2026-ல் வாரிசு ஆட்சி.. போஸ்டர் போட்டு வம்பிழுக்கும் விஜய் ரசிகர்கள்.. மதுரையில் பரபரப்பு...
மதுரை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
விஜய் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணம், வாரிசு ஆட்சி என பல புதிர்களை போடும் இந்த போஸ்டர் இணையத்தை கலங்கடித்து வருகிறது.

வாரிசு பிஸியில் விஜய்
விஜய் தற்போது வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஐதராபாத், சென்னை என மாறி மாறி நடந்துவரும் வாரிசு ஷூட்டிங், விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள், புதிய போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ரிலீஸ் தேதி போன்றவைகளை முடிவு செய்வதில் படக்குழுவினருடன் தீவிரமாக டிஸ்கஷன் செய்து வருகிறார் விஜய். வாரிசு முடிந்ததும் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67'ல் நடிக்க தயாராக இருக்கிறார் விஜய். இந்நிலையில், அவரையே தலை சுற்ற வைத்துள்ளது ஒரு சம்பவம்.

அரசியலில் விஜய்
கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. தனியாக கட்சி தொடங்கவுள்ளார், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸில் இணைவார் என்றெல்லாம் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எதற்கும் ரியாக்ஷன் கொடுக்காமல் சைலண்டாகவே இருந்து வருகிறார் விஜய். ஆனாலும், அவ்வப்போது தனது படங்களில் இடம்பெறும் வசனங்களில் கொஞ்சம் அரசியல் பஞ்ச் வைத்து அவ்வப்போது கவனம் ஈர்த்து வருகிறார். அதேபோல், அவரது திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் குட்டி ஸ்டோரி அல்லது அரசியல் டச் கொடுத்து ரசிகர்களை வைப்ரேஷன் மோட்லேயே வைத்து வருகிறார். இந்நிலையில், மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர், இணையத்தை கலங்கடித்து வருகிறது.

எதுகை மோனையாக போஸ்டர்
மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், 2026ல் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும் என போஸ்டர் ஒட்டி, அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர், குறிப்பாக அந்த போஸ்டரில், "2021-ல் விடியல் ஆட்சியை பார்த்துவிட்டோம் மனமாக. 2026-ல் வாரிசு ஆட்சியை பார்க்கப்போகிறோம் தரமாக" என எதுகை மோனையில் அட்ராசிட்டி செய்துள்ளனர். இந்த போஸ்டர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சூசகமாகக் கூறியுள்ளனர் மதுரையன்ஸ். இந்த போஸ்டரின் பின்னணி குறித்து இதுவரை எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை.

நல்லாதான போய்கிட்டு இருக்கு
2021ல் நடைபெற்ற தழிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த தேர்தலில் விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கும் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது, யாரை வம்பிழுக்கும் முயற்சி எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











