»   »  காலத்தின்மீது அழியாச்சுவடு பதித்த பாடகர் - மலேசியா வாசுதேவன் #MalaysiaVasudevan

காலத்தின்மீது அழியாச்சுவடு பதித்த பாடகர் - மலேசியா வாசுதேவன் #MalaysiaVasudevan

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த முத்தான முதல் வாய்ப்பு- வீடியோ

- கவிஞர் மகுடேசுவரன்

என் தந்தையார் தொண்ணூறு உரூபாய் திங்களூதியம் பெற்று வாழ்ந்தபோது ஐந்து பத்து என்று பணம் சேர்த்து விரும்பி வாங்கியவை மூன்று பொருள்கள். இராலி மிதிவண்டி, நெல்கோ வானொலி, ஒரு கைக்கடிகாரம். அப்போது எங்கள் வீட்டிலிருந்த இருபதாம் நூற்றாண்டின் நாகரிகக் கருவிகள் அவை. எல்லார் வீட்டிலும் பிலிப்ஸ் / மர்பி வானொலி இருக்கையில் அவர் அப்போதைய புது வரவான நெல்கோவைத் தேந்தெடுத்தார். அவ்வானொலிப் பெட்டியின் அன்றைய விலை அறுநூற்று ஐம்பது. ஒரு பவுன் தங்கம் நூற்றுக்குக் குறைவாக விற்ற காலம். எனில் ஒரு வானொலிப் பெட்டியின் விலை ஏழு பவுன் தங்கத்துக்கு நிகர். இன்றைய மதிப்பில் ஒன்றரை இலட்சம் உரூபாய். அந்த வானொலிப் பெட்டிக்கு ஒரு பதிவுச் சான்றிதழும் இருந்தது. நெல்கோ வானொலியில் செய்தி கேட்பது ஒன்றே எந்தையின் விருப்பம். அவர் பணிக்குச் சென்றதும் அது என் தாயாரின் திருகலுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும். கோவை, திருச்சி, இலங்கை வானொலி நிலையங்களைத் தொடர்ந்து ஒலிபரப்பிக்கொண்டிருக்கும். கோவை வானொலியின் காலை எட்டரை மணிப் பாடல்களின்போது பள்ளிக்குச் செல்வேன். 'கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ...?' என்று காலைப்பாடல் ஒலிக்கும். மாலையில் திரும்பி வரும்போது இலங்கை வானொலி 'வான் மேகங்களே... வாழ்த்துகள் பாடுங்கள்...' என்னும்.

பள்ளிச் சிறுவனாக நான் பாடல்களைக் கேட்கத் தொடங்கிய எண்பதுகளின் தொடக்கத்தில் சௌந்தரராஜனின் செல்வாக்கு குறைந்துவிட்டது. மலேசியா வாசுதேவனும் எஸ்பி பாலசுப்பிரமணியமும் எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கினர். இடையிடையே ஜேசுதாசும் ஜெயச்சந்திரனும் உண்டு என்றாலும் முன்னிருவரின் பாடல்கள் எண்ணற்றவை. 'ஆயிரம் நிலவே வா...' பாடலில் அறிமுகமான பாலசுப்பிரமணியம் எண்ணற்ற பாடல்களைப் பாடியிருந்தாலும் தமிழ்ப்பாடல்களில் அவருடைய தனித்த செல்வாக்கு உதயகீதம் படத்திற்குப் பிறகே தோன்றியது. பதினாறு வயதினிலே தொடங்கி முதல் மரியாதை வரைக்குமான இடைப்பட்ட பத்தாண்டுகளில் மலேசியா வாசுதேவனின் ஆதிக்கம்தான்.

Malaysia Vasudevan, the legendary singer

அன்றைக்கு ஒரு திரைப்படத்திற்குச் செல்வதற்கு அப்படத்தின் பாடல்களைக் கணக்கில் எடுப்போம். அப்படித்தான் கல்யாணராமன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. 'ஆகா வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்...' என்று எங்குப் பார்த்தாலும் ஒலித்தது. ஊர்ப்புறத்தின் ஓலைக்கொட்டகையில் மூன்று இடைவேளைகள் இரண்டு மின்வெட்டுகள் ஆகியவற்றுக்கிடையே ஓட்டப்பட்ட அந்தத் திரைப்படத்தை அரங்கு கொள்ளாத கூட்டத்தில் அமர்ந்து பார்த்தேன். முதற்பாடலின் அதே இசையொழுங்கில்,

'காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...
வாழ்வில் வசந்தம் தேடிவரும் ஓடிவரும்
தென்றல் வரும் பூங்கொடிகள் ஆடிவரும்"

-என்று தொடங்கியபோது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. என்ன ஒரு குரல்!

மலேசியா வாசுதேவன் சின்னச் சின்ன குணப்பாங்குகளில் நடிக்காமல், திரையில் தோன்றாமல் இருந்திருப்பார் எனில் "யார் அந்தக் காந்தர்வக் குரலோன் !" என்று இன்றைய தலைமுறை வலைவீசித் தேடிக்கொண்டிருந்திருக்கும். இதை நான் என் முகநூலில் நிலைக்கூற்றாக எழுதியபோது இணக்கமான பற்பல எதிர்வினைகள் வந்தன. அன்றைய இளநெஞ்சங்களின் கனவுகளுக்கு உணவானவை அவருடைய வெண்கலக் குரலில் ஒலித்த பாடல்கள். எழுபதுகளின் இறுதியையும் எண்பதுகளின் தொடக்கத்தையும் நினைவூட்டும் ஒரு காலகட்டத்தின் ஆண்குரல் அவருடையது.

மலேசியாவிலிருந்து ஒரு நடிகராக வேண்டும் என்ற வேட்கையுடன் தமிழ்நாட்டுக்கு வந்த வாசுதேவன் நாடகங்களில் நடித்ததோடு மெல்லிசைக் கச்சேரிகளில் பாடவும் தொடங்கினார். பதினாறு வயதினிலே பாடல் பதிவுக்குப் பாலசுப்பிரமணியம் வரமுடியாமல் போக, அவ்வாய்ப்பு வாசுதேவனுக்குக் கிடைத்தது. பாரதிராஜா, இளையராஜா, பாலு ஆகியோர் ஒருமைவிளித் தோழர்கள் என்றாலும் பாரதிராஜாவின் முதற்படத்தில் பாடும் வாய்ப்பு அவருடைய தெலுங்குப்பாடல் பதிவு நெருக்கடிகளால் பறிபோகிறது. மலேசியா வாசுதேவன் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடலைப் பாடுகிறார். அடுத்ததாய்ச் 'செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா...' பாடல். படமும் பாடல்களும் வரலாறு படைத்தன. மலேசியா வாசுதேவனின் குரல் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

அதற்கடுத்து கிழக்கே போகும் இரயிலில் 'கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ ?' சிகப்பு ரோஜாக்களில் 'இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது...', நிறம் மாறாத பூக்களில் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', புதிய வார்ப்புகளில் 'வான்மேகங்களே...' என்று தொடர்ந்து பாரதிராஜாவின் படங்களில் மலேசியா வாசுதேவனே பாடினார். பாரதிராஜா படத்தில் பாடுகின்ற வாய்ப்பைப் பதினாறு வயதினிலே படத்தில் தவறவிட்ட பாலு 'நிழல்கள்' படத்தில்தான் திரும்பப் பெற்றார். அதற்குள் மலேசியா வாசுதேவன் அவர்க்கு நிகரான பாடகராகிவிட்டார்.

'வா வா வசந்தமே... சுகந்தரும் சுகந்தமே...' என்னும் பாடலை அமைதியாகக் கேட்டுப் பாருங்கள். நம் எல்லாப் பதற்றங்களும் தணிந்துவிடும்.

'ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு... என் தெய்வம் தந்த என் தங்கை...' பாடலை ஓர் அண்ணனாகக் கேட்பதன் அருமை அண்ணன்களுக்கே தெரியும்.

'அடி ஆடு பூங்கொடியே... விளையாடு பூங்கொடியே...' பாடலைக் கேட்டால் மழலைச் செல்வங்கள்மீது கொள்ளை ஆசை வரும்.

'ஆழக்கடலில் தேடிய முத்து... ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு...' கேட்கையில் ஈன்றபொழுதின் பெரிதுவந்தது நினைவுக்கு வரும்.

காதல் வயப்பட்டிருக்கையில் 'காதல் வைபோகமே காணும் நன்னாளிதே...' கேட்டுவிட்டால் அன்றைக்கு முழுக்க அப்பாடலையே பாடவேண்டியிருக்கும்.

'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா... சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா...' பாடலைக் கேட்டால் காதுக்குள் குளிரும்.

'பனிவிழும் பூநிலவில் பாவைபோல் கண்வளர்ந்தாள்...' கேட்டதும் கண்செருகும்.

'கட்டி வெச்சுக்கோ என் தன் அன்பு மனசை...' என்றொரு பாட்டு இருக்கிறது. சிருங்காரப் பொருளில் அமைந்த அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலில் வழியும் மென்மையைத் தனியே துய்க்க வேண்டும்.

'பொதுவாக எம்மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' - நாயக அறிமுகப்பாடலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்றுவரைக்கும் படத்தொடக்கத்துக்கு அந்தப் பாட்டு அமைந்ததுபோல் இன்னொரு பாட்டு அமையவில்லை எனலாம்.

மலேசியா வாசுதேவனின் பன்முகப் பாடற்குரல் வெவ்வேறு வகைமைகளிலும் ஒலித்தது. பழைய பாகவதர் பாடுவது போன்று பாடிய 'ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே... அலைபாயுதே... மனம் ஏங்குதே.. ஆசைக்காதலிலே...' மறக்க முடியாத மாணிக்கம். படம் வெளிவராதபோதும் அந்தப் பாடல் காற்றில் நங்கூரமிட்டு நிலைத்துவிட்டது. 'மான்கள் தேடும் பூவை எவளோ... தேவி சகுந்தலையோ...' என்னும்போது இனங்காண முடியாத துயரம் நெஞ்சத்தை அழுத்தும். பிற்பாடு மலேசியா வாசுதேவனின் குரல் சிவாஜிக்குத் தோதாகப் போனதும் அடைந்த உயரம்தான் முதல் மரியாதையின் பாடல்கள். 'பூங்காத்து திரும்புமா ?' என்ற ஒரே பாடல் போதும். இனி மேற்கொண்டு எதையும் சொல்லும் தேவையில்லை.

இசையமைப்பாளர், நடிகர், மேடைக்கச்சேரி நடத்துநர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று திறமை காட்டிய மலேசியா வாசுதேவன் சொந்தப் படம் எடுத்தார். திருமகளை எண்ணத் தொடங்கினால் கலைமகள் கண்ணீரோடு வெளியேறுவாள். தொலைக்காட்சி நேர்காணலுக்கு வந்திருந்த மலேசியா வாசுதேவனை 'ஒரு தங்க ரதத்தில்...' பாடலைப் பாடும்படி நிகழ்ச்சியாளர் கோரினர். 'ஒரு தங்கா ரதத்தில் பொன்மஞ்சாள் நிலவு...' என்று மெட்டு மறந்தவராய், பழைய குரல் இழந்தவராய் ஏதோ ஒன்றைப் பாடினார். காலத்தின்மீது அழியாச்சுவடு பதித்த திறமையான பாடகனை அதே காலம் எப்படிப் பழிவாங்கிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். என் கண்கள் பனித்தன.

English summary
Poet Magudeswaran's nostalgia of late legendary singer Malaysia Vasudevan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil