விஜய் பட ப்ரொடியூசரிடம் லவ் டுடே தெலுங்கு வெர்ஷன்… அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய பிரதீப்?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்ற லவ் டுடே திரைப்படம் இப்போது தெலுங்கிலும் வெளியாகிறது.
மேலும், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் ரெடியாகிவிட்டது.

ரசிகர்களின் வரவேற்பில் லவ் டுடே
கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம், 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி, 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல் பிரதீப் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான லவ் டுடே படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் இதுவரை 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெலுங்கில் வெளியாகும் லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள லட் டுடே படத்தில், சத்யராஜ், ராதிகா, இவானா ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். 2கே கிட்ஸ்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை ஜாலியாக காட்டியுள்ளார் பிரதீப். இந்நிலையில், தமிழில் வெளியான லவ் டுடே படம் தெலுங்கிலும் ரிலீஸாகிறதாம். வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து தெலுங்கில் வெளியிடுகின்றன. இந்தப் படம் வரும் 18ம் தேதி தெலுங்கில் ரிலீஸாகிறது. இதனால், இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் பார்ப்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடுவதை பார்க்க முடிகிறது. ரசிகர்கள் கொண்டாடுவதை நான் திரையரங்க கதவின் ஓரத்தில் இருந்து பார்த்து வருகிறேன். நீங்கள் என்னை நேசிப்பதையும் என்மீது அக்கறை கொள்வதையும் ஆதரவளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

அடுத்த படத்துக்கு அட்வான்ஸ்
லவ் டுடே படத்தை தொடர்ந்து விஜய்யுடன் பிரதீப் ரங்கநாதன் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், விஜய்யின் படம் இயக்குவது குறித்து பேசியுள்ள பிரதீப் ரங்கநாதன், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. விஜய்க்கு கதை சொன்னது உண்மைதான், ஆனால், அது உடனடியாக படமாகுமா எனத் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதீப் இயக்கும் புதிய படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அதில், அவரே ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











