»   »  பேச மட்டும் நான்.. பாட்டெழுத வேற கவிஞர்களா? - இசைஞானியிடம் கோபித்துக் கொண்ட கவிஞர்!!

பேச மட்டும் நான்.. பாட்டெழுத வேற கவிஞர்களா? - இசைஞானியிடம் கோபித்துக் கொண்ட கவிஞர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவிஞர்களோடு அன்பு பாராட்டுவதில் இசைஞானி எப்போதுமே ராஜாதி ராஜாவாக இருப்பார். அவரை எந்நேரமும் சந்தித்துப் பேசக்கூடிய உரிமை குறிப்பிட்ட சில கவிஞர்களுக்கு மட்டுமே உண்டு.

காவியக் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி மேல் வைத்திருந்த அன்பை அளவிட முடியாது. ஒரு முறை ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய அபிமான கவிஞர்களை அழைத்து விருந்து கொடுக்க முடிவு செய்தார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியில் வாலி, முத்துலிங்கம், புலமைபித்தன், பொன்னடியான், காமகோடியன், மு.மேத்தா, பூவை செங்குட்டுவன், பழநிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Maestro Ilaiyaraaja and Poets

அப்படி அவர்கள் சந்தித்துப்பேசும் போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும். பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வெளிவரும். சிலர் உரிமையோடு இளையராஜாவிடம் சண்டை போடவும் செய்வார்கள். அப்படி ஒரு சம்பவமும் நடந்தது.

ஒருநாள் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தினர் இசைஞானி பற்றிய நிகழ்ச்சிக்காக படம் பிடிக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்திருந்தனர். அப்போது இசைஞானியுடன் பாட்டெழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சில கவிஞர்களை அழைக்குமாறு என்னிடம் சொல்லியிருந்தார் ராஜா சார்.

நானும் அவர் குறிப்பிட்ட கவிஞர்களுக்கு விபரத்தைச் சொல்லி விட்டேன். அதில் ஒரு கவிஞர் மட்டும், 'நான் வரமாட்டேன்னு சொல்லிட்டதாக ராஜாவிடம் சொல்லிடு கண்ணன்,' என்று போனை வைத்து விட்டார். நான் மறுபடியும் தொடர்பு கொண்டு 'ஐயா நீங்க வர்றதா ஐயாகிட்ட சொல்லிட்டேனே'ன்னு தயங்கினேன். 'இல்லப்பா மேடை பேச்சுக்கு மட்டும் என்னைக் கூப்பிடுறார் பாட்டெழுத வேற கவிஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்குறார். அதனால் நான் வரலைனு சொல்லிடு,'ன்னு மறுபடியும் போனை கட் பண்ணிட்டார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியலை. மறுநாள் வந்திருந்த கவிஞர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி நிருபர்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த இசைஞானி, 'என்னய்யா அவர் வரவில்லையா', என்று அந்த கவிஞரின் பெயரை சொல்லிக் கேட்டார். நான்

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'ஏதோ வேலை இருக்கிறதாம்யா' என்று சொல்ல நினைத்து தடுமாற்றத்துடன் பேசினேன்.

'என்னய்யா தெளிவாச் சொல்லு' என்றார்.

இனி மறைத்துப் பலனில்லை என்று அந்த கவிஞர் சொன்னதை அப்படியே சொல்லி விட்டேன்.

அப்படியா என்பது போல தலையாட்டிக்கொண்ட இசைஞானி முகத்தில் மெல்லிய சிரிப்பு.

அன்று நல்லபடியாக அந்த நிகழ்ச்சிப் பதிவு நடந்து முடிந்தது.

அதற்கு மறுநாளே இசைஞானி அந்த கவிஞரை வரச் சொன்னார். நானும் அவருக்கு தகவல் சொல்லி விட்டு ஸ்டுடியோவில் காத்திருந்தேன். அப்போது ஒரு கன்னட படத்தின் பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.

கவிஞர் ராஜா சார் சந்திப்பு நடந்தது. இருவரும் ஆழ்ந்த அன்போடு ஒருவரை ஒருவர் வணங்கினார்கள். அவரை அமர வைத்துப் பேசிக்கொண்டிருந்தார் இசைஞானி. இடையில் 'கண்ணன் சொன்னான்...' என்று மீண்டும் சிரித்தார் ராஜா சார். கவிஞரும் சிரிக்க அந்த இடத்தை அன்பின் அலைகள் ஆக்கிரமித்திருந்தது.

இசைஞானி பேசினார், "இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டன. நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அந்த பாட்டுக்கு உங்க பெயரைப் பயன்படுத்திக்கிறேன்... நீங்க டைரக்டரைப் பார்த்துட்டுப் போங்க.. அடுத்த படத்துல பாத்துக்கலாம்..," என்றார்.

இசைஞானியை சந்தித்துப்பேசிய அந்த விநாடியில் நெகிழ்ச்சியாகவும் பாசத்தோடும் இருந்த கவிஞர் அங்கிருந்து வெளியே வந்தவுடன் கவிஞருக்கே உரிய கம்பீரத்துடன் வந்தார். வெளியே இயக்குநர் காத்துக்கொண்டிருந்தார்.

'சார் ராஜா சார் சொன்னாங்க இந்த பாட்டுக்கு உங்களுக்கு எவ்வளவு தரணும்,' என்றார்.

'முப்பதாயிரம் வேணும்' என்றதும் இயக்குநர் மெல்ல தயங்கியபடியே 'சார் பாதிபாட்டை ராஜா சார்தான் எழுதினார். அதனால தொகையில கொஞ்சம் குறைச்சிக்க முடியுமா...' என்று பணிவாகக் கேட்டார்.

உடனே கவிஞர், 'பாதிப் பாட்டை இல்லை...முழுபாட்டையும் ராஜாதான் எழுதினார். ஆனால் என் பெயரை பயன்படுத்துறீங்களே அதுக்குதான் முப்பதாயிரம்... நானே பாட்டு எழுதினேன்னா ஐம்பதாயிரம்,' என்று சம்யோசிதமாக போட்டுத் தாக்கினார்.

அந்த இயக்குநர் அப்படியே ஆடிப்போய் விட்டார்.

'ஐயா கவிஞர்களோடு பேசி ஜெயிக்க முடியாது.. நீங்க பெரிய கவிஞர் உங்க பெயரை என் படத்தில் பயன் படுத்த அனுமதிச்சதே என் பாக்கியம்தான். நான் மனசார இந்த தொகையை கொடுக்கிறேன்,'னு அவர் கேட்ட பணத்தை கொடுத்தார்!

-தேனி கண்ணன்

English summary
Here is an interesting incident happened between Maestro Ilaiyaraaja and a popular poet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil