விக்ரம் படம் பார்க்க போறீங்களா...அதுக்கு முன்னால் இதை பண்ணுங்க...லோகேஷின் அட்வைஸ்
சென்னை : கமலின் விக்ரம் படத்தை பார்க்க ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வம், உற்சாகத்தில் உள்ளனர். இந்த சமயத்தில் விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன் இதை செய்யுங்கள் என அட்வைஸ் வழங்கி உள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் நாளை ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது.

லோகேஷ் போட்ட ட்வீட்
இந்த சமயத்தில் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், கமல் அருகே அடக்கமாக கையை கட்டிக் கொண்டு நிற்கும் போட்டோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, படம் பார்க்க போகும் ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றையும் வழங்கி உள்ளார். இதை பார்த்த சிலர், இதை எதற்காக செய்ய சொல்கிறார் என புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை
லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டில், இதுவரை பட வெளியீட்டிற்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே உலகநாயகன் ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவை போலிருக்கிறது.

கமலை கொண்டாட உழைத்தோம்
இதனை வெற்றிகரமாக நினைவேற்ற எனக்கு துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, உலகநாயகன் கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

ஒரு ரசிகனின் பரிசு
வாய்ப்புக்கு நன்றி சார். இந்த திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்.

விக்ரம் பார்ப்பதற்கு முன் இதை பண்ணுங்க
என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்க முடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். கைதியை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு தான் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

இல்லைன்னா படம் புரியாதா
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், நல்ல வேளை சொன்னீங்க. இப்போ தான் அந்த படத்தை பார்த்தோம். அப்ப கைதி படம் பார்க்காமல் வந்தால் விக்ரம் படம் புரியாதா லோகேஷ் ? கைதியில் கார்த்தி நடித்த தில்லி ரோலில் தான் சூர்யா நடித்திருக்கிறாரா. அப்போ விக்ரம் யாரு படத்தில். அப்படி கைதி படத்திற்கும் இந்த படத்திற்கும் தொடர்பு இருந்தால் தேவைப்பட்ட முக்கியமான சில காட்சிகளை மட்டும் ரீவைண்ட் ஆக ஒரு ஐந்து நிமிடம் விக்ரம் படம் தொடங்குவதற்கு முன் போட்டு காட்டினால் நன்றாக இருக்கும். என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











