இன்பன் உதயநிதி ஹீரோவா?.. என்ன மாரி செல்வராஜ் பேக் அடிக்கிறாரு?.. ஓபனாக சொல்லிட்டாரே
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதுவரை மாரி இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட் என்பதால் கண்டிப்பாக இதுவும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து அவர் படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதுகுறித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. முக்கியமாக சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அவர் சாதிய ரீதியான படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
வன்மம்தான் எல்லாம்: ஆனால் இத்தனை வருடங்கள் தமிழ் சினிமாவில் சாதிய ரீதியான எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, வாழ்வியலை பேசும்போது மட்டும் இவர்கள் எதிர்ப்பதற்கு கிளம்பி வந்துவிடுகிறார்களே என்று மாரியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி.

நாளை ரிலீஸ்: இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ட்ரெய்லரை பார்க்கையில் பசுபதி பாண்டியன் வாழ்க்கை, அவரது கொலை உள்ளிட்டவற்றை தழுவிதான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும். கண்டிப்பாக இதுவும் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தப்போவது உறுதி என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படமானது நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
வெளியான தகவல்: இதற்கிடையே தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பன் உதயநிதியை மாரி செல்வராஜ் ஹீரோவாக அறிமுகம் செய்யவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட அதை உறுதிப்படுத்தும்வகையில்தான் பேசியிருந்தார். இன்பன் உதயநிதி இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரை நடிகராகவும் அறிமுகப்படுத்த உதயநிதி திட்டமிட்டிருந்ததாகவும்; தனது கடைசி படத்தை இயக்கிய மாரி செல்வராஜே மகனின் முதல் படத்தை இயக்க விருப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மாரி செல்வராஜ் பேட்டி: இந்நிலையில் செய்தியாளர்கள் இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு பதிலளித்த அவர், "இல்லை அது அதிகாரப்பூர்வமான செய்தி கிடையாது. உதயநிதி ஸ்டாலின் எனக்கு ரொம்ப நெருக்கம். அவருடன் பழகுவேன் பேசுவேன். அடிக்கடி சந்திப்போம். இன்பா இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு ஒரு கமிட்மென்ட் இருக்கிறது.
நினைத்தால் நடக்கும்: அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். அது பெரிய படம். அதை முடிப்பதற்கே கிட்டத்தட்ட ஒரு வருடத்திலிருந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிடும். இன்பநிதியை நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டால், எனக்கு நேரம் சரியாக இருந்தால், நான் சொல்லும் கதை அவர்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அது நடக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











