Madharaasi Day 6 Box Office: மதராஸி 6வது நாள் வசூல்.. 100 கோடி வசூல் சாத்தியமா? உலகளவில் எவ்வளவு?
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான மதராஸி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் ஓரளவு வசூல் மட்டுமே அள்ளியிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்தின் கூலி படத்துக்காக ஏகப்பட்ட மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், உடனடியாக மீண்டும் அதிக செலவு செய்து தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதை மக்கள் குறைத்துக் கொண்டார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மாவீரன் படத்துக்கு நல்ல டாக் வந்தும் படம் 100 கோடி வசூல் செய்யாமல் 80 கோடி ரூபாய் வசூலுடன் நின்றுவிட்ட நிலையில், அதே நிலைமை தான் மதராஸி படத்துக்கும் நேருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கு பல விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். கூலி படத்துக்கு குவிந்தது போல நெகட்டிவிட்டி மற்றும் ட்ரோல்கள் அதிகளவில் இந்த படத்துக்கு எழவில்லை. ஆனாலும், ரசிகர்கள் மதராஸி படத்தை பார்க்க முதல் 3 நாட்களில் காட்டிய ஆர்வத்தை அதன் பின்னர் வார நாட்களில் சுத்தமாக காட்டவில்லை. கல்யாணி பிரியதர்ஷன் படத்துக்கு நைட் ஷோ எல்லாம் அதிகரித்த நிலையில், முதல் தென்னிந்திய உமன் சென்ட்ரிக் படம் 202 கோடி சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. அந்தளவுக்கு மதராஸி படத்துக்கு அதிகளவில் மக்கள் வரவேற்பு கிடைக்காதது தான் பிரச்சனையே என்கின்றனர்.
ஷங்கர் முதல் ரஜினி வரை பாராட்டு மழை: மதராஸி படத்தின் வசூல் குறையத் தொடங்கிய நிலையில், மீண்டும் 2வது வாரத்தில் மக்களை தியேட்டர்களை நோக்கி ஈர்ப்பதற்காக பிரபலங்களை வைத்து பாராட்டு மழை பத்திரங்கள் சோஷியல் மீடியாவில் வாசிக்கப்படுவதாக ட்ரோல்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆரம்பத்திலேயே படத்தை பாராட்டிய நிலையில், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மதராஸி 6வது நாள் வசூல்: இந்தியளவில் மதராஸி திரைப்படம் புதன்கிழமையான நேற்று வெறும் 2.25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் வெளியான மதராஸி படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒட்டுமொத்தமாக 6 நாட்களில் இந்தியளவில் மதராஸி திரைப்படம் 46.75 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியிருப்பதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.
100 கோடி வசூல் சாத்தியமா?: உலகளவில் மதராஸி திரைப்படம் 76 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், 2 நாட்களில் 50 கோடி வசூல் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர், சன் பிக்சர்ஸ் போல அமைதியாகி விட்டது. பாக்ஸ் ஆபீஸ் நம்பர்களை சொல்வதை நிறுத்தி விட்டு மற்ற ப்ரோமோக்களை மட்டுமே வெளியிட்டு வரும் நிலையில், 100 கோடி வசூலை மதராஸி திரைப்படம் பெறுவது கொஞ்சம் கஷ்டம் தான் என்கின்றனர். இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 20 கோடி வசூலை ஈட்டினால் தான் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்கின்றனர். அதிகபட்சமாக 85 கோடி வரை வசூல் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











