வானத்தைப் போல மனம் படைத்த மன்சூர் அலிகான்.. கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 100 பவுன் நகை!
சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மொத்த தமிழ்நாடும் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்று கார்த்திகா, அதுவும் கண்ணகி நகர் கார்த்திகா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் இந்திய அணிக்காக களமிறங்கி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய வீராங்கனை கார்த்திகா. இவருக்கும் இவரை சரியாக வழிநடத்தி வரும் அவரது பயிற்சியாளர் ராஜிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள், பிரபலங்கள் , சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கும் அவரது பயிற்சியாளருக்கும் வாழ்த்துகளும் ஊக்கத் தொகையும் வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கண்ணகி நகர் கார்த்திகாவையும் அவரது பயிற்சியாளரையும் சந்தித்து ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தி உள்ளார். மேலும் கண்ணகி நகர் கார்த்திகாவின் ஆட்டத்தைப் பற்றி வாழ்த்தி பேசி அவரை மேலும் ஊக்குவித்தார். அதேபோல், ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக களமிறங்கி, தங்கம் வென்றால் கண்ணகி நகர் கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 பவுன் நகையை திருமணத்திற்கு பரிசாக அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இவரது இந்த உத்வேகத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இணையவாசிகள் பலரும் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்சூர் அலிகான் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

ஊக்கம்: ஏற்கனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பைசன் படத்தின் மொத்த குழுவினர் கண்ணகி நகர் கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்று அவரை வாழ்த்தினர். மேலும் பைசன் படக்குழுவின் சார்பாக ரூபாய் 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினர். தமிழ்நாடு அரசு தொடங்கி பல அரசியல் கட்சிகள், திரைப்பிரபலங்கள், பிரபலங்கள் என பலரும் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தனர்.
அரசியல் தெளிவு: தன்னை கண்ணகி நகர் கார்த்திகா என்று அடையாளப்படுத்திக் கொண்டதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்று மிகத் தெளிவான சிந்தனையுடன் பேசியவர் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா. தனது பெயருடன் தான் வசித்து வரும் இடத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லிக் கொள்ள முக்கிய காரணமே, தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலே வேலை கொடுக்க தயங்குகிறார்கள். கண்ணகி நகர் என்றாலே குற்றவாளிகளின் கூடாரம் என்று காவல்துறையினரே கருத்துருவாக்கத்தை உருவாக்குகிறார்கள்.

எதிர் காலத்தில்: கண்ணகி நகர் என்றால் அது கிடையாது என்பதை இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தோம், அதைச் செய்து காட்டியுள்ளோம். வரும் காலங்களிலும் கண்ணகி நகரில் இருந்து பல வீரர்களும் வீராங்கனைகளும் வருவார்கள். இனிமேல் அனைவரும் கண்ணகி நகர் என்று தைரியமாகவும் பெருமையாகவும் சொல்லுவார்கள் என்று தெரிவித்தார். இவரது இந்த தெளிவான பேச்சு மேலும் பல அரசியல் தலைவர்கள் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











