»   »  கமலை எதிர்ப்பது நியாயமா?

கமலை எதிர்ப்பது நியாயமா?

By Sudha
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டிடிஎச்சில் முதலில் திரையிடுவது தொடர்பான சர்ச்சை குறித்து நக்கீரன் இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை.

விஸ்வரூபம் படம் டி.டி.எச். மூலம் தொலைக்காட்சியில் பணம் செலுத்திப் பார்க்கும் வகையில் திரையிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்திருப்பது தியேட்டர் உரிமையாளர்களிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. படம் தியேட்டர்களில் வெளியாகும் தினத்தில் 8 மணி நேரத்திற்கு முன்பாக டிஷ் ஆன்டெனா வைத்திருப்பவர் 1000 ரூபாய் செலுத்திப் பார்க்கும் வகையில் டி.வி.யில் ஒரே ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும் என கமல் அறிவித்திருக்கிறார். இதற்கான ஒளிபரப்பு உரிமையை கமல் 50 கோடி ரூபாய்க்கு ஒரு டி.டி.எச். நிறுவனத்திற்கு விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதை எதிர்த்து விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச். முறையில் வெளியிட்டால், தியேட்டரில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

Kamal
டி.டி.எச்.சில் படங்களைத் திரையிடுவது ஒன்றும் புதிய முறையல்ல. வீடியோ ஆன் டிமாண்ட்என்ற முறையில் பணம் செலுத்தி டி.வி.யில் படம் பார்க்கும் முறை ஏற்கனவே பரவலாக இருக்கிறது. சில டி.டி.எச். நிறுவனங்களும், லோக்கல் டி.வி.க்களும் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் கேட்பவர்கள் வீட்டில் மட்டும் தெரியும்படி, ரூ. 25 தொடங்கி 100 வரை வாங்கிக்கொண்டு படங்களை ஒளிபரப்புகின்றன. பல இந்தி, ஆங்கிலப் படங்கள் ஏற்கனவே அவ்வாறு காட்டப்பட்டு வருகின்றன. படங்களின் புகழ், பழைய படமா புதுப் படமா என்பதைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும்.

2009-ல் மேயின் அவுர் மிஸஸ் கன்னா என்ற படத்தை தயாரித்த யூ.டி.வி. நிறுவனம் அது வெளியான 3 தினங்களில் டி.டி.எச்.சில் வெளியிட்டபோது அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தப் படம் தியேட்டர்களில் சரியான வரவேற்பைப் பெறாதபோதும் டி.டி.எச். ஒளிபரப்பில் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது. '"தேவ் டி'', "ராக் ஆன்', "ஸ்லம்டாக் மில்லினியர்', "காமினே''போன்ற பல படங்கள் வெளியான குறுகிய காலத்தில் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகி கணிசமான வருமானம் ஈட்டித் தந்தன.

மேற்கு நாடுகளில் ஏற்கனவே இந்தமுறை பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு படத்தை ஒரே நேரத்தில் தியேட்டர்கள், டி.டி.எச்., மற்றும் டி.வி.டி.க் களில் வெளியிடுகிறார்கள். எல்லாவற்றிற்குமே வேறு வேறு பார்வையாளர்கள் இருப்பதாலும் இவை ஒவ் வொன்றிலிருந்தும் தயாரிப்பாளர்களுக்கு உடனடியாகவும் நேரடியாகவும் வருமானம் கிடைப்பதாலும் 'பைரஸி' எனப்படும் திருட்டு டி.வி.டி. பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

அவ்வாறு அவர்கள் கவலைப்படாததற்குக் காரணம், இன்றைய தொழில் நுட்ப புரட்சி யுகத்தில் எந்த ஒன்றையும் தனிச் சொத்தாகப் பாதுகாக்க முடியாது என்பது தான். இணையமும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் எந்த ஒன்றும் சுலபமாக நகல் எடுக்கப்படுவதையும் உலகில் எந்த ஒரு மூலைக்குப் பரவுவதையும் எளிதாக்கிவிட்டன. இதைத் தடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதால்தான் அவற்றை முறைப்படுத்தி வருமானம் ஈட்ட அவர்கள் முயல்கிறார்கள்.

ஆனால் நமது தயாரிப்பாளர்கள் இதுபோன்ற மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. திருட்டு டி.வி.டி.யை போலீசை வைத்து தடுத்துவிடலாம் என்றெல்லாம் அவர்கள் நினைத்தார்கள். அவ்வப்போது பத்திரிகைகளில் அத்தகைய செய்திகள் வரும். ஏதாவது ஒரு இடத்தில் திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்படும்போது தமிழகம் முழுக்க எந்தத் தடையும் இன்றி விற்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஒரு தமிழ்ப் படம் வெளியான மூன்று நாளைக்குள் அதன் அதிகாரபூர்வமான ஒரிஜினல் டி.வி.டி. அதன் தயாரிப்பாளர்களாலேயே தமிழர்கள் வாழும் பிற நாடுகளில் வெளியாகிறது. அந்த டி.வி.டி. ஒரே நாளில் விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து உடனடியாகப் பல்லாயிரம் பிரதிகள் எடுக்கப்பட்டு தமிழகம் முழுக்கப் பரவிவிடும் சூழல் நேற்றுவரை இருந்தது. இன்று அதற்குக்கூட அவசியமில்லை. அந்தப் படங்கள் நேரடியாக இணையத்தில் ஏற்றப்பட்டு யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து பார்க்கக்கூடிய வகையில் கிடைக்கின்றன. அவற்றை அப்படியே சி.டி.யில் பதிவுசெய்து விற்கவும் செய்கிறார்கள்.

"துப்பாக்கி''படம் வெளியான நான்காவது நாள் அதன் ஒரிஜினல் டி.வி.டி. கிடைப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்படி யாரோ திருட்டுத்தனமாகப் பணம் சம்பாதிப்பதைவிட தயாரிப்பாளரே அதன் ஒரிஜினல் டி.வி.டி.யைப் பல இலட்சம் பிரதிகள் தயாரித்துக் குறைவான விலையில் சந்தையில் கிடைக்கச் செய்தால் திருட்டு டி.வி.டி. என்பதே ஒழிந்துவிடும். தயாரிப்பாளருக்கும் வருமானம் கிட்டும்.

இதே போன்றதுதான் டி.டி.எச்.சில் ஒளிபரப்புவதும். தொலைக்காட்சி வந்தபோது அது சினிமா தொழிலையே அழித்துவிடும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். ஆனால் இன்று தொலைக்காட்சி விளம்பரங்களையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் நம்பியே சினிமாத் துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. பல படங்களின் தொலைக்காட்சி உரிமம் போட்டி போட்டுக்கொண்டு பெருந்தொகைக்கு வாங்கப்படுகிறது.

இதன் அடுத்தகட்ட மாற்றம், புரட்சிதான் இந்த டி.டி. எச்.சில் படத்தை வெளிடுவது என்பது. ஏற்கனவே ஃபிலிமில் படத்தை எடுத்துப் பிரிண்ட் போட்டு தியேட்டர்களில் காட்டும் முறைக்குப் பதிலாக சாட்டிலைட் மூலம் நேரடியாக டிஜிட்டல் முறையில் திரையரங்குகளில் ஒளிபரப்பும் முறை வந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சிதான் இந்த டி.டி.எச். ஒளிபரப்பு முறை.

தியேட்டர்களை இதனால் இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும் என்று தியேட்டர் உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் நினைக்கின்றனர். ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும்போது பழைய ஊடகங்களிலிருந்து புதிய ஊடகங்கள் உருவாவது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. பல்லாயிரம் ஆண்டு மரபுள்ள நாடகக் கலையை ஒரே மூச்சில் அழித்துதானே சினிமா என்ற கலை உருவானது.

தங்களுடைய நலன்கள் குறித்து இவ்வளவு கவலைப்படும் தியேட்டர் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சினிமா தயாரிப்பில் நூற்றுக்கணக்கான கோடி களை இழந்து தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் ஏற்கனவே நிறைய தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. இருக்கும் தியேட்டர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன. சிறிய பட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் வராத சில இடைவெளியில்தான் அவசர அவசரமாக சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடப்படுகின்றன. சில தினங்கள் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டு அதோடு அந்தப் படங்கள் கொல்லப்பட்டு விடும்.

தமிழின் மிகச் சிறந்த படங்கள் என பாராட்டப்பட்ட படங்களுக்குக்கூட இந்த நிலைதான். அரசியல் நிர்ப்பந்தங்களாலும் சிண்டிகேட் முறையாலும் லாப வெறியாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அல்லது ஹீரோக்களின் படங்கள்தான் திரைக்கு வர முடியும் என்கிற அவலமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

அந்த வகையில் நமது திரைப்பட விநியோக அமைப்பு முழுக்க முழுக்க நேர்மையற்றதாகவும் ஜனநாயகத் தன்மையற்றதாகவும் மாறிவிட்டது. இதன் மூலம் ஏராளமான படங்கள் முடக்கப்பட்டு அந்தத் தொழிலே அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

டி.டி.எச்.முறையில் படங்களை வெளியிடுவது வெற்றி பெற்றால் தியேட்டர்கள் கிடைக்காமல் முடக்கப்படும் படங்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசமாக இருக்கும். அவை கணிசமாக வருமானம் ஈட்டும். தியேட்டர் முதலாளிகளின் கருணைக்காக அவை காத்திருக்க வேண்டியதில்லை. 50 ரூபாய் கட்டணத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை டி.டி.எச்.சில் வெளியிட்டால் பல இலட்சம் பேர் அதைப் பார்ப்பார்கள். தியேட்டர்களில் கிடைப்பதைவிட பல மடங்கு பணம் தயாரிப்பாளருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் டி.டி.எச். முறையில் காட்டப்படும் படங்கள் மூலம் விளம்பர வருவாய் அதிகரிக்கும். இது தயாரிப்பாளர் அதிக விலை பெறவும், பார்வையாளர்கள் இன்னும் குறைந்த விலைக்குப் படம் பார்க்கவும் வழி செய்யும்.

இன்று தியேட்டர்களில் சினிமா பார்ப்பது என்பது மத்தியதர குடும்பங்களுக்கு மிகப்பெரிய செலவாக மாறிவிட்டது. பெரிய ஹீரோக்களின் படங்களைப் பார்ப்பதற்குக் கள்ளச் சந்தையில் பல மடங்கு அதிக விலையில் பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுகிறது. போக்குவரத்து செலவு, தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள், பார்க்கிங் கட்டணம் என்று அதிகரிக்கும் இந்த செலவிற்குப் பயந்தே பலர் தியேட்டர்களுக்குச் செல்வதில்லை. அவர்கள் டி.டி.எச்.சில் பணம் செலுத்தி ஒரு புதிய படத்தைக் குடும்பத்தோடு பார்ப்பதன் வழியாகத் தயாரிப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கும்.

ஐ.பி.எல். போன்று இதைக் கிளப்புகளில் கூட்டமாகப் பார்ப்பார்கள் என்பது போன்ற வாதங்கள் அர்த்தமற்றவை. இன்று அதிநவீன ஒலி அமைப்புகள் கொண்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்த்துப் பழகியவர்கள் இதுபோல சினிமாவைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். மேலும் டி.வி.டி.யோ டி.வி.யோ எப்படி சினிமா தியேட்டருக்கு மாற்றாக ஆக முடியாதோ அப்படித்தான் டி.டி.எச்.சும் ஆக முடியாது.

கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகின் பழமைவாத போக்குகளோடு தொடர்ந்து போராடி வருபவர். அவர் மீதான விமர்சனங்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது. அந்த வகையில் சினிமா வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக அவர் எடுக்கும் ஒரு புதிய முயற்சியாகவே இதைக் கருதவேண்டும்.

ஆனால் தமிழ்த் திரையுலகினர் தொழில்நுட்ப ரீதியாக உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் புரட்சியைப் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். 'விஸ்வரூபம்' படம் 150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணத்தைத் திரும்ப எடுக்க ஒரு தயாரிப்பாளராக எல்லா உத்திகளையும் பயன்படுத்த கமல்ஹாசனுக்கு உரிமை இருக்கிறது.

டி.டி.எச். திரையிடல் வந்தால் தியேட்டர்களில் பாலாபிஷேம் செய்யும் ரசிகர்கள் தங்கள் சொந்த டி.வி.யில் அதைச் செய்வதில் எந்தத் தடையும் இல்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Writer Manushyaputhiran has expressed his views on Viswaroopam issue.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more