»   »  சினிமாக்காரர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு... ஆக்‌ஷனுக்கும் கட்டுக்கும் இடையே ஒரு போராட்டம்...!

சினிமாக்காரர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு... ஆக்‌ஷனுக்கும் கட்டுக்கும் இடையே ஒரு போராட்டம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தானாக ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து அறவழியிலும் அகிம்சையாகவும் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை பங்கு போட முயற்சித்ததில் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்றே காட்டிக்கொண்டனர் சினிமாக்காரர்கள்.

தனியாக போராடி காமெடி செய்துகொண்டாலும் இந்த ஒட்டுமொத்த இளைஞர்களின் எழுச்சியின் முழு கிரெடிட்டையும் எடுத்துக்கொள்ள முயன்றது ஹிப் ஹாப் தமிழா ஆதியும் சிம்புவும். ஆதி சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 'டக்கரு டக்கரு' என்ற ஆல்பத்தை வெளியிட்டவர். ஆனா சும்மால்ல.. ஹெவி பேமெண்டோடு. சிம்பு பொங்கலுக்கும் இரண்டு நாட்கள் முன்பு வீட்டுக்கு வெளியேயே போராடும் போராட்டத்தை தொடங்கி வைத்தவர். இவர்கள் தவிர ஆர்ஜே பாலாஜி சில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகை விழாவில் கிரண் பேடியையே ஜல்லிக்கட்டு விஷயத்தில் மடக்கி பேசி பாப்புலர் ஆகி இருந்தார். லாரன்ஸ் போராட்டம் துவங்கிய பின்னர் மெரினாவுக்கு வந்து உடன் இருந்து ஆதரவைத் தந்தவர்.

Marina fishermen in crisis: Where is Aadhi, Balaji, Lawrence?

த்ரிஷா

தமிழ்நாட்டில் நடிகைகளில் தன்னை அதிகம் விலங்கு நல ஆர்வலராக காட்டிக்கொள்வது த்ரிஷா மட்டும்தான். அவர் பீட்டாவுக்கு ஆதரவானவர் என தெரிய வர த்ரிஷாவை 'வச்சு செஞ்சாங்க' வலைவாசிகள். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை மார்ஃபிங் செய்து பரப்பிவிட்டனர். த்ரிஷா பொங்கி எழ அவருக்கு ஆதரவாக சில ஹீரோக்களும் பொங்கினார்கள். த்ரிஷாவுக்கு ஆதரவாக ட்விட்டிய கமல ஹாசனுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் போராடி காவல்துறையின் கைதுக்கு ஆளான இயக்குநர் கவுதமனை கண்ணுக்கு தெரியவில்லை.

உண்ணாவிரத போராட்டத்தில் த்ரிஷாவுக்கு மேடையிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முகத்தை மட்டும் தொங்கினாற்போல் வைத்துகொண்டார் த்ரிஷா. போகப்போக அஜித் உள்ளிட்ட நடிகர்களிடம் சிரித்து பேசினார். பேச வேண்டும் என்று சொன்னார். அவருக்கு மைக் வழங்கப்படவில்லை. இதுவரையிலும் கூட ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என்றுதான் சொல்கிறாரே தவிர நான் பீட்டாவில் இல்லை என்றோ பீட்டாவை எதிர்க்கிறேன் என்றோ சொல்லவில்லை. தமிழ் படங்களில் இனி த்ரிஷாவை பார்ப்பது சிரமம்தான்... த்ரிஷாவுக்கு தமிழ் சினிமாவை விட பீட்டா தான் முக்கியமாக இருக்கிறது போல...

விஷால்

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்ல இருக்கறதால இதை பத்தி நான் கருத்து சொல்ல விரும்பலை என்று விளக்கமளித்த விஷாலை பிடி பிடியென பிடித்துக்கொண்டார்கள் சமூக வலைதளவாசிகள்.

'அப்ப சரத்குமாரையும் ராதாரவியையும் நீங்க விமர்சிச்சப்ப கூடத்தான் அவங்க மேல அந்த வழக்கு கோர்ட்ல இருந்தது. தேர்தல்ல ஜெயிக்கறதுக்காக விமர்சிக்க தெரிஞ்ச உங்களுக்கு தமிழர்களோட பிரச்னைன்னா மட்டும் இளக்காரமா?' என்று சாட்டையடியாக விளாச, ஜல்லிக்கட்டை நானும் ஆதரிக்கிறேன் என்று பேட்டிகள் தட்டினார். அதோடு பிரதமரைச் சந்திக்கப் போறேன் என்று நானும் ரவுடி தான் என்று டெல்லிக்கு கிளம்பினார். ஆனால் பிரதமர் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. தம்பிதுரையையே பார்க்காத பிரதமர் விஷாலை மட்டும் எப்படிச் சந்திப்பார்? டெல்லியிலேயே தமிழர்கள் போராடிக்கொண்டிருந்த பகுதியில் போராட்டத்தில் குதிக்கலாம் என்று சென்றவரை அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. திரும்ப வந்து அறவழி மௌன போராட்டம் என்று ஒரு புது ஐட்டத்தை அறிவித்தார். போராட்டத்தில் பிரதமர் சந்திப்பு குறித்து கேட்டதற்கு அதான் முதல்வர் பார்த்துட்டார்ல? என்று கேள்வி கேட்டு முடித்துக்கொண்டார். போராட்டம் முடிந்த நிலையில் வன்முறைக்கு காரணம் மாணவர்கள் என்று விஷால் பேசியதாக ஒரு செய்தி பரவியது. அய்யய்யோ என்று அலறி ஒரு வீடியோ விளக்கம் தந்திருக்கிறார். விஷாலுக்கு மட்டும் ஒரு குரூப் தீயாய் வேலை பார்க்குது...

அஜித், விஜய்,சூர்யா, நயன் தாரா

ஜல்லிக்கட்டு விவகாரம் பற்றியெரிந்த நேரத்திலும் வழக்கம்போலவே அமைதி காத்தார் அஜித். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் வாய்ஸ் கொடுத்து விட ஒதுங்கிபோன அஜித்தை கூட்டிக்கொண்டு 'முட்டுச் சந்தில்' ஒதுங்கினார்கள் வலைவாசிகள். இதுவரை கண்டிராத கேட்டிராத வார்த்தைகளைப் பார்த்த அஜித்தின் மேனேஜர் அஜித்துக்கு தகவல் சொல்லி ஒரு அறிக்கை விடவைத்தார்.

விஜய், நயன்தாரா ஆகியோர் மாறுவேடத்தில் மெரினா வந்து கலந்துகொண்டனர். சூர்யா தனது சி 3 பட புரமோஷனுக்காகத் தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார் என்று பீட்டா நிர்வாகிகள் குற்றம் சாட்ட, கோபமான சூர்யா தனது வழக்கறிஞர் மூலம் நறுக்கென்று நான்கு கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

பிசுபிசுத்து போன நடிகர் சங்க போராட்டம்

ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் என்ற ஒன்றை அறிவித்தார் விஷால். கடுப்பான மானவர்கள் எங்க போராட்டத்தை இருட்டடிப்பு செய்ய பார்க்கிறீங்களா? என்று கேட்க என்ன பண்ணினாலும் அணை கட்டுறாங்களே... என்று வடிவேலு பாணிக்கு மாறினர் நடிகர்கள். பின்னர் போராட்டம் அறவழி மௌன போராட்டமானது. மீடியாவை கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு மீடியா நுழையாத அளவுக்கு பவுன்சர்களை நிறுத்தி வைத்துக் கொண்டார்கள். நிருபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் போராட்ட படங்களும் வீடியோக்களும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நடிகர் சங்கம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படியாக ஏசி போட்ட பூட்டிய அறைக்குள் துவங்கியது நடிகர்களின் உண்ணாவிரதம்.

உண்ணாவிரதத்துக்கு நடிகை என்ற முறையில் வந்த சிஆர்.சரஸ்வதியிடம் அதிமுக அரசு பற்றி கேள்வி கேட்க கடுப்பானார். அஜித் மனைவி ஷாலினியுடன் வந்து கலந்துகொண்டார். அவரை யாரும் நெருங்கி படம் எடுத்துக்கொள்ளவில்லை. இதையே போராட்டத்தின் வெற்றி போல பகிர்ந்துகொண்டனர் நடிகர்கள். ஷாலினி சில நிமிடங்களில் கிளம்பி விட, அஜித் முழுவதுமாக இருந்தார்.

நடிகர் சங்க தேர்தலுக்கே வராதவர் அஜித். அஜித்துக்கும் விஷாலுக்கும் ஆகாது என்று சொல்வார்கள். ஆனால் விஷாலை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார் அஜித். விஷாலுக்கு ஆகாத விஜய் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை. பீட்டா ஆதரவாளரான வரலெட்சுமி கறுப்பு உடையில் வந்தார். விஷாலுடன் பேசிக்கொள்ளவில்லை. அப்ப பிரேக் அப் உண்மை தானோ? பீட்டாவில் உறுப்பினராக இருக்கும் தமன்னா, எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.

ரஜினி

காலை 11 மணிக்கு வந்த ரஜினிகாந்த் இரண்டு மணி நேரத்தோடு போராட்டத்தை முடித்துக்கொண்டார். கமல் அரை மணி நேரத்தோடு கிளம்பி விட்டார். ஆபரேஷன் காரணமாக கால்வலி என்றார்கள். சிம்புவும் போராட்டத்தில் ஆப்சென்ட். காரணம் விஷாலுடனான மோதல்தான். தயாரிப்பாளர் சங்கம் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை.

துரோகிகளான நடிகர்கள்

இப்படி போராட்டத்துக்கு ஆதரவு என்று போஸ் கொடுத்தவர்கள் யாருமே போராட்ட முடிவு நாள் அன்று நடந்த தடியடி கலவரத்துக்கு எந்த வாய்ஸுமே தரவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்ததற்கு ஆதியின் வீடியோவும் ஒரு காரணம். போராட்டத்துக்குள் அன்னிய சக்திகள் நுழைந்ததாக முதலில் சொல்லி விலகியது ஆதி தான். பின்னர் அதையே லாரன்சும் பாலாஜியும் வழிமொழிந்தார்கள். விலகிய ஆதி முதல்வரைச் சந்திக்கிறார். சட்டசபையில் பார்வையாளராக அமர வைக்கவும் படுகிறார். ஆக, போராட்டத்தை பயன்படுத்தி பக்காவாக அரசியல் செய்துகொண்டனர் இந்த நடிகர்கள்.

செவ்வாய்க்கிழமை பிரஸ் மீட் வைத்த கமல் 'ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக இன்னும் முன்கூட்டியே போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். சென்னையில் ஏராளமான வாகனங்களுக்கு போலீசார் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும். எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது' என்று ஆதங்கப்பட்டார். நடிகர்களில் காவல்துறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் கமல் மட்டும் தான்... சபாஷ் நாயுடுவுக்கு என்னென்ன சிக்கல்கள் வருமோ...?

போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்களுக்கு உதவினார்கள் என்பதற்காகவே கடற்கரையை சுற்றியிருக்கும் சேரி மக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது காவல்துறை. இந்த ஆதி, பாலாஜி, லாரன்ஸ்லாம் இப்ப எங்கேப்பா போனீங்க?
ஆக மொத்தத்தில், 'ஆக்‌ஷனுக்கும்' 'கட்டுக்கும்' இடையே வசனம் பேசத்தான் லாயக்கு என்பதை நிரூபித்தனர் நடிகர்கள்.

- ஆர்.ஜி

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The social activists questioning actors Aadhi, Balaji, Lawrence, where they have gone when the police cruelly attacked Marina Fishermen.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more