twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...! - குஷ்பு

    By Shankar
    |

    Kushboo
    ஈரோடு: அரசியல் வேறு சினிமா வேறு என்பதைப் புரிந்து கொள்ளாமல், தங்கள் படங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கெல்லாம் கருணாநிதிதான் காரணம் என்று கூறுகிறார்கள். மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், என்றார் நடிகை குஷ்பு.

    மேலும், கருணாநிதி ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்து உள்ளது. திரைப்படத் துறை நல்ல நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகை குஷ்பு கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தை முடித்து விட்டு வந்த அவர் கூறுகையில், "தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பல மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் மக்கள் காட்டும் அன்பும், வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நான் பேசும்போது, பல இடங்களிலும் தாய்மார்கள், கையெடுத்து கும்பிட்டு, மீண்டும் தமிழகத்தில் அந்த அம்மாவின் ஆட்சி வரக்கூடாது. தலைவர் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறி எங்கள் பிரசாரத்தை ஊக்கப்படுத்துகிறார்கள்.

    காரணம் தி.மு.க. செய்து இருக்கும் நன்மைகள் அந்த அளவுக்கு மக்களை சென்று சேர்ந்து இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் அடித்தட்டு மக்களிடம் முறையாக சென்று சேர்ந்து உள்ளது என்று ஐ.நா. சபையே சான்று அளித்து இருப்பது தி.மு.க. அரசுக்கு கிடைத்த பெருமை.

    கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் மாறி மாறி வந்த 2 கட்சி ஆட்சிகளையும் பார்த்து இருக்கிறேன். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்த்து வந்திருக்கிறேன். ஆட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால், தலைவர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்து உள்ளது.

    நல்ல நிலையில் சினிமாத் துறை...

    திரைப்படத்துறையை பொறுத்தவரை தி.மு.க. அரசு ஏராளமான உதவிகள் செய்து இருக்கிறது. தற்போது திரைப்படம் தயாரிக்கும் எந்த தயாரிப்பாளராவது, தி.மு.க. அரசை குறை கூற முடியுமா? நானும் திரைப்பட தயாரிப்பாளர்தான். திரைப்படங்களை குறை கூறவென்றே சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் திரைப்படங்களுக்கு பிரச்சினை.

    முதலில் அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நடிகர்களாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். ஒவ்வொரு தலைவரை பிடிக்கும். எனவே யாரும் யாருடனும் சேரக்கூடாது என்று கூற முடியாது.

    தி.மு.க.வில் சேர்ந்திருக்கும் நடிகர்-நடிகைகளை பார்த்தால், தி.மு.க.வின் கொள்கைகள், தலைவர் கலைஞரின் சிறப்பான வளர்ச்சி திட்டங்களால் கவரப்பட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அணியில் சேர்ந்து இருப்பவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இணைந்திருக்கிறார்கள். விஜயகாந்த் முதல் சிங்கமுத்துவரை அனைவரும் அப்படித்தான்.

    மீண்டும் முதல்வராவார் கலைஞர்...

    விஜயகாந்த் என்னுடைய நல்ல நண்பர். அவருடன் பல படங்களில் நடித்து உள்ளேன். அவருடைய எதிர் வீட்டிலேயே குடியிருந்தேன். எங்கள் குடும்பங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. ஆனால், அரசியல் களத்தில் எங்கள் கொள்கை வேறு. அவர் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர். அவரை பின்பற்றும் தொண்டர்கள், இளைய தலைமுறையினர் உள்ளனர். அப்படிப்பட்ட மதிப்பிற்கு உரிய இடத்தில் இருக்கும் அவர், பொது இடத்தில் வேட்பாளரை அடித்தது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

    தமிழ்நாட்டு மருமகள் கேட்கிறேன்...

    தற்போது தேர்தல் வருகிறது. இந்த தமிழ்நாட்டின் மருமகள் என்ற வகையில் நான் வாக்காளர்களை கேட்டுக்கொள்வது எல்லாம் ஓட்டளிப்பது என்பது நமக்கு கிடைத்து இருக்கும் பிறப்பு உரிமை. அந்த உரிமையை, ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றும்போதே, நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.

    யார் நமக்கு நல்லது செய்து இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் கருணாநிதி மீண்டும் 6-வது முறையாக முதல்வராகி, தமிழகத்தை மேலும் உன்னத நிலைக்குக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் வாக்களிக்க வேண்டும்", என்றார்.

    English summary
    Actress Kushboo urged film personalities to realize the good things happened in the last 5 years of Karunanidhi regime. She also requested the people not to support Jayalalitha's comeback in this election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X