For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்

  By Ka Magideswaran
  |

  சில திங்கள்களுக்கு முன்பு சேலம் வரைக்கும் ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. வழியில் ஆட்டையாம்பட்டி என்ற சிற்றூரில் இருந்த “பாலமுருகன்” என்னும் திரையரங்கு நினைவுக்கு வந்தது. அந்தத் திரையரங்கில் சில படங்களை அரங்கு கொள்ளாத கூட்டத்தோடு பார்த்திருக்கிறேன். எழு அல்லது எட்டாம் அகவையில் பார்த்த அத்திரைப்படங்களைப் பற்றிய நினைவுகள் இன்றும் மங்காமல் இருக்கின்றன. சேலத்துக்குச் சென்ற வேலையை முடித்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி சென்று அந்தத் திரையரங்கைப் பார்த்தபோது கண்ணீர் முட்டியது. இரவானால் மின்விளக்குச் சரங்கள் ஒளிர, நூற்றுக்கணக்கானோர் கூடி நின்ற அத்திரையரங்கம் இன்று பாழடைந்து கிடக்கிறது. அருகிலுள்ளோரை வினவியபோது “தியேட்டர மூடி பல வருசமாச்சுங்க… பாகம் பிரிக்கிறதுக்காக கேசு நடக்கறதாச் சொன்னாங்க…” என்றார்கள். தங்கமகன், முந்தானை முடிச்சு போன்ற படங்களை அதில்தான் பார்த்தேன். சுமன் நடித்த 'அவனுக்கு நிகர் அவனே’ என்றொரு மொழிமாற்றுப் படத்தையும் பார்த்த நினைவிருக்கிறது. இரண்டாம் ஆட்டமாக அரங்கு நிரம்பிய கூட்டத்தினரோடு “முந்தானை முடிச்சு” பார்த்த நாளை மறக்க முடியாது. “முந்தானை முடிச்சு” திரைப்படம் வெளியானபோது பார்த்தவர்களுடைய நினைவுகளை இன்றுள்ளவர்கள் எப்படி விளங்கிக்கொள்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.

  மறுபடியும் திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாக இறங்குவது என்று முடிவெடுத்ததும் ஏவிஎம் நிறுவனத்தினர் அணுகிய கலைஞர்கள் சிலர். கமல், இரஜினி ஆகிய முதல்நிலை நடிகர்களைக்கொண்டு பெரும்பொருட்செலவில் பொழுதுபோக்குப் படங்களை எடுப்பது. பாரதிராஜா, பாலசந்தர், பாக்கியராஜ் என முதல்நிலை இயக்குநர்களைக்கொண்டு நல்ல கதைப்படங்களை எடுப்பது. அவ்வாறு முடிவெடுத்தபின் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்கள் நடிகர்கள் வரிசையில் வெளிவந்தன. முந்தானை முடிச்சு, புதுமைப்பெண் ஆகிய படங்கள் இயக்குநர் வரிசையில் வெளிவந்தன.

  Mega Hit Movie Munthanai Mudichu

  தமக்குரிய பட வாய்ப்பினைப் பெற்ற காலத்தில் பாக்கியராஜுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கிறது. பாரதிராஜா படங்களில் பணியாற்றுகின்ற கலைஞர்களைத் தம் படங்களுக்குப் பணியாற்ற வைப்பதில் ஒரு கூச்சம். பாரதிராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார், நிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால் தம் படங்களுக்காகவும் அவர்களை அணுகுவது தமக்குத் தொழில் கற்றுத்தந்த ஆசானுக்குச் செய்யும் மரியாதை ஆகாது என்று கருதியிருக்கிறார். அதனாலே தம் படங்களுக்கு இரண்டாம் நிலையிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களை அணுகிப் பயன்படுத்தியிருக்கிறார். இசையமைப்பதற்குக் கங்கை அமரன், ஒளிப்பதிவுக்கு இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளர்கள் என்றே நாடியிருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தாலும் பாக்கியராஜுக்கு அமைந்த படமுதலாளிகளும் சிறு முதலீட்டாளர்களே. அந்நேரத்தில்தான் அவர்க்கு ஏவிஎம் நிறுவனத்தின் அழைப்பு வந்தது. செலவைப் பற்றி அஞ்சாமல் வேண்டியவாறு கதையாராய்ந்து திரைக்கதை அமைத்து அதை அப்படியே படமாக்கும் வாய்ப்பு. இரண்டாம் நிலைக் கலைஞர்கள் என்று இறுக்கிப் பிடிக்கமாட்டார்கள். அன்றைய தொழிற்றுறையில் முதலாமவர்கள் யாரோ அவர்களையே தம் படங்களில் பணியாற்றச் செய்வார்கள். அதன்படி இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு அசோக்குமார் என்று பாக்கியராஜுக்கு ஏவிஎம்மினால் பெருங்கலைஞர்கள் கிடைத்தார்கள். “முந்தனை முடிச்சு” படத்திற்கான கதை விவாதம் பெங்களூரு உயர்விடுதிகளில் நடந்ததாகவும், பாண்டியராஜன் இலிவிங்ஸ்டன் ஜிஎம் குமார் முதலான உதவியாளர்களுக்குக்கூட வானூர்திச் சீட்டு எடுக்கப்பட்டதாகவும் பாக்கியராஜ் கூறுகிறார்.

  திரைக்கதையாக்கத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாக்கியராஜ் முழுத் திரைக்கதையயும் படமுதலாளி சரவணனிடம் கூறியபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். “இப்படி ஓர் இயக்குநர் என்னிடம் கதை கூறியதே இல்லை. எப்படிச் சொன்னீர்களோ அப்படியே இந்தப் படத்தை எடுத்து முடியுங்கள்…” என்று சரவணன் ஒப்புதல் அளித்தாராம்.

  Mega Hit Movie Munthanai Mudichu

  யானைப்படையோடு போர்க்குச் செல்லும் அரசனைப்போல் முந்தானை முடிச்சு படப்பிடிப்புக்குப் பாக்கியராஜ் கிளம்பியிருப்பார் என்று கற்பனை செய்கிறேன். திரும்பிய பக்கமெல்லாம் நல்லறிகுறிகளாய்த் தோன்றியபோது அவர் அந்தப் படத்தை எடுத்தார். பெரிய நிறுவனத்தின் படத்தில் பாக்கியராஜ் என்பதால் எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பு மிகுந்தது. கோபியைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் படப்பிடிப்பை நடத்தினார். படத்தின் ஒரு காட்சியில் ஊராட்சிக்கோட்டை தென்படும். காவிரியில் தெளிந்த நீரோடும். கவுந்தப்பாடிக்கும் கொளப்பலூர்க்கும் இடையிலுள்ள காளிங்கராயன் கால்வாய்ப் பாசனம் பெறும் அழகிய ஊர்களான சிறுவலூரும் வெள்ளாங்கோவிலும் படத்தில் இடம்பெற்றன. என் இருப்பிடத்திலிருந்து எண்ணி நாற்பதாவது கிலோமீட்டரில் உள்ள சிற்றூர்கள் இவை. எப்போதாவது மனத்துக்கு அழுத்தம் கூடிவிட்டால் என் ஈருருளியை எடுத்துக்கொண்டு சிறுவலூர், வெள்ளாங்கோவில் வரைக்கும் சென்றுவிடுவேன். அங்குள்ள பச்சை வயல்களைக் கண்கொட்டாது கண்டு திரும்புவேன். மனமிருந்தால் கவுந்தப்பாடியைத் தாண்டி ஆப்பக்கூடல் செல்லும் வழியில் உள்ள பாலத்தடியே பவானி ஆற்றில் குளித்துவிட்டு மீளுவேன். அவ்வூர்களின் வழியே செல்கையில் அங்கே நடமாடும் ஒவ்வொருவரும் என் நினைவில் பதிந்துவிட்ட முற்பிறவிச் சொந்தங்களாகவே தோன்றுவர்.

  முந்தானை முடிச்சு வெளியான பிற்பாடு தமிழ்நாட்டு இல்லங்களில் ஆண் பெண் உறவு மதிப்பு மேம்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். பெண் எப்போதும் நம்பத் தகுந்தவள், உறவில் என்றும் மாறாத பற்றுறுதி கொண்டவள் என்பதை மக்கள் களத்தில் விளக்கிய படம் முந்தானை முடிச்சு. “உனக்கொரு குழந்தை பொறந்தாலும் இந்தக் குழந்தையை இதே மாதிரி பார்த்துக்குவியா ?” என்னும் கேள்விக்கு “நான் ஒன்னும் ஆஞ்சநேயர் இல்ல… உன்னையும் உன் பிள்ளையும் தவிர என் நெஞ்சுக்குள்ள யாரும் இல்லன்னு திறந்து காட்டறதுக்கு…” என்று பரிமளம் கண்ணீரோடு கூறியதை மறந்திருக்க முடியாது.

  Mega Hit Movie Munthanai Mudichu

  பாக்கியராஜினைப் பல்வேறு கதைக்களங்களில் மதிப்பிடுவதைவிட, கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை அவர் என்பதே சரியாக இருக்கும். மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு என்று அவர் எடுத்துக்கொண்ட படங்கள் அதற்குச் சான்று. சிறந்த திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியும் முன்பு காட்டப்பட்ட அனைத்துக் காட்சிகளின் தொடர்போடு அமைய வேண்டும். முந்தானை முடிச்சு திரைப்படம் அப்படித்தான் இருக்கும். முந்தானை முடிச்சு போன்ற வெகுமக்களுக்கான ஒரு படத்தை எடுக்கவல்ல இயக்குநர் ஒருவரைக்கூட இன்றைய தலைமுறையினரில் அடையாளங்காட்ட முடியவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.

  - கவிஞர் மகுடேசுவரன்

  English summary
  Cinem Article about AVMs Mega Hit movie Munthanai Mudichu
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X