என்னோட ஆசை அதுமட்டும் தான் கதறி அழுத தந்தை.. ஆசையை நிறைவேற்றிய சினேகன்.. நாளை இறுதிச்சடங்கு!
சென்னை: பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 102. தந்தையின் மறைவு சினேகனின் குடும்பத்திற்கு பேரிடியாக இருக்கும் நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மனதிருப்தியில் சினேகன் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கிறார் சினேகன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்காரியப்பட்டி என்கிற கிராமத்தில் ஜூன் 23ம் தேதி 1978 ஆம் ஆண்டு பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த சினேகனுக்கு, ஆறு அண்ணனும் ஒரு அக்காளும் உள்ளனர். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட சினேகன், கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். இதையடுத்து, ராம்கி, சுவாதி நடித்த புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தில் மூலம் பாட ஆசிரியராக அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பிறகு மூன்றாண்டுகள் சினேகனுக்கு எந்த படவாய்ப்பும் அமையவில்லை.

பாடலாசிரியர் சினேகன்: மூன்று ஆண்டுகளுக்கு பின், பாண்டவர் பூமி திரைப்படத்திற்கு பாடல் எழுதினார். அந்த படம், அவருக்கு திருப்புமுனை திரைப்படமாகவே அமைந்தது. அந்த திரைப்படத்தில் வரும் தோழா தோழா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிசேகனை தமிழ் சினிமா கொண்டாடியது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். சாமி திரைப்படத்தில் வரும் 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா' என்ற பாடலின் ஆசிரியர் இவர்தான்.
தந்தையின் ஆசை: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த சினேகனின் தந்தை சிவசங்கு அனைவரிடத்திலும் என்னுடைய மகனுக்கு திருமணத்தை செய்து பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, ஆனால் இத்தனை ஆண்டு காலமாக அவன் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறான் என கண் கலங்கியபடி அனைவரிடத்திலும் பேசி இருந்தார். இதையடுத்து, சில ஆண்டுகள் கழித்து, கமலஹாசன் முன்னிலையில் சீரியல் நடிகை கன்னிகாவை சினேகன் திருமணம் செய்து கொண்டார். அப்போது சினேகனின் தந்தை சிவசங்கு, திருமணத்தை நடத்திக் கொடுத்த கமலுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருந்தார்.
நாளை இறுதிச்சடங்கு: கடந்த ஜனவரி மாதம் சினேகன், கன்னிகா தம்பதியர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைகளுக்கு சினேகன், காதல், கவிதை என அழகான தமிழ் பெயரை வைத்திருக்கிறார். இந்நிலையில் சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 102, அவரின் இறுதிச்சடங்கு நாளை காலை 11:00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புது காரியப்பட்டியில் நடைபெற இருப்பதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிபட்டுள்ளார். சினேகன் தனது மகனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படார். அவர் ஆசைப்பட்டபடி மகனின் திருமணத்தை பார்த்து, பேத்திகளை கொஞ்சி மகிழ்ந்து நிறைவேறான மரணத்தை தழுவி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











