twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாள்...எம்ஜிஆர் குறித்த 105 அரிய சுவாரஸ்ய தகவல்கள்...

    |

    எம்ஜிஆர் எனும் 3 எழுத்து மந்திரம் 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1977 ஆம் ஆண்டு அவரை திரையுலகிலும், 1960 முதல் 1987 ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் அரசியலிலும் மக்கள் மனதில் உச்சரிக்கும் மந்திரச்சொல்லாக இருந்தது. அரசியலிலும் திரையிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்ஜிஆர் ஜன 17 அன்று பிறந்தார். இன்று அவரது 105 வது பிறந்தநாள். அவரைப்பற்றிய 105 தகவல்கள் கீழே.

    Recommended Video

    MGR நடிப்பில் Animation படமாக உருவாகும் Ponniyin Selvan | Rewind Raja | Filmibeat Tamil

    என்ன பெரிய ஸ்குயிட் கேம்.. ஜல்லிக்கட்டு தெரியுமா? தில்லுக்கு துட்டு.. நாங்களாம் அப்பவே அப்படி!என்ன பெரிய ஸ்குயிட் கேம்.. ஜல்லிக்கட்டு தெரியுமா? தில்லுக்கு துட்டு.. நாங்களாம் அப்பவே அப்படி!

    எம்ஜிஆர் 105 சுவாரஸ்ய தகவல்

    எம்ஜிஆர் 105 சுவாரஸ்ய தகவல்

    1. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, 17 ஆம் ஆண்டு பிறந்தவர் எல்லாமே 7 வரும். அவர் நடித்த மொத்த படங்கள் 137, அதில் கதாநாயகனாக நடித்தது 115. கூட்டுத்தொகை 7.

    2. 7 என்கிற எண் அவருக்கு பிடித்த எண், கடைசியாக உபயோகப்படுத்திய டி.எம்.எக்ஸ் கார் எண் 4777 கூட்டுத்தொகை 25, 2+5=7
    3. அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டு 4-7-77, அவர் மறைந்த ஆண்டு 1987. அவர் வாழ்ந்த வருடங்கள் 70.
    4. எம்ஜிஆர் வாழ்நாளில் தன் பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை.
    5. பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாடுவார்.
    6. பொங்கலன்று ராமாவரம் தோட்டம் களைக்கட்டும். அனைவருடனும் பொங்கலை கொண்டாடுவதில் எம்ஜிஆருக்கு அலாதி ஆனந்தம்.
    7. எம்ஜிஆர் பொங்கலன்று புத்தாடையுடன் தனது மனைவி ஜானகியுடன் சென்று சின்னப்பா தேவரை சந்தித்து வணங்கி ஆசிர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
    8. எம்ஜிஆர் படமில்லாமல் இருந்த காலத்தில் தேவர் எடுத்த படங்கள் அவருக்கு ஸ்டார் அந்தஸ்த்தை தந்தது.
    9. புராண பட ஹீரோ என்பதை மாற்றி எம்ஜிஆரை வைத்து தாய்க்குப்பின் தாரம் படத்தை தேவர் முதன்முதலில் தயாரித்தது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
    10. தன் படங்களில் தனக்கு முக்கியத்துவம் உள்ளதுபோல் நலிந்த கலைஞர்கள் சிலருக்கு வருமானம் வரும்படி எம்ஜிஆர் பார்த்துக்கொள்வார்.

    ஷூட்டிங் கேன்சலானாலும் எளிவரை நினைத்துப் பார்த்த அன்புள்ளம்

    ஷூட்டிங் கேன்சலானாலும் எளிவரை நினைத்துப் பார்த்த அன்புள்ளம்

    11. தன் படம் ஷூட்டிங் கேன்சலானாலும் நைசாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து மூட் அவுட்போல் காண்பித்து தயாரிப்பாளரே அவர் வாயால் அண்ணே மறுநாள் எடுத்துக்கலாம்னு சொல்ல வைத்து செல்வாராம். செல்லும்போது எல்லோருக்கும் பேட்டா கொடுத்திருங்கன்னு சொல்லிவிட்டு செல்வாராம். மதியம் சாப்பாடும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டுச் செல்வாராம்.

    12. ஒரு படத்துக்காக நூற்றுக்கணக்கான உடைகளை பார்த்து தேவையில்லை என்றால் ஏற்கவே மாட்டாராம்.
    13. ஷூட்டிங்கில் கேமரா கோணத்தை கவனமாக பார்ப்பாராம். குறிப்பாக சண்டைக்காட்சியில் மிகக்கவனமாக கேமரா கோணத்தை எம்ஜிஆர் அமைப்பாராம். அதனால் தான் சண்டைக்காட்சிகள் புகழ்ப்பெற்றன.
    14. தொல்காப்பியம், புராண, இதிகாசங்களில் ஆழ்ந்த புரிதலுடைய எம்ஜிஆர் தீவிர வாசிப்புப் பழக்கமுடையவர். தத்துவ நூல்களில் மிகுந்த ஆர்வமுடையவர்.
    15. சீட்டாட்டம், கேரம், வேட்டையாடுதலிலும் எம்ஜிஆருக்கு ஆர்வம் இருந்துள்ளது.
    16. இசையை ரசிப்பதிலும் எம்ஜிஆர் வல்லவர். ராகங்களை அறிந்து ரசிப்பார்.
    17. தனது படங்களில் பெண்களை மதிப்பாக நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
    18. குழந்தைகளுக்கு எப்போதும் அறிவுரை சொல்வது, குழந்தைகளுக்காக அறிவுரைப்பாடல்கள் எம்ஜிஆர் படங்களில் வழக்கமாக இருக்கும்.
    19. சண்டைக்காட்சிகள் என்றால் எம்ஜிஆர், கத்திச் சண்டை போடுவதில் எம்ஜிஆர் வல்லவர். சிரித்துக்கொண்டே சண்டையிடுவது அவரது தனிபாணி.
    20. சிலம்பம், சுருள் கத்தி, மான்கொம்பு சண்டைகளும் அறிந்தவர். பல படங்களில் அதை பயன்படுத்தியிருப்பார். ரசிகர்கள் அதை பெரிதும் வரவேற்பார்கள்.
    21. வில்லன்களை கொடூரமாக தாக்குவது, தானாக வில்லன்களை தேடிச் சென்று தாக்குவது போன்றவை எப்போது எம்ஜிஆர் படத்தில் காட்சிகளாக இருக்காது.
    22. வில்லன்களை மதிப்புடன் நடத்துவது, கடைசியில் வில்லன்கள் திருந்துவது போன்ற காட்சிகள் கட்டாயம் இருக்கும்.
    23. கதாநாயகிகளுக்காக காதலைச் சொல்ல வாடும் காட்சிகளில் ஒருபோதும் எம்ஜிஆர் நடித்ததில்லை (அன்பேவா படம் தவிர)
    24.எம்.ஜி.ஆர் ஆரம்பகாலக்கட்டங்களில் எம்.ஜி.ராம்சந்தர் என தனது பெயரை வைத்திருந்தார். பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றினார். பின்னர் மக்களால் எம்ஜிஆர் என அழைக்கப்பட்டார்.
    25. அரசியல் மேடைகளில் இந்த ராமச்சந்திரன் என பெயரைக்குறிப்பிட்டு பேசுவது எம்ஜிஆர் வழக்கத்தில் ஒன்று.
    26. எம்.ஜி.ஆருக்கு முன் உள்ள எம்.ஜி. என்பது அவர் பிறந்த ஊரான மருதூர், தந்தையின் பெயரான கோபால் என்பதைச் சேர்த்து எம்.ஜி.ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டார்.

    இன்றும் கேட்பாரற்று இருக்கும் யானைக்கவுனி இல்லம்

    இன்றும் கேட்பாரற்று இருக்கும் யானைக்கவுனி இல்லம்

    27. எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு வந்தது 1932-ஆம் ஆண்டு. இங்கு வந்து வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும். அங்கிருந்து டிராம் வண்டி மூலம் மந்தைவெளிக்கு நாடகக் கம்பெனிக்கு வருவார். இன்றும் யானைக்கவுனியில் அந்த வீடு சிதிலமடைந்த நிலையில் உள்ளதை காணலாம்.

    28. 3 ஆம் வகுப்புவரை மட்டுமே எம்ஜிஆர் படித்துள்ளார். ஆனால் ஆங்கிலம் அறிந்தவர்.
    29. எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி. கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. இந்தப்படத்திற்கு எம்ஜிஆரை பலமாக சிபாரிசு செய்தவர் கருணாநிதி என்பார்கள். அவர் இந்தப்படத்தின் கதை-வசனகர்த்தா ஆவார்.
    30. மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதன் பின்எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார்.
    31. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் தனது சகோதரருடன் சேர்ந்து தனது நாடக வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
    32. அங்கு என்.எஸ்.கிருஷ்ணனும் இருந்துள்ளார். அவருடன் மல்யுத்தம் போட்டதை எல்லாம் தனது கட்டுரையில் எம்ஜிஆர் எழுதியிருப்பார்.
    33. எம்ஜிஆர் சிறப்பாக எழுதக்கூடியவர், வார இதழ் ஒன்றில் நான் ஏன் பிறந்தேன் என அவர் எழுதிய தொடர் பிரபலமானது. பாதியில் அது நின்றுப்போனது, அதன் பின்னர் வேறொரு தொடர் எழுத ஆரம்பித்து அதுவும் முற்றுப்பெறாமல் போனது.
    34. எம்ஜிஆர் நடித்த முதல் படம் - சதிலீலாவதி. வெளியான ஆண்டு 1936. 19 வயதில் அவர் ஏற்ற பாத்திரம் போலீஸ் அதிகாரி வேடம்.
    35. எம்ஜிஆர் வில்லனாக ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பெயர் பணக்காரி.
    36. எம்ஜிஆர் கத்திச் சண்டை போட்டு பிரபலமான படம் ஜெனோவா. அதில் உண்மையான கத்தியுடன் மோதும் சண்டைக்காட்சி பிரபலமான ஒன்று. அதன்பின்னர் எம்ஜிஆருக்கு ஏறுமுகம்தான். இப்படம் மலையாளத்திலும் வெளியானது.
    37. இந்திய திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்மஸ்ரீ உட்பட திரைத்துறை சார்ந்த 36 விருதுகள் எம்ஜிஆர் பெற்றுள்ளார். இதில் பாரத் அவார்டும் அடக்கம்.
    38. எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த காலத்தில் தாயார் சத்தியபாமா விருப்பத்தின்பேரில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். அவரும் நோயுற்று இறந்து விட்ட நிலையில் பின்னர் வி.என் .ஜானகியை மணந்தார். எம்ஜிஆருக்கு குழந்தைகள் இல்லை.
    39. எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன பல படங்கள் உள்ளன. அதில் பல படங்கள் பின்நாளில் சிவாஜி, ஜெய்ஷங்கர், ரஜினி உள்ளிட்டோர் நடித்தனர்.
    40. எம்ஜிஆர் பெரிதும் விரும்பி எடுக்க உத்தேசித்த படம் பொன்னியின் செல்வன். ஆனால் அது எடுக்கப்படாமலே போனது.
    41. சந்திரபாபு எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடிவீட்டு ஏழை. ஆனால் அப்படம் பாதியிலேயே நின்று போனது.

    1954-58 காலக்கட்டம்

    1954-58 காலக்கட்டம்

    42. தேவர் பிலிம்ஸ் எம்ஜிஆருக்காக உருவாக்கி வைத்திருந்த பல கதைகள் அவர் முதல்வரான பின் நடிப்பதை விட்டதால் ரஜினிகாந்தை வைத்து எடுக்கப்பட்டது.

    43. எம்ஜிஆர் வாழ்க்கையில் முக்கியமான காலக்கட்டம் என்றால் 1954 முதல் 1958 ஆம் ஆண்டு காலக்கட்டம் ஆகும். ஜெனோவா தொடங்கி மலைக்கள்ளன், கூண்டுக்கிளி, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம், சக்ரவர்த்தி திருமகள், ராஜராஜன், புதுமைப்பித்தன், மகாதேவி, நாடோடி மன்னன் போன்ற அற்புதமான படங்கள் அவருக்கு பெயர் வாங்கித்தந்தது.
    44. தனது சொந்தத்தயாரிப்பில் இருக்கும் பணத்தை எல்லாம் கொட்டி இருவேடங்களில் நடித்து நாடோடி மன்னன் என்கிற படத்தை எம்ஜிஆர் தயாரித்து இயக்கினார். சூப்பர் டூப்பர் வெற்றியை படம் பெற்றது.
    45. இக்காலக்கட்டத்தில் எம்ஜிஆருக்கு ஓடாத படம் கூண்டுக்கிளி(53 நாட்கள்) ராஜராஜன் (40 நாட்கள்) மட்டுமே. மற்றவை எல்லாம் 100 நாட்களை தாண்டி ஓடிய படங்கள் ஆகும்.
    46. மதுரை வீரன், மலைக்கள்ளன், தாய்க்குப்பின் தாரம், மகாதேவி போன்ற படங்கள் 150 நாட்களை கடந்தது. நாடோடி மன்னன் 200 நாட்கள் ஓடியது.
    47. எம்ஜிஆர் வாழ்நாளில் 3 படங்களை இயக்கியுள்ளார். 3 படங்களில் 2 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். (நாடோடி மன்னன் 200 நாள், உலகம் சுற்றும் வாலிபன் 300 நாள்) மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் 60 நாட்கள் ஓடியது. 3 படங்களை தயாரித்துள்ளார். அடிமைப்பெண் அதில் ஒன்று.
    48. எம்ஜிஆரை வைத்து அவரது அண்ணன் எம்ஜி.சக்ரபாணி ஒரே ஒரு படம் இயக்கினார். அந்தப்படம் அரசக்கட்டளை. அது 150 நாட்கள் ஓடியது.
    49. எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குநர்கள் ப.நீலகண்டன், எம்.ஏ.திருமுகம், டி.ஆர்.ராமண்ணா ஆகியோர்.
    50. எம்ஜிஆரை வைத்து சில படங்களை இயக்கியவர்கள் ஸ்ரீதர் (2 படம் இரண்டுமே பெரும் வெற்றிப்பெற்றன) டி.ஆர்.சுந்தரம், பி.ஆர்.பந்துலு,
    51. சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கிய ஏசி.திருலோகச்சந்தர் எம்ஜிஆரை வைத்து இயக்கிய ஒரே படம் அன்பே வா.
    52.சிவாஜியை வைத்து பல 'ப' வரிசை வெற்றிப் படங்களைத் தந்த ஏ.பீம்சிங் படத்தில் எம்ஜிஆர் நடித்ததே இல்லை.
    53. சிவாஜியை வைத்து பல இந்தி தழுவல் வெற்றிப்படங்களை தயாரித்த கே.பாலாஜியும் எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்தது இல்லை.

    எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த படமும், சிகரெட் பிடிக்கும் காட்சியும்

    எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த படமும், சிகரெட் பிடிக்கும் காட்சியும்

    54. எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அதில் ஒரு காட்சியில் எம்ஜிஆர் கையில் சிகரெட்டுடன் நடித்திருப்பார். பின்னர் அந்தக்காட்சியும் நீக்கப்பட்டது.

    55. திரைப்படங்களில் மது, புகைபிடிக்கும் காட்சியில் நடிக்காத ஒரே நடிகர் அன்றும் இன்றும் எம்ஜிஆர் மட்டுமே.
    56.1951-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் 'மக்கள் திலகம்' என்கிற பட்டத்தை வழங்கினார்.
    57. 1963-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் 'பொன்மனச் செம்மல்' என்கிற பட்டத்தை வழங்கினார்.
    58. திரைப்படங்களில் புரட்சி நடிகர் என்கிற பட்டத்தை கருணாநிதி எம்ஜிஆருக்கு வழங்கினார்.
    59. 1967-ஆம் ஆண்டு அண்ணா எம்ஜிஆரை குறிப்பிட்டு பேசிய 'இதயக்கனி' என்கிற வார்த்தை பிரபலமானது. அண்ணாவின் இதயக்கனி என பிரச்சாரத்தில் தொண்டர்கள் பயன்படுத்தினர். அதே பெயரில் எம்ஜிஆர் படமும் வெளியானது.
    60. 1972-ஆம் ஆண்டு கே.ஏ.கிருஷ்ணசாமியால் 'புரட்சித் தலைவர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதுவே பின்நாளில் நிலைத்தது.
    61. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. இந்தப்படம் ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.
    62. பாரிமுனையில் ஒரு இஸ்லாமியர் எம்ஜிஆருக்கு அளித்த வெள்ளைத்தொப்பியை அணிந்தார் எம்ஜிஆர். அதுவே பின்னர் அவரது அடையாளம் ஆனது.
    63. அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வது எம்ஜிஆரின் வழக்கம்.
    64. எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம் எளியவருக்கும், வரியவருக்கும் உதவும் இல்லமாக இருந்தது. வீட்டில் உலையை வைத்துவிட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு நம்பி போகலாம் என்பது சினிமா உலகில் பிரபலமான வார்த்தை. எம்ஜிஆரால் கல்வி உதவி பெற்ற பிரபலங்களுள் அமைச்சர் துரைமுருகனும் ஒருவர்.
    65. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக எம்ஜிஆர் இருந்துள்ளார். அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. கொடுத்துச் சிவந்த கரம் என்று எம்ஜிஆருக்கு பெயர் உண்டு.
    66. திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்ற காலத்திலும் தனக்கென நாடகக்குழுவை எம்ஜிஆர் வைத்திருந்தார்.
    67. சினிமாவில் ஏசுநாதர் உருவம் அழகாக பொருந்தியது என்றால் அது எம்ஜிஆருக்கு எனலாம். ஏசுவைப்பற்றி எம்ஜிஆர் நடித்து எடுக்கவிருந்த படம் பின்னர் கைவிடப்பட்டதாக சொல்வார்கள்.

    எம்ஜிஆரின் தனித்துவமிக்க குணம்

    எம்ஜிஆரின் தனித்துவமிக்க குணம்

    68. எம்ஜிஆரின் தனித்துவமான குணம் அவர் மற்றவர்கள் துன்பத்தை அவர்களது பார்வையிலிருந்து அணுகுவார் என்று சொல்வார்கள்.

    69. எம்ஜிஆர் படங்களில் அவர் இறப்பது போன்ற காட்சியை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள், அப்படி எடுக்கப்பட்ட பாசம் திரைப்படம் தோல்வியடைந்தது.
    70. எம்ஜிஆர் படத்தைப்பார்த்து ரசிகர்களாக மாறிய பலர் பின்னர் அதிமுகவில் இணைந்து அமைச்சர்களாகவும் ஆன வரலாறு உண்டு.
    71. கட்சிக்காரர்களை பாசத்துடன் நடத்துவது, பிணக்குகளை போக்குவதில் எம்,ஜிஆர் வல்லவர். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் எம்ஜிஆரிடம் இருக்கும்.
    72. எம்ஜிஆருக்கு படித்தவர்களை மிகவும் பிடிக்கும், அவர்களை மிகவும் மதிக்கவேண்டும் என நினைப்பார்.

    மனம் நெகிழ்ந்த 'சோ', எஸ்பிபிக்கு உதவிய எம்ஜிஆர்

    மனம் நெகிழ்ந்த 'சோ', எஸ்பிபிக்கு உதவிய எம்ஜிஆர்

    73. பத்திரிக்கையாளர் சோ எம்ஜிஆர் பற்றி பல அரசியல் விமர்சனங்களை வைத்தாலும், எம்ஜிஆரின் மனிதாபிமானத்தையும், அடிமைப்பெண் படத்தின்போது தனக்கு பர்சனலாக கிடைத்த அனுபவத்தையும் எப்போதும் அவர் சொல்வார்.

    74. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் பாடும் ஆயிரம் நிலவே வா பாடல். அவருக்கு அப்போது மகரக்கட்டு வந்து பாடமுடியாமல் போக எஸ்.பி.பிக்காக காத்திருந்து அந்தப்பாடலை பதிவு செய்ய வைத்தார் எம்ஜிஆர். அதை நெகிழ்ச்சியுடன் பலதடவை எஸ்பிபி குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினி காதலுக்கு உதவிய எம்ஜிஆர்

    ரஜினி காதலுக்கு உதவிய எம்ஜிஆர்

    75. நடிகர் ரஜினிகாந்துக்கு பெண் தர லதா வீட்டார் மறுத்தபோது அவர்கள் குடும்பத்தாருடன் பேசி ரஜினிகாந்த் நல்ல பையன் நம்பி பெண்ணைக்கொடுங்க என எம்ஜிஆர் பேசியதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    76. தமிழிசை சௌந்தரராஜன் கல்யாணத்தில் கருணாநிதி கலந்துக்கொள்வது தெரிந்தும் முதல்வர் எம்ஜிஆர் கலந்துக்கொண்டு இருவரும் நெடுநேரம் இருந்து வாழ்த்தியதை தமிழிசை சௌந்தரராஜன் பெருமையாக சொல்வார்.
    77. சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதியை மரியாதைக்குறைவாக பேசினால் அதை எம்ஜிஆர் அனுமதித்ததில்லை. ஒருமுறை அமைச்சர் குழந்தைவேலு தவறான தகவலை பதிவு செய்து சிக்கிக்கொள்ள கருணாநிதி அதை பெரிதாக்க முயன்றபோது சைகையால் எம்ஜிஆர் விட்டுவிடச்சொன்னதை ஏற்று விட்டுவிட்டதாக கருணாநிதி குறிப்பிட்டிருப்பார். இது இருவரின் நட்புக்கு உள்ள உதாரணம்.

    எனக்கு ஏழைகளின் பசிக்கொடுமை தெரியும்...மடக்கிய எம்ஜிஆர்

    எனக்கு ஏழைகளின் பசிக்கொடுமை தெரியும்...மடக்கிய எம்ஜிஆர்

    78. எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியாது என கருணாநிதி பேட்டி அளிக்க ஆமாம் தெரியாதுதான் ஆனால் பொருளாதாரம் தெரிந்தவர்கள் எல்லாம் அறியாத ஒன்று எனக்குத்தெரியும் அது பசிக்கொடுமை என எம்ஜிஆர் பேசினார். இது அவரது பேச்சுத்திறனுக்குச் சான்று.

    79. எம்ஜிஆர் பொதுக்கூட்டத்துக்கு போகும்போது யாராவது தொப்பி, கண்ணாடி என கேட்டால் கொடுத்துவிடுவார் என்று அவரது மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கார். சில நேரம் கையில் கட்டியுள்ள வாட்சைக்கூட கழற்றிக் கொடுத்துள்ளார்.
    80. எம்ஜிஆர் திரைப்படம் நடிக்கும் காலத்தில் பல விபத்துகளை சந்தித்துள்ளார். அதில் முக்கியமானது நாடக மேடையில் நடிகர் குண்டுமணியை தூக்கி போடும்போது கால் உடைந்தது. அதன் பின்னர் எம்ஜிஆரால் நடக்கவே முடியாது என்று பலரும் சொன்ன நிலையில் வெற்றிகரமாக நடித்தார்.

    மனத்துணிவுக்கு பெயர்போன எம்ஜிஆர்

    மனத்துணிவுக்கு பெயர்போன எம்ஜிஆர்

    81. மனத்துணிவு என்றால் எம்ஜிஆரை உதாரணமாக சொல்லலாம். 1967 ஆம் ஆண்டு குண்டடிப்பட்டு அத்தோடு நடிப்புக்கு முழுக்கு போடவேண்டும் இனி பேசமுடியாது என்பதை மாற்றி சொந்தக்குரலிலேயே பேசி நடித்தார். முன்னிலும் அழகாக, இளமையான மெலிந்த தோற்றத்தில் எம்ஜிஆர் இருந்தார்.

    82. குண்டடிப்பட்டப்பின் முதன்முதலில் காவல்காரன் ஷூட்டிங்குக்கு வந்த எம்ஜிஆரை வரவேற்கும் விதமாக நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடல் ஒலிக்கப்பட்டதாக சொல்வார்கள்.
    83. எம்ஜிஆரும் கருணாநிதியும் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி எங்கள் தங்கம், காஞ்சித்தலைவன் உள்ளிட்ட படங்களை எடுத்தார்கள், எங்கள் தங்கம் படத்தில் நான் செத்து பொழைச்சவண்டா என்கிற பாடல் பிரபலம்.

    தன் படத்தின் பாடல்வரிகள், ட்யூன்களை தேர்வு செய்த எம்ஜிஆர்

    தன் படத்தின் பாடல்வரிகள், ட்யூன்களை தேர்வு செய்த எம்ஜிஆர்

    84. கண்ணதாசனோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வாலிக்கு கிடைத்த வாய்ப்பால் பல சிறப்பான பாடல்கள் எம்ஜிஆருக்காகவே வந்தது.

    85. தனது படத்துக்கான பாடல் வரிகள், ட்யூன் அனைத்தையும் எம்ஜிஆர் தேர்வு செய்வார். அதனால்தான் அவர் பாடல்கள் ஹிட் அடித்தது.
    86. 120 டியூன்களை கேட்டு அதில் 3 வெவ்வேறு டியூன்களை சேர்த்து போடு என எம்ஜிஆர் சொல்ல குழம்பிப்போய் போட்டோம் ஆனால் அந்தப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சங்கர்கணேஷ் கூறியுள்ளார். அது பொன்னந்தி மாலைப்பொழுது என்கிற பாடல்.
    87. பலரது திருமண வாழ்க்கை அமைய எம்ஜிஆர் பெரிதும் உதவி இருக்கிறார். அதில் சங்கர் கனேஷும் ஒருவர்.
    88. அரசியலோடு கலந்த வசனங்கள், பாடல்களை பயன்படுத்துவது எம்ஜிஆரின் தனிச்சிறப்பு. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று பாடலுக்காக படம் வெளியாவதில் பல சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் எம்ஜிஆர் முன்னின்று வெளிவர வைத்தார்.
    89. எம்ஜிஆருக்காகவே உருவான குரல் என டி.எம்.எஸ் குரலைச் சொல்லலாம். பின்நாளில் எஸ்.பி.பி, ஜேசுதாஸ் போன்றோரையும் எம்ஜிஆர் பயன்படுத்தினார்.

    2 சிங்கங்கள், 1 கரடியை வளர்த்த எம்ஜிஆர்

    2 சிங்கங்கள், 1 கரடியை வளர்த்த எம்ஜிஆர்

    90. எம்ஜிஆர் பெரிதும் மதித்து காலில் விழுந்து வணங்கியவர்கள் இருவர், ஒருவர் எம்ஜிஆர் அண்ணன் என்று அழைக்கும் எம்.கே.ராதா( பழைய அபூர்வ சகோதரர்கள், பாசவலை பட ஹீரோ), மற்றொருவர் சாந்தாராம்.

    91. எம்ஜிஆர் 2 சிங்கங்கள், ஒரு கரடியை வளர்த்தார். இறந்துவிட்ட சிங்கத்தை பாடம் செய்து வைத்திருந்தார். தற்போது அது எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ளது.
    92. எம்ஜிஆர் கேரளாவில் வாழ்ந்த வீட்டை பழமை மாறாமல் புதுப்பித்துள்ளார் சைதை துரைசாமி. எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் தி.நகரில் உள்ளது அது நினைவு இல்லமாக பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
    93. திமுக சார்பில் எம்.எல்.சியாக, 2 முறை எம்.எல்.ஏவாக, திமுக பொருளாளராக பதவி வகித்துள்ளார் எம்ஜிஆர்.
    94. அதிமுக என்கிற கட்சியை 72 ஆம் ஆண்டு தொடங்கி 77 ஆம் ஆண்டில் ஆட்சியையும் பிடித்தார். இள வயது அமைச்சர்கள் பலர் எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்தனர்.
    95. உங்கள் மந்திரிசபையில் இஸ்லாமியர்கள் யாரும் அமைச்சராக இல்லையே எனக்கேட்டபோது ஏன் நானிருக்கிறேனே என சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம் எம்ஜிஆர். அந்த அளவுக்கு மதங்களை கடந்தவராக இருந்தார்.
    96. ஆரம்பத்தில் கதராடை அணிந்த காந்தியவாதியாகவும், பின்னர் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டும், கடவுள் மறுப்பாளராகவும் இருந்து பின்னர் மீண்டும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவராக மூகாம்பிகை பக்தராக இருந்தார் எம்ஜிஆர்.
    97. எம்ஜிஆருக்கு பிடித்த உணவு விரால் மீன் குழம்பு. முதல் நாள் வைத்த மீன்குழம்பை மறுநாள் சாப்பிடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அசைவம் இல்லாமல் எம்ஜிஆர் உணவு இருக்காது.
    98. எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார். எம்ஜிஆருக்கு ரிக்‌ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

    சண்டைக்காட்சிக்கென்றே பிறந்தவர் எம்ஜிஆர்

    சண்டைக்காட்சிக்கென்றே பிறந்தவர் எம்ஜிஆர்

    99. சண்டைக்காட்சிகளில் எம்ஜிஆர் நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம். சுருள் கத்தி வீச்சு, இருகைகளில் வாள் சுழற்றுவது, சிலம்பம், மான்கொம்பு என அவரது சண்டைக்காட்சிகள் சிறப்பானது. டூப் போடுவதே தெரியாத அளவுக்கு கேமரா கோணம் சிறப்பான ஒன்று. பலரையும் தூக்கி வீசும் அளவுக்கு உடல் பலம் எம்ஜிஆருக்கு இருந்தது. அன்பே வா படத்தில் 100 கிலோ எடைக்கொண்ட பயில்வானை தூக்கி இருப்பார். திருடாதே படத்தில் தொடர்ச்சியாக கட் பண்ணாமல் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சியும் அதற்கு உதாரணம். ரிக்‌ஷாக்காரனில் ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுற்றும் சீன் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

    100. எம்ஜிஆரின் 100வது படமான ஒளிவிளக்கு ஜெமினி தயாரிப்பு. 175 நாட்கள் ஓடிய படம். இதில் இறைவா உன் மாளிகையில் பாடல் பிரபலம். எம்ஜிஆர் 1984 ஆம் ஆண்டு உடல் நலமில்லாமல் சிகிச்சைப்பெற்றபோது பட்டிதொட்டியெங்கும் இப்பாடம் ஒலித்தது. தூர்தர்ஷனே இப்பாடலை ஒலிபரப்பியது.
    101. மக்களைச் சந்திக்காமல் எம்ஜிஆர் வெற்றி பெற்றது இருமுறை. 1967 தேர்தல், 1984 தேர்தல் இருமுறையும் மருத்துவமனையில் இருந்தார்.
    102. எம்ஜிஆர் குண்டடிப்பட்ட போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது, திமுக 1967 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.

    நண்பர் கருணாநிதிக்காக பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்

    நண்பர் கருணாநிதிக்காக பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்

    103. தனது ஆருயிர் நண்பர் கருணாநிதிக்காக 1962 ஆம் ஆண்டு தஞ்சாவூரிலேயே தங்கி பிரச்சாரம் செய்து பெரும் பஸ் முதலாளியை எதிர்த்து வெல்ல வைத்தார் எம்ஜிஆர். அவர் தொகுதிக்குக் கூட செல்லவில்லை.

    104. எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கியது திமுகவின் சரிவுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இன்றுவரை எம்ஜிஆர் மீதுள்ள அபிமானத்தால் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மக்கள் இருப்பது எம்ஜிஆருக்கு கிடைத்த வரம் எனலாம்.

    வாழ்நாளில் புகழ் உச்சத்தில் வாழ்ந்தவர் இவரைவிட வேறு யாரு

    105. தனது வாழ்நாளில் சினிமா, அரசியல் இரண்டிலும் உச்சமாக தோல்வி அடையாத தலைவனாக, கதாநாயகனாக இருந்த பெருமை எம்ஜிஆர் ஒருவரை மட்டுமே சேரும். வேறு எவருக்கும் இதுவரை இப்படிப்பட்ட புகழ் கிடைத்ததில்லை.

    எம்ஜிஆர் 105 அல்ல 1500 கூட எழுதலாம். அவ்வளவு தகவல்கள் இருந்தாலும் 105 வது பிறந்த நாளில் 105 சம்பவங்களை மட்டும் பதிவிடப்பட்டுள்ளது.

    English summary
    MGR's 105th Birthday ... 105 Rare Interesting Facts About MGR ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X