கமலுக்குப் போட்டியாக சம்பளத்தை உயர்த்திய ரஜினி… அடேங்கப்பா இத்தனை கோடியா? இதெல்லாம் நியாயமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கு ரஜினிக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்து கோலிவுட்டின் டைம்லைனில் வந்த நெல்சன், ஜெயிலர் படம் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மணிரத்னம்?
ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தலைவர் 170, தலைவர் 171 என இரண்டு படங்களுக்கான இயக்குநர்கள் குறித்தும் புதிய அப்டேட்கள் கிடைத்துள்ளன. அதன்படி, மணிரத்னம் ஒரு படத்தையும், சிபி சக்கரவர்த்தி அல்லது தேசிங்கு பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரஜினியும் மணிரத்னமும் மீண்டும் இணைந்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கூறிவ் வருகின்றனர்.

கமல் பாணியில் ரஜினி?
இந்நிலையில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான 'விக்ரம்' மெகா ஹிட் அடித்தது. அதேபோன்ற ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க ரஜினிக்கு ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப தேசிங்கு இயக்குநர் பெரியசாமியும் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கதை தேர்வில் கமலை ஃபாலோ செய்யும் ரஜினி, சம்பளத்திலும் கமலை பின்பற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கு கமலுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இத்தனை கோடியா?
இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்கு கமல் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். அதற்கு லைகா நிறுவனமும் ஓக்கே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இரண்டு படங்களுக்கும் சேர்த்து 250 கோடி சம்பளமும், ஜிஎஸ்டிக்கு என கூடுதலாக 50 கோடியும் பேசப்பட்டுள்ளதாம். இந்த அப்டேட் படி ரஜினிக்கு மொத்தம் 300 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. ரஜினியின் படங்கள் பெரிய அளவில் சக்ஸஸ் கொடுக்காத நிலையில், 300 கோடி சம்பளம் என்ற தகவல் இன்னும் பேசு பொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











