For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும்... ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டு பேச முடியாது!' - மணிவண்ணன்

  By Shankar
  |

  சென்னை: அமைதிப் படையின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல. இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம். இப்படிப் படம் எடுத்ததால் தாக்குதல் நடத்துவார்களோ என நான் பயப்படவில்லை. என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

  Manivannan

  ஐம்பதாவது படம்

  தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிப்பட இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது.

  இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.

  இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு. இதுவரை இப்படியொரு பேச்சைக் கேட்டதில்லை எனும் அளவுக்கு அரசியல் நையாண்டியும் உணர்ச்சிமயமானதாகவும் அமைந்தது அவரது பேச்சு.

  மணிவண்ணன் பேசியதாவது:

  "நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்...

  இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்...

  அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.

  ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.

  அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

  ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல, ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

  அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு!

  நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார்.

  யாருக்கும் பயப்படவில்லை

  அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை.

  அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.

  ஆனால்... மவனே... என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும்.

  50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்...

  சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம்.

  நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை!

  என்னைப் பத்தியும் ஏதாவது எழுதுங்கப்பா!

  இன்றைக்கு ஊடகங்கள் பெருகிவிட்டன. பல முகங்கள் எனக்குத் தெரியவே இல்லை. தினமும் பேப்பர்ல பேரு வரலேன்னா அரியல்வாதிகளுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது. அதிலும் அந்தக் கட்சிக்கு பெரிசாவும், இந்தக் கட்சிக்கு சின்னதாவும் செய்தி வந்தா அன்னிக்கு தூக்கமே போயிரும் அவங்களுக்கு.

  நாம அப்படியெல்லாம் கேக்கல. ஆனாலும் எதாவது எழுதுங்கப்பா... என்னைப் பத்தியும் ஏதாவது பிட்டு போடுங்க அப்பப்ப... என்ன.. என்னைப் பத்தி எதுவும் கிசுகிசு எழுதினா யாரும் நம்ப மாட்டாங்க...!

  -இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

  English summary
  Director Manivannan says that Amaithipadai 2 is purely a political movie, but not targetting anyone individually.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X