KPY Bala: நாளைக்கே நான் இல்லைனாலும்.. காந்தி கண்ணாடி ஆடியோ லாஞ்சில் கண்ணீர் சிந்திய KPY பாலா!
சென்னை: KPY பாலா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள படம் காந்தி கண்ணாடி. இந்த படம் வரும் 5ஆம் தேதி அதாவது இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் KPY பாலா மிகவும் எமோஷனலான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், " நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அது தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை. இன்றைக்கு ராகவா லாரன்ஸ் சார் வர வேண்டியதாக இருந்தது. ஆனால் காஞ்சனா படத்தின் படப்பிடிப்பில் அவர் இருப்பதால் வரமுடியவில்லை. மேலும் படப்பிடிப்பில் அவருக்கு அடிபட்டுவிட்டது. அதனால் அவரால் வரமுடியவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை அவர் போன் செய்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர்தான் முதன் முதலில் என்னைப் பார்த்து உனக்கு என்ன ஆக வேண்டும் என்று தோன்றுகிறது என்று கேட்டார். நானோ கதாநாயகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்று கூறினேன். உடனே அவர் யாரிடமாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்.

தயாரிப்பாளர்: அது மட்டும் இல்லாமல், என்னை ஜிம்முக்கு அனுப்பி உடல்வாகுவை மாற்றச் சொன்னது அவர்தான். லாரன்ஸ் மாஸ்டருக்கு நன்றிகள். நான் இன்றைக்கு இந்த இடத்தில் நிற்க காரணமான தயாரிப்பாளருக்கு நன்றிகள். அவர் என்னை வைத்து படம் தயாரிக்கிறார் என்று தகவல் வெளியானதும், பலரும் அவரிடம் ஏன் இந்த பையனை வைத்து எடுக்குறீர்கள்? என்று கூறியுள்ளார்கள். அதற்கு அவரோ எனக்கு இந்த பணம் திரும்ப வருகிறதோ இல்லையோ. இந்த பணம் பாலாவுக்கு போகும்போது, அந்த பணத்தை அந்த பையன் பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவான். அதனால் எனது படத்திற்கு அந்த பையன் தான் கதாநாயகன் என்று கூறியுள்ளார். அவர் மட்டும் மனது வைக்கவில்லை என்றால் கட்டாயம் நான் கிடையாது.

நாளைக்கே ஏதாவது ஆனாலும்: இந்த நிகழ்ச்சிக்கு பணம் வாங்காமல் தொகுத்து வழங்க வந்த மணிமேகலை அக்காவுக்கு நன்றி. இது மட்டும் இல்லாமல் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. காந்தி கண்ணாடி படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்போது எனக்கு எப்படியான மனநிலை இருக்கிறது என்றால், நாளைக்கே எனக்கு ஏதாவது ஆனாலும்... (எமோஷனலாக பேசுகிறார்). அந்த அளவுக்கு சந்தோஷமாக உள்ளேன். இந்த படம் வெளியாகி நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் நான் ஸ்விக்கி ஓட்டினாலும் அந்த பணத்தை மக்களுக்காகத்தான் செலவு செய்வேன். காரைக்காலில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஜெகநாதன் என்பவரின் மகன், தையல்காரர் பூங்குழலி என்பவரின் மகன் இன்றைக்கு கதாநாயகனாக நிற்க காரணம் தமிழ்நாடு மக்கள் போட்ட பிச்சை தான் காரணம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி" என்று எமோஷனலாக பேசினார். அவர் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











