல், விஜய் காலத்திலும் 86 வயதுவரை நடித்துக் கொண்டிருந்த மிகச் சிறந்த நடிகர். சொல்லப் போனால், சிவாஜி கணேசனை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரே இவர்தான். 600 படங்களுக்கு மேல் நடித்த காகா ராதாகிருஷ்ணனின் சமீப கால படங்கள், தேவர் மகன், காதலுக்கு மரியாதை, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்றவை. மாயி படத்தில் வடிவேலுவுடன் இவர் செய்த காமெடி எவர்கிரீன் என்றால் மிகையல்ல.

  கேஆர்ஜி, ஜூன் 19

  கேஆர்ஜி, ஜூன் 19

  கே ஆர் கங்காதரன் எனும் கேஆர்ஜி, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளர். ரஜினியின் ஜானி, துடிக்கும் கரங்கள் படங்களைத் தயாரித்தவர். 73 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

  என்னத்த கன்னையா, ஆகஸ்ட் 7

  என்னத்த கன்னையா, ஆகஸ்ட் 7

  வரூம் ஆனா வராது வசனம் மூலம் இளைஞர்கள் மத்தியிலும் புகழடைந்தவர் என்னத்த கன்னய்யா. எம்ஜிஆர் காலத்து நடிகர் இவர். முதல் படம் ஏழை படும் பாடு. 87 வயது வரை நடித்துக் கொண்டிருந்தவர். மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்.

  லூஸ் மோகன், செப்டம்பர் 16

  லூஸ் மோகன், செப்டம்பர் 16

  காமெடியில் தனக்கென தனி பாணியில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னைத் தமிழ் இவரது ஸ்பெஷல். எம்.ஜி.ஆர். காலம் தொட்டு நடித்து வந்த லூஸ் மோகன், கடைசி காலத்தில் பிள்ளைகளால் துன்பத்துக்கு ஆளாகி, சாப்பாடு கூட கிடைக்காத நிலையில் மரணமடைந்தார்.

  பெரிய கருப்புத் தேவர், செப்டம்பர் 18

  பெரிய கருப்புத் தேவர், செப்டம்பர் 18

  மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர். 300 படங்களில் நடித்தவர். மதுரை மாவட்டம் கருமாத்தூரைச் சேர்ந்த பெரியகருப்புத் தேவர், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் நடித்தவர். மண்ணின் கலைஞர். நல்ல பாடகரும்கூட. விருமாண்டி படத்தில் இரண்டு பாடல்களில் குரல் கொடுத்திருப்பார்.

  அஸ்வினி, செப்டம்பர் 23

  அஸ்வினி, செப்டம்பர் 23

  இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை இந்த அஸ்வினி. படம்: ஆனந்த கும்மி. அதன் பிறகு பார்த்திபன் நடித்த பொண்டாட்டி தேவையில் நாயகியாக நடித்தார். பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். அஸ்வினி பெரிய நடிகையாக இருந்தாலும், கடைசி காலத்தில் மிகுந்த சிரமத்துக்குள்ளானார். 36 வயதில் புற்றுநோய் பாதித்து இறந்த அவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லக் கூட காசில்லாமல் தவிக்கும் நிலை வந்தது. கடைசியில் நடிகர் பார்த்திபன் உதவி செய்தார்.

  திலீபன், அக்டோபர் 12

  திலீபன், அக்டோபர் 12

  அழகிய தீயே படத்தில் அறிமுகமான அருமையான நடிகர். கூத்துப்பட்டறைக் கலைஞர். செம்பட்டை படத்தில் ஹீரோவாக நடித்தார். 32 வயதில், வளர்ந்து வந்த நேரத்தில் மஞ்சள் காமாலை தாக்கி இறந்தார்.

  பிதுஷி தாஸ் பர்டே, அக்டோபர் 22

  பிதுஷி தாஸ் பர்டே, அக்டோபர் 22

  வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த மாடல் அழகி இவர். சென்னையைச் சேர்ந்தவர். 2006-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை அந்தேரியில் கணவருடன் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

  சுபா புடேலா, அக்டோபர் 22

  சுபா புடேலா, அக்டோபர் 22

  மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர். பஞ்சாபைச் சேர்ந்தவர். நல்ல நடிகை என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றவர். மஞ்சள் காமாலை நோய் முற்றி இறந்துபோனார். அவருக்கு வயது 21.

  கர்ணன், டிசம்பர் 13

  கர்ணன், டிசம்பர் 13

  காமிரா மேதை என வர்ணிக்கப்பட்ட திறமையான ஒளிப்பதிவாளர். பின்னாளில் வெற்றிகரமான இயக்குநராகவும் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தார். தமிழில் வெளியான பெரும்பாலான கவுபாய் படங்களின் இயக்குநரும் இவரே. வயது 79.

  English summary
  Here is the list of stars and technicians we lost in 2012 in Kollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X