»   »  மச்சக்காரன் திருட்டு விசிடி தயாரிப்பு- அடிதடி, தியேட்டர் மீது தாக்குதல், கார் உடைப்பு

மச்சக்காரன் திருட்டு விசிடி தயாரிப்பு- அடிதடி, தியேட்டர் மீது தாக்குதல், கார் உடைப்பு

Subscribe to Oneindia Tamil
Click here for more images
சென்னை: மச்சக்காரன் படத்தின் வெளிநாட்டு பிரிண்டை வைத்து சென்னையில் திருட்டு விசிடி தயாரிக்க முயற்சி நடந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் தரப்புக்கும் திருட்டு விசிடி கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில் தியேட்டரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கார்களும் சேதப்படுத்தப்பட்டன.

அதன் விவரம்:

ஜீவன்-காம்னா ஜேத்மலானி நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படம் மச்சக்காரன். நான் அவனில்லை வெற்றியைத் தொடர்ந்து ஜீவன் மிகவும் எதிர்பார்த்துக் காத்துள்ள படம் இது.

இந்தப் படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை சிரிப்பழகி நடிகை புகழ் நாக் ரவி வாங்கியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் இருந்து நேற்றிரவு 7 பிரிண்டுகளை வாங்கிக் கொண்டு, அதை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா செல்லும் விமானங்களில் அனுப்ப விமான நிலையம் கிளம்பினார் ரவி.

ஆனால், அதில் ஒரு பெட்டியை எப்படியோ திருப்பிக் கொண்டு வந்து தியாகராய நகரில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் திருட்டு விசிடி தயாரிப்பதாக தயாரிப்பாளருக்கு தகவல் வந்தது. இதையடுத்து டென்ஷனான தயாரிப்பாளர் நந்தகோபால், மச்சக்காரன் பட இயக்குனர் தமிழ்வாணன், உதவி டைரக்டர்கள் அந்த ப்ரிவியூ தியேட்டருக்கு விரைந்தனர்.

அங்கு இவர்களுக்கும் ப்ரிவியூ தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதமாக தொடங்கிய இந்த மோதல் அடிதடியாக மாறியது. தியேட்டர் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து உள்ளே புகுந்த தயாரிப்பாளர் தரப்பு தியேட்டரில் இருந்த மச்சக்காரன் படச்சுருளை கைப்பற்றினர்.

இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்த தயாரிப்பாளர் நந்தகோபால்
இதுகுறித்து புகார் கொடுத்தார்.

இது குறித்து இயக்குனர் தமிழ்வாணன் கூறுகையில்,

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் மச்சக்காரன் படத்தை திரையிட 7 பிரிண்டுகளை கொடுத்து அனுப்பினோம். அதை கொண்டு சென்ற விநியோகஸ்தர்களுடன் எங்கள் தரப்பில் இருந்து ஒரு ஆளையும் அனுப்பினோம்.

விமான நிலையம் போன அந்த பெட்டிகளில், எப்படியோ ஒரு பெட்டியை திருப்பிக் கொண்டு வந்துள்ளனர். அதை தியாகராய நகரில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் ஓட விட்டு திருட்டு விசிடி தயாரித்துள்ளனர் என்றார்.

நடிகர் ஜீவன் கூறுகையில்,

பல மாதம் கஷ்டப்பட்டு உழைத்து மச்சக்காரன் படத்தை எடுத்துள்ளோம். வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய பிரிண்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதிகமாக ஒரு பிரிண்ட் வேண்டும் என்று வினியோகஸ்தர் நாக் ரவி கேட்டு வாங்கியுள்ளார்.

ஆனால் 6 பிரிண்ட்கள் தான் விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு பிரிண்ட் விமான நிலையத்தில் இருந்து திரும்பி ப்ரிவியூ தியேட்டருக்கு வந்துள்ளது. அதை திரையில் போட்டு திருட்டு விசிடி எடுத்துள்ளனர். இது எங்கள் உழைப்பை சுரண்டுவதற்கு சமம். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Read more about: machakaran, vcd

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil