»   »  குற்றப் பரம்பரை கதையை பாலா படமாக்கக் கூடாது.. வழக்குப் போடுவேன்! - ரத்னகுமார்

குற்றப் பரம்பரை கதையை பாலா படமாக்கக் கூடாது.. வழக்குப் போடுவேன்! - ரத்னகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றப் பரம்பரை கதையைப் படமாக்க பாலாவுக்கு உரிமையில்லை. மீறிப் படமாக்கினால் வழக்குத் தொடர்வேன் என்று இயக்குநர் ரத்னகுமார் கூறியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் உள்ள 90 சாதி மக்களை குற்றப் பரம்பரையினர் என்று பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை 1911-ல் திணித்தனர். கோடிகணக்கான அப்பாவி மக்களை 'பிறவிக் குற்றவாளிகளாக' அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது இந்தச் சட்டம். மாலை 6 மணிக்குப் பிறகு இரவு நேரங்களில் இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கைரேகை பதிக்க வேண்டிய கொடுமைக்கு ஆளானார்கள் இந்த மக்கள்.

Kutra Paramparai story controversy

இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. குற்றப் பரம்பரை கதையை வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். அந்தக் கதையைத்தான் பாலா படமாக எடுக்கப் போகிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

ஆனால் தொன்னூறுகளின் பிற்பகுதியிலேயே குற்றம் பரம்பரை கதையை படமாக்க முனைந்தவர் பாரதிராஜா. அவருக்காக கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் குற்றப் பரம்பரை என்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கினார். பல்வேறு காரணங்களால் அந்தப் பட முயற்சி தள்ளித்தள்ளிப் போனது.

இப்போது பாலா இந்தக் கதையைப் படமாக்க ரத்னகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, கடல்பூக்கள், தமிழ் செல்வன், மணிகண்டா ஆகிய படங்களுக்கு நான் கதை-வசனம் எழுதி உள்ளேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், மற்றும் சேனாதிபதி, செங்காத்து பூமியிலே படங்களை இயக்கியுள்ளேன். 1997-ல் ‘குற்றப்பரம்பரை' படத்தின் கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.

இந்த கதையை படமாக்கும்படி பாரதிராஜாவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் சிவாஜி கணேசனை தந்தை வேடத்திலும் சரத்குமாரை மகன் வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை இயக்கத் தயாரானார். இளையராஜா இசையில் இந்த படத்துக்காக ஒரு பாடலும் தயாரானது. ஆனால் சிவாஜிகணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது பாரதிராஜா மீண்டும் அந்த படத்தை எடுக்க தயாராகி வந்த நிலையில், குற்றப் பரம்பரை படத்தை பாலா இயக்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாலாவை பாரதிராஜா தொடர்புகொண்டு தடுக்க முயற்சித்தும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திரையுலக முன்னோடி பாரதிராஜாவுக்கு பாலா துரோகம் செய்கிறார். ‘குற்றப்பரம்பரை' கதை என்னுடையது. நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்க கூடாது. மீறி இயக்கினால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்,'' என்றார்.

ஆனால் இந்தக் கதை முழுக்க தனக்கே சொந்தம் என்றும், பாலா இயக்கத்தில் படம் வருவது உறுதி என்றும் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

English summary
Writer and director Rathnakumar has strongly objected Bala to make a film on Kutra Paramparai story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil