கூலி கொடுத்த அடி..லோகேஷ் கனகராஜுக்கு நேரமே சரியில்லைபோல.. கைதி 2 படமும் ட்ராப்பா?.. என்ன நடக்குது?
சென்னை: லோகேஷ் கனக்ராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படம் படுமோசமான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்திருப்பதாக திரைத்துறையில் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க எப்போது அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் இரண்டு படங்களான மாநகரம், கைதி ஆகியவை அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தன. அதன் காரணமாக அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுக்கு படங்கள் செய்ய ஆரம்பித்தார். அதன்படி விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ; கமலை வைத்து விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் லியோவை தவிர்த்து மற்றவை நல்ல வரவேற்பை பெற்றன.
கூலி லோகேஷ் கனகராஜ்: எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் ஆசைப்படி இவரும் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். அந்த ஆசை கூலி திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. அப்படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா சௌபின் சாஹிர், சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருந்தார்கள். படமானது அண்மையில் வெளியானது. கோலிவுடில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் இது அமைந்திருந்தது.
மோசமான தோல்வி: எப்படியும் இந்த படத்தின் மூலம் ஒரு தமிழ் சினிமா ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற மைல் கல்லை எட்டும் என்ற நம்பிக்கையையும் ரசிகர்களும், திரைத்துறையினரும் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையவில்லை. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், மேக்கிங்கில் பிரச்னைகள் என அத்தனை ஏரியாக்களிலும் படம் பலத்த அடியை சந்தித்தது. இதனால் விமர்சன ரீதியாக படம் கழுவி கழுவி ஊற்றப்பட்டது. வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படி ரிசல்ட் அமையவில்லை.

கம்பேக் கொடுங்கள் லோகேஷ் கனகராஜ்: லோகேஷை இந்த படத்தில் கவனித்த ரசிகர்களோ பெரிய ஹீரோக்களுக்கு படம் செய்கிறேன் என்கிற பெயரில் தனக்குள் இருந்த நல்ல இயக்குநரை லோகேஷே கொன்றுவிட்டார்; அவர் எப்படியாவது கம்பேக் தர வேண்டும் பெரிய ஹீரோக்களுக்காக கதை செய்வதைவிட கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் இயக்கினால் கண்டிப்பாக கம்பேக் கொடுத்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள். லோகேஷும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.
கைதி 2 டிராப்பா?: இந்நிலையில் அப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தில் கதையில் சில மாற்றங்களை லோகேஷ் செய்ய நினைத்ததாகவும் அதற்கு ஹீரோ தரப்பு ஒத்துவரவில்லை என்பதால் இந்த படத்தை ட்ராப் செய்ய முடிவு செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பளத்தை லோகி கேட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள். இது லோகேஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அமீர்கானுடன் அவர் இணைய இருப்பதாக கூறப்பட்ட படமும் டிராப் ஆகிவிட்டதாக ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











