For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மங்காத்தா வெறும் படமல்ல…! தல ரசிகர்களின் இதயத்துடிப்பு!

  |

  சென்னை: தல அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது.

  அளவிட முடியாத ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் அஜித். சரோஜா, கோவா போன்ற கதையில் சிரத்தை இல்லாத படங்களை எடுத்துக் கொண்டிருந்த வெங்கட்பிரபு அஜித்தை இயக்குகிறார் என்றதும், பாராட்டியவர்களை விட அஜித்துக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என வெம்பியவர்களே அதிகம். படம் அறிவிக்கப்பட்டது முதல், ரிலீஸ் தேதி வரை என்ன நடக்குமோ என்ற படபடப்பை சுமந்தே காலம் தள்ளிக்கொண்டிருந்தனர் அஜித் ரசிகர்கள்.

   Mankatha 7th year celebration

  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனபோது ஒவ்வொரு அஜித் ரசிகனும் அடைந்த பேரானந்தத்தை என்னவென்று சொல்வது. தமிழ் சினிமா அதுவரை கண்டிராத மாஸ் வில்லனையும் ஹீரோவையும் ஒரே முகத்தில், தல அஜித்தின் உருவத்தில் காட்டியிருந்தார் வெங்கட்பிரபு. காலத்திற்கேற்ப சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கருத்துகளை மையப்படுத்தும். எப்போதுமே மனிதர்களின் தேவையாக இருக்கும் பணத்தை வைத்து வெங்கட்பிரபு ஆடிய ஆட்டம் மங்காத்தா.

  தல போட்டோவை காமிச்சாலே நாங்கள் பொங்கல் வச்சு கொண்டாடுவோம் என சொல்லும் ரசிகர்களுக்கு தல தீபாவளியே கொண்டாடும்படி படம் அமைந்தது. மென்மையான இதயம் கொண்ட சில ரசிகைகள் அஜித் ஏன் இப்படி வில்லனா நடிக்கிறாரு எனவும் நொந்து கொண்டனர். பணத்தை கொள்ளையடிக்க பிளான் போடுவது, காதலி த்ரிஷாவை காரிலிருந்து தள்ளிவிடுவது கூட்டாளிகளை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவது என எங்கு திரும்பினாலும், அஜித் என்ற மிகப்பெரிய பிம்பம் திரையை ஆக்கிரமித்திருந்தது.

  மங்காத்தா திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகே வியக்கும் பல சாதனைகள் புரிந்தது. அதற்கு முன்பு வரை ரஜினி, கமல், விஜய் என பெரிய நடிகர்களின் மைல்ஸ்டோன் படங்களான 50வது மற்றும் நூறாவது படங்கள் வெற்றி பெற்றதில்லை. விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மட்டுமே அந்த சாதனையைச் செய்திருந்தது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா அதை முறியடித்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தான் வசூல் என்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத தத்துவம். அந்த தத்துவத்தையும் மங்காத்தா தகர்த்தெரிந்து Extended Weekend என்ற புதிய கலாச்சாரத்தை அறிமுகம் செய்தது. அலுவலகங்களுக்கு லீவ் போட்டுவிட்டு புதன் கிழமை வரை பல திரையரங்குகளை ஹவுஸ்புல் ஆக்கினார்கள் தல ரசிகர்கள். ஐந்து ஆறு நாட்களுக்கு வசூல் வேட்டை நடத்திய முதல் படம் மங்காத்தா என மார்தட்டி சொல்லலாம். தமிழகத்தில் முதல்நாள் வசூல் மட்டுமே ரூ. 6.5 கோடியைத் தாண்டியது. இது எந்திரனுக்கு பிறகு அதிகமான வசூல் என சொல்லப்பட்டது.

  ஹீரோ என்றால் நல்லவன், தலை நரைத்திருக்கக் கூடாது, இளமையாக இருக்க வேண்டும், டூயட் பாட வேண்டும், கதாநாயகியை ஏமாற்றக் கூடாது, நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது என ஹீரோ என்பதற்கு தமிழ் சினிமாவில் இருந்த அனைத்து இமேஜ்களையும் சுக்கு நூறாக்கினார் அஜித். சால்ட் அன்ட் பெப்பர் லுக் ஹேர்ஸ்டைலின் பிராண்ட் அம்பாசிடர் என இன்றும் போற்றப்படுகிறார் அஜித்.

  இப்படத்தில் திரைக்கதை, நடிகர்களின் தேர்வு, லொகேஷன்ஸ், பாடல்கள், பின்னணி இசை, தீம் ம்யூசிக் என எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது. அஜித்துக்கு நிகரான பங்குதாரராக அர்ஜுன் நடித்தது அற்புதம். ஆக்‌ஷன் கிங்கும் தலயும் தோன்றும் காட்சிகளில் இருவருக்கும் சமமான வசனங்கள் வைத்தது மிக முக்கியமான விஷயம். அதில் லேசாக பிசிர் தட்டியிருந்தாலும் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கும். ராய் லட்சுமி, வைபவ், த்ரிஷா, ஜேபி, பிரேம்ஜி, மகத் என எல்லோருமே சிறப்பான பங்களிப்பு செய்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆன மங்காத்தா எப்போதுமே அவருக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும் படம். பிஜிஎம் கிங் என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா வெறித்தனம் செய்திருந்தார். டன் டன் டன்... டடன்டன்... என்று ஸ்லோவாக ஆரம்பித்து தீரம் எடுக்கும் அந்த பிஜிஎம்மை யாரால் மறக்க முடியும்?

  இப்படி மங்காத்தா வெறும் படம் அல்ல... அது தல ரசிகர்களின் இதயத்துடிப்பு என்பதற்கு இன்னும் எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் தல ரசிகர்களுக்கு மங்காத்தாவைக் கொண்டாட காரணங்கள் தேவை இல்லை. தல என்ற ஒற்றை வார்த்தைப் போதும்..! மங்காத்தாடா...!

  English summary
  Thala Ajith mass entertainer movie Mankatha is celebrating 7th year today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X