»   »  மோகன்லால் மீது தவறில்லை... அவரை நான் ஆதரிக்கிறேன்! - மம்முட்டி

மோகன்லால் மீது தவறில்லை... அவரை நான் ஆதரிக்கிறேன்! - மம்முட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய மோகன் லால் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரை அவமானப்படுத்துவது தவறு. அவருக்கு என் முழு ஆதரவும் உண்டு என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.

Mammootty supports Mohan Lal

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் 'லாலிசம்' என்ற இசைக் குழுவின் நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.

ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக கேரள அரசிடமிருந்து வாங்கிய தொகையை மோகன்லால் திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்ததாக மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், "நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்" என்று தெரிவித்து கேரள அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய விளையாட்டு துவக்க விழாவில் 'லாலிசம்' குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த கடைசி நிமிடத்தில் அழைப்பு கிடைத்ததால் சில குறைகள் ஏற்பட்டதாக தனது ரசிகர்களுக்கு மோகன்லால் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை தொடர்கிறது.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலுக்கு ஆதரவாக நடிகர் மம்முட்டி தற்போது குரல் கொடுத்துள்ளார். கொச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்முட்டி, 'மோகன்லால் நமது கவுரவம். நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தார்.

அவர் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்காதீர்கள். மன அமைதியுடன் அவரது பணிகளை தொடர வழிவிடுங்கள். அவரது நடிப்புத் திறனை மதியுங்கள்.

அவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஆதரவு தாருங்கள். சக கலைஞன் என்ற வகையில் மோகன்லாலுக்கு எனது ஆதரவை வெளிப்படுத்துகிறேன்', என்றார்.

English summary
Actor Mammootty is extended his support to Mohan Lal in Lalisom concert issue.
Please Wait while comments are loading...