For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்... நடிகனாக நேசத்துக்கு உரியவனானேன்-சத்யராஜ்

|

சென்னை: எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு உப்பு போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த உப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான் என்று நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். கடைசியாக கலந்து கொண்ட சினிமா விழா ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா என்றும் நினைவு கூர்ந்துள்ளார் சத்யராஜ்.

வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ் தனது திரை உலக பயணம், எம்ஜிஆர் உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

M.G.R is always mixed in my feelings and emotions-Sathyaraj

முதல் மரியாதை படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு கடலோரக் கவிதைகள் என்ற படத்தை எடுக்க இருந்தார்.

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், இரவுப்பூக்கள் என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப் படம்தான், நான் ஹீரோ ஆகிய பின் டூயட் பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு டூயட் கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு டான்ஸ் தெரியாதே என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா என்று கேட்டேன். அவர் நடனம் தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, மைசூர் போனால் டான்ஸ் காட்சி எடுக்காமல் விட்டு விடலாமா, என்று சிரித்தபடி கேட்டார்.

M.G.R is always mixed in my feelings and emotions-Sathyaraj

இந்தப்படத்தில் நண்பர் நிழல்கள் ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர் மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன, என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர் சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல் காட்சிக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.

எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. மலைக் கள்ளன், சிவகவி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில் தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார்.

M.G.R is always mixed in my feelings and emotions-Sathyaraj

நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன், என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு ஃபோன் செய்தார். ஏன் சார் சி.எம் வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே, என்றார்.

M.G.R is always mixed in my feelings and emotions-Sathyaraj

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார். மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் எப்படி என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் எப்படி என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த எப்படி வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன எப்படிக்கு அர்த்தம். நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா, என்கிற அர்த்தம்.

நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை சட்டென்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம், டேய் இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர் என்னிடம், உங்கம்மா எங்கே என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப் போனேன். அம்மாவை பார்த்து வணக்கம்மா என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

M.G.R is always mixed in my feelings and emotions-Sathyaraj

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

சிவாஜி சாருடன் நான் நடித்த ஜல்லிக்கட்டு பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்.

நான், வேணாங்க எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே. இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் என்றேன்.

நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா, என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் வேண்டாம் என்றேன். எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு என்றார், உறுதியான குரலில். அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும் என்றேன். நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

1987 டிசம்பர் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று வரவில்லை என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர், எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம் என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே, என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் ஃபைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல, என்றார்.

நான் என்ன பதில் சொல்வது, விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே என்றேன். அதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, நான் வரலைன்னா வருத்தப்படுவியா, என்று கேட்டார்.

வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே என்றேன். ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், உனக்காக வர்றேன், என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் எப்படி என்றார், உற்சாகமாக. அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த எப்படி என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். முத்தமா தர முடியாது. குத்துவேன் என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம் என்றார். இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர், கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5ஆம் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு உப்பு போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த உப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்கு உரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர் என்று சத்யராஜ் சொன்னபோது அவருடைய கண்கள் கலங்கி இருந்தன.

English summary
Attended the funeral of MGR and had the opportunity to saline his body. "I am the only actor who got this salty opportunity," said actor Sathyaraj
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more