இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன்.. குழந்தையும் என்னுடையதுதான்.. ஒத்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்ற சூழலில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்றும்; ஜாய்க்கு பிறந்திருக்கும் குழந்தையும் என்னுடையதுதான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தன்னைவிட்டு அவர் விலகுவதாக உணர்ந்த பிறகுதான் அந்தத் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் கிரிஸில்டா. மேலும் தன்னை அவர் ஏமாற்ற பார்க்கிறார் என்றும்; குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருந்தார்.
நடைபெற்ற விசாரணை: புகார் கொடுத்த கையோடு தன்னுடன் ரங்கராஜ் பேசிய வீடியோ, இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக களமிறக்கிக்கொண்டே இருந்தார். முதலில் அமைதியாக இருந்த மாதம்பட்டியார் பிறகு நீண்ட விளக்கம் அளித்து சட்டப்படி இந்த விவகாரத்தை சந்திப்பேன் என்று ஓபனாக பேசியிருந்தார். இதனையடுத்து இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.

ஆண் குழந்தை பிறந்தது: இது ஒருபக்கம் இருக்க தனக்கு மாதா மாதம் ஆறரை லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு ரங்கராஜ் வழங்க வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. இதனால் அடுத்ததாக ரங்கராஜ் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் பலரிடமும் எழுந்திருந்தது.
ஒத்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை ரங்கராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார். அதாவது மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் விசாரணை அறிக்கையில், "ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை விசாரணையின்போது ஒத்துக்கொண்டார். கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையும் தன்னுடையதுதான் என்றும் ஒத்துக்கொண்டார்.
சட்ட விரோத குழந்தை கிடையாது: ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையை சட்ட விரோதமானது என்றோ முறைகேடானது என்றோ சொல்ல முடியாது. அந்தக் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பும் ரங்கராஜுக்கு உண்டு. குழந்தை தன்னுடையதுதான் என்று ஒத்துக்கொண்டதால் டிஎன்ஏ சோதனை போன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் தேவையில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறது. ரங்கராஜ் தற்போது ஒத்துக்கொண்டிருப்பதால் அடுத்ததாக அவர் என்ன மாதிரியான செயலில் இறங்கப்போகிறார்; மாதா மாதம் கிரிஸில்டா கொடுத்த பணத்தை கொடுத்துவிடுவாரா இல்லை அவருடன் சேர்ந்து வாழப்போகிறாரா போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். அதேசமயம் இப்போதாவது ஒத்துக்கொண்டாரே; குழந்தையை நல்லபடியாக வளர்க்க வாழ்த்தும் தெரிவித்துவருகிறார்கள். மேலும் மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்யலாம் என காவல் துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











