»   »  கற்பழிப்பு: 10 லட்சம் நஷ்டஈடு-மன்சூருக்கு உத்தரவு

கற்பழிப்பு: 10 லட்சம் நஷ்டஈடு-மன்சூருக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெண் உதவியாளரை கற்பழித்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேப்டன் பிரபாகரன் படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகியவர் மன்சூர் அலிகான். ஏராளமான படங்களில் வில்லனாகவும், காமெடி வில்லனாகவும் நடித்துள்ள அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

இவரிடம் சினேகா என்ற பெண் உதவியாளராக பணியாற்றினார். அப்போது தன்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஜூஸில் மயக்க மாத்திரையைக் கலந்து மயக்கி, தனது விருப்பமின்றி மன்சூர் அலிகான் உடலுறவு கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமடைந்ததாகவும், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மன்சூர் அலிகான் மறுத்து விட்டதாகவும் சினேகா போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் மன்சூர் அலிகான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தது.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒன்றரை வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

அபராதப் பணத்தை பாதிக்கப்பட்ட சினேகாவுக்கும், மன்சூர் மூலம் அவருக்குப் பிறந்த குழந்தைக்கும் வழங்க வேண்டும் எனவும் கடந்த 2001ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நீதிபதியின் தீர்ப்பில், சினேகாவுக்குப் பிறந்த குழந்தை தனது குழந்தைதான் என்று மன்சூர் அலிகான் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இது மரபணு சோதனை மூலமும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சினிமாவில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் நிஜ வாழ்விலும் வில்லனாக மாறி விட்டார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி மன்சூருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே மன்சூர் அலிகான் ரூ. 3 லட்சம் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதால், மேலும் ரூ. 7 லட்சம் பணத்தை 6 வாரத்திற்குள் மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை சினேகா மற்றும் அவரது குழந்தைக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினேகாவை கற்பழித்ததன் மூலம் மன்சூருக்குப் பிறந்த அந்தக் குழந்தைக்கு தற்போது 9 வயதாகிறது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil