பிரின்ஸ் தோல்விக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை… ரிலீஸ் அப்டேட்டுடன் மீண்டும் தொடங்கிய மாவீரன் ஷூட்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும் இயக்குநர் மடோன் அஷ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால், மாவீரன் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

மாவீரன் ஸ்பாட்டில் மோதல்
சிவகார்த்தியன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். 'மண்டேலா' படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஷ்வின் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஷ்வினுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றதாகவும் அதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

காரணம் என்ன?
சின்ன திரையில் இருந்து சினிமாவுலகில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன், இன்று முன்னணி நடிகர் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், சில வருடங்களாக அவரை ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் மோஸ்ட் நடிகர்களுடன் ஒப்பிட்டு பலரும் புகழ்பாடி வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் படங்கள் வசூலில் அதிக லாபம் தருவதாகவும் சொல்லப்பட்டது. அதன்படி, டாக்டர், டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பரான கலெக்ஷன் கொடுத்தது. ஆனால், தீபாவளிக்கு வெளியான 'பிரின்ஸ்' நெகட்டிவான விமர்சனங்களுடன் மோசமான தோல்வியை சந்தித்தது.

மாவீரனுக்கு சம்பந்தம் இல்லை
டாப் ஹீரோக்களுடன் சேர்த்து கொண்டாடப்பட்ட சிவகார்த்திகேயன், தீபாவளி ரேஸில் கார்த்திக்குடன் மோத முடியாமல் தடுமாறிவிட்டாரே என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். மேலும், சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஒரேமாதிரி படங்களில் நடித்து வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பிரின்ஸ் தோல்வி தான், மாவீரன் பட இயக்குநர் மடோன் அஷ்வினை அப்செட் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் தான் மாவீரன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அது வெறும் வதந்தி என தெரியவந்தது. இதனையடுத்து மாவீரன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் இன்றே தொடங்கியுள்ளனர்.

ரிலீஸ் தேதி உறுதி
மாவீரன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதோடு, விரைவில் மொத்தமாக முடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் பிளான் செய்துள்ளனராம். மேலும், அடுத்தாண்டு மார்ச் மாதம் படத்தை வெளியிடவும் நாள் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், மாவீரன் ஷூட்டிங் நிறுத்தம், சிவகார்த்திகேயன் - மடோன் அஷ்வின் இடையே மோதல் போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாவீரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்தியேன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











