»   »  பூஜையுடன் தொடங்கியது பாரதிராஜாவின் "குற்றப்பரம்பரை"

பூஜையுடன் தொடங்கியது பாரதிராஜாவின் "குற்றப்பரம்பரை"

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை திரைப்படம், மதுரை அருகே உள்ள பெருங்காமநல்லூரில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

குற்றப்பரம்பரை படத்தை யார் எடுப்பது என்பதில் இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா இடையே கடுமையான போட்டி நிலவிவந்தது.

இந்நிலையில் இன்று இப்படத்தை பூஜையுடன் தொடங்கி போட்டியில் முந்தியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜாவால் 1999ல் எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படம் குற்றப்பரம்பரை. சிவாஜி, சரத்குமாரை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து இப்படத்தை எடுக்க பாரதிராஜா திட்டமிட்டிருந்தார். ஆனால் சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இப்படம் இளையராஜாவின் ஒரு பாடலுடன் நின்று போனது.

குற்றப்பரம்பரை

குற்றப்பரம்பரை

தாரை தப்பட்டைக்குப் பின் 'குற்றப்பரம்பரை' படத்தை எடுக்க இயக்குநர் பாலா திட்டமிட்டு வந்தார்.மேலும் ஆர்யா, விஷால், ராணா, அதர்வா ஆகியோர் நடிப்பில், லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக இயக்குநரும், எழுத்தாளருமான ரத்னகுமார் பாலா குற்றப்பரம்பரையை படமாக்கினால் அவர்மீது வழக்குத் தொடருவேன் என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோதல்

இதனால் பாலா, பாரதிராஜா இடையே மறைமுகமான மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தை பூஜையுடன் இயக்குநர் பாரதிராஜா மதுரை அருகே உள்ள பெருங்காமநல்லூரில் இன்று தொடங்கியிருக்கிறார். இதில் சீமான், ஆர்.கே.செல்வமணி, கதிர், சுசீந்திரன், பாண்டிராஜ் போன்ற 30க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

முன்னதாக பெருங்காமநல்லூரில் உயிர்நீத்த 17 பேருக்கும் பாரதிராஜா மற்றும் அவருடன் சென்றவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. குற்றப்பரம்பரை படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இதன்மூலம் பாரதிராஜா- வைரமுத்து கூட்டணி நீண்ட ஆண்டுகள் கழித்து இப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரை குறித்த முழுமையான தகவல்களை பாரதிராஜா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குற்றப்பரம்பரை சட்டம்

குற்றப்பரம்பரை சட்டம்

பிரிட்டிஷார் நமது நாட்டை ஆண்டபோது, குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். கள்ளர், மறவர் என மொத்தம் 89 சமுதாய மக்களைக் குறி வைத்து இது கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அச்சமுதாயத்து ஆண்கள் காவல்நிலையத்தில் வந்து தினசரி இரவில் கைரேகை வைத்து அங்கேயே தங்க வேண்டும். கல்யாணம் ஆன ஆணுக்கும் அதே நிலை தான். இந்த சட்டம் 1911ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

 பெருங்காமநல்லூர் போராட்டம்

பெருங்காமநல்லூர் போராட்டம்

இந்த சமுதாயத்து மக்கள் காவல்துறையின் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். எங்கும் போக முடியாது. போவதாக இருந்தால் முன் அனுமதி பெற வேண்டும் என பெரும் கெடுபிடிகள் இருந்தன. இந்த நிலையில் மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

17 பேர் மரணம்

இதை அடக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயக்காள் என்ற பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் பலியானார்கள். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வு இது. இது மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் இந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்துள்ளன. நாடு விடுதலை அடைவதற்கு முன்பு அதாவது 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த உண்மை சம்பவத்தைத் தழுவியே குற்றப்பரம்பரை படத்தை பாரதிராஜா இயக்கவிருக்கிறார்.

English summary
Bharathi Raja's Kutra Parambarai Movie Pooja Held Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil