பாட்டியை நினைத்து உருகிய மகள்… ஆறுதல் கூறி கண்ணீர் விட்ட மகேஷ்பாபு: ரசிகர்கள் உருக்கம்
ஐதராபாத்: பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திரா தேவி இன்று காலை காலமானர்.
இந்திரா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டியை நினைத்து உருகி மகேஷ்பாபு மகள் கண்ணீர் விட்டு அழுத காணொலி வைரலாகி வருகிறது.

மகேஷ் பாபுவின் தாயார் மறைவு
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் மனைவியும் என்பது குறிப்பிடத்தக்கது. 70 வயதான இந்திரா தேவியின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சில நாட்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்திரா தேவி. அவரது உடல்நலம் மிகவும் மோசமான நிலையில், சிறிது நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
இந்திராதேவியின் உடல் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டது. இதனையடுத்து மறைந்த இந்திராதேவியின் உடலுக்கு நடிகர்கள் நாகார்ஜூனா, சுகுமார், ராணா, மோகன்பாபு, பிரபாஸ் விஜய் தேவரகொண்டா, இசையமைப்பாளர் தமன்,, அல்லு அரவிந்த், இயக்குநர் கொரட்டலா சிவா, உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் கூறி சென்றனர்.

மகேஷ் பாபுவின் மகள் கண்ணீர்
மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவியின் உடல் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதனிடையே பாட்டி இந்திராதேவியின் உடலை பார்த்து மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தேம்பி தேம்பி அழுதார். அதனைப் பார்த்த மகேஷ் பாபு மகள் சித்தாராவை தனது மடியில் உக்கார வைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சினிமாவில் அறிமுகம்
மகேஷ் பாபுவின் நடிப்பில் கடைசியாக வெளியான சர்காரு வாரிப் பட்டா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். முதன்முதலாக இந்தப் பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமான சித்தாராவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாட்டி இறந்த துக்கத்தில் தேம்பி தேம்பி அழுதது மகேஷ்பாபுவின் ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











