இளையராஜா பாடல்களை பயன்படுத்த கூடாது.. அஜித் படத்துக்கு பறந்த இடைக்கால உத்தரவு!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான மூன்று பாடல்களான என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ மற்றும் ஒத்த ரூபாயும் தாரேன் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில் தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை படத்தில் பயன்படுத்தி விட்டதாக இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குட் பேட் அக்லி படம் அஜித்தின் 63வது படம். இந்த படத்தை அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். படத்தில் அஜித்தின் பல மாஸ் படங்களின் ரெஃபரன்ஸை வைத்து திரைக்கதை அமைத்து அஜித் ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க கமர்ஷியல் ட்ரீட் கொடுத்திருந்தார். இதற்கு முன்னர் வெளியான விடாமுயற்சி படத்தில் இருந்து மொத்தமாக இந்த படம் நேர் எதிராக மாறி இருந்ததால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இந்த படம் அஜித்திற்கு கொடுத்த வெற்றி மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து பணியாற்றும் எண்ணத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அவரது 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இடைக்காலத் தடை: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி வாங்காமல் பயன்படுத்தியது தொடர்பாக அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையின் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, " இளையராஜாவின் இசையில் உருவான மூன்று பாடல்களான என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ மற்றும் ஒத்த ரூபாயும் தாரேன் போன்ற பாடல்களை படத்தில் பயன்படுத்தக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் படம் தற்போது ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு இருப்பதால் , வழக்கு விசாரணை முடியும் வரை இந்த பாடல்கள் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனுமதி: இளையராஜாவிடம் அனுமதி வாங்கிவிட்டு அவரது பாடல்களை பயன்படுத்தினால் அவர் ராயல்டி தொகை எதுவும் வாங்காமல் அனுமதி கேட்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடன் பாடல்களை பயன்படுத்த இசைவு தெரிவித்து விடுகிறார். உதாரணத்திற்கு பல படங்களைக் குறிப்பிடலாம். லப்பர் பந்து படத்தில் ' நீ பொட்டு வெச்ச தங்ககுடம்' பாடல், மெய்யழகன் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கோடை கால காற்றே மற்றும் இந்த மான் உந்தன் சொந்த மான்' போன்ற பாடல்கள் அண்மையில் வெளியான ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோவில் பயன்படுத்தப்பட்ட 'கல்யாண மாலை' பாடலைக் குறிப்பிடலாம். இது போன்ற படக்குழுவினருக்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடுத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











