தோழர்களே இது அரசியல் கூட்டம் இல்லை, பிறந்தநாள் கொண்டாட்டமும் கிடையாது… கமல் சொல்ல வர்றது என்னன்னா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கமலின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கமல், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற கலைஞனான கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல இடங்களிலும் கமல் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதேபோல், கமலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கும் கமல் நேரில் சென்று அவரது ரசிகர்களையும் கட்சியினரையும் சந்தித்தார். முன்னதாக அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில், மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சியினரை சந்தித்த கமல், அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் 68 மணிநேர தொடர் மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "பிறந்தநாள் தினத்தில் இங்கே வந்திருக்கும் செய்தியாளர்களுக்கும் எனது தோழர்களுக்கும் நன்றி. 68வது பிறந்தநாளில் என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கொளரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கவுரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன். பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும்" என்றார்.

நற்பணிகளே இலக்கு
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், "என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக் கொடுக்கிறேன் அவ்வளவு தான். சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அரசு தான் முன்வந்து சீர் செய்ய வேண்டும் என கிடையாது. நாமே அதை முன்வந்து சீர் செய்தாலும் அவை நற்பணி தான்" என்றார். மேலும், "அமெரிக்கா முதல் சின்ன குக்கிராமங்களில் கூட நற்பணிகளை எனது மைய தோழர்கள் செய்து வருகின்றனர். 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளனர்.. நாட்டிற்கு கழிப்பறையும் முக்கியம் தான், இடுகாடும் முக்கியம் தான், மருத்துவமனையும் முக்கியம் தான்" என பேசினார்.

அரசியல் கிடையாது
மேலும், "40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கட்சித் தோழர்களை தயார்செய்து வைத்துள்ளேன். என் பிறந்தநாளை ரசிகர்களும் தோழர்களும் நல்ல முறையில் கொண்டாடி வருகின்றனர். உங்களை என்னால் திருத்த முடியும். ஆனால், ஆளுநரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால் அதற்கு நாளாகும்" எனக் கூறினார். முன்னதாக கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்ட கமல், பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் சென்றுள்ளதால் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications