»   »  தமிழ்த்திரையுலகின் முதற்பெரு நிறுவனம் - மாடர்ன் தியேட்டர்ஸ் - கவிஞர் மகுடேசுவரன்

தமிழ்த்திரையுலகின் முதற்பெரு நிறுவனம் - மாடர்ன் தியேட்டர்ஸ் - கவிஞர் மகுடேசுவரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்மையில் சேலம்வரை செல்ல நேர்ந்தது. தமிழ்த் திரையுலகின் முதற்பெரு நிறுவனம் தோன்றிச் செயல்பட்ட இடம் சேலம்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது அந்நிறுவனம். அப்பயணத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் செயல்பட்ட ஏற்காட்டுச் சாலையை எட்டிப் பார்த்துவிட்டு வந்தேன். அதே சாலையில்தான் மாயம்மா என்னும் பெண்பால் சித்தர் ஜீவசமாதி அடைந்த திருவிடமும் இருக்கிறது.

பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கும் தமிழ்நாட்டுச் சாலைகளில் ஒன்று சேலம்-ஏற்காட்டுச் சாலை. பிற்காலத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்களாய் ஆனவர்கள் பலரும் நடந்த சாலை. பாரதிதாசனும் கண்ணதாசனும் இராதா அண்ணனும் மிதித்த மண். திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் என்னும் தனியொருவரின் பெருங்கனவுதான் மாடர்ன் தியேட்டர்ஸ். அக்கனவினை அவர் சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் கண்டவர். தம் நிறுவனத்திற்கு எல்லிஸ் ஆர் டங்கன் என்னும் ஒரு வெள்ளைக்காரரை இயக்குநராகப் பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுத்தவர்.

Modern Theaters, the first big production house in Tamil cinema

அந்நிறுவனத்தின் நிழல்பட்டவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் தனிப்பெரும் எழுச்சியை முன்வழியாகக் கொண்டுதான் பிற்காலத்தில் எண்ணற்ற திரைப்பட நிறுவனங்கள் தோன்றின. சுந்தரம் என்னும் அத்தனியாளுமையின் காலத்திற்குப் பிறகு அந்நிறுவனம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஒருவரின் பெருங்கனவு அவ்வொருவரோடு மட்டுமே தொடர்புடையது என்பதற்கு மாடர்ன் தியேட்டர்சின் வளர்ச்சியும் மறைவுமே சான்று.

இன்றைக்கு ஒரு திரைப்படம் தயாரிப்பது தனியொருவரால் இயல்வது. பணம் முதலீடு செய்வதற்குரிய வளமை இருந்தால் ஒருவர் ஒரு படத்தை எடுத்துவிடலாம். அதை வெளியிடுவதற்குள் தலை கிறுகிறுத்துவிடுகிறது என்பது வேறு. ஆனால், ஒரு படத்தை ஆக்குதல் என்பது இன்றைக்கு எல்லாராலும் முடியும். அதனால்தான் இட வணிகர்களும் உள்ளூர்ச் சிற்றாலைத் தொழிலதிபர்களும் கணினிப் பணக்காரர்களும் இன்று படத்தொழிலில் குதிக்கின்றனர். ஆனால், எண்பதாண்டுகளுக்கு முன்னால் திரைப்பட வணிகம் தோன்றி வளரத் தொடங்கிய காலத்தில் படத் தயாரிப்பு என்னும் தொழில் இவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. ஒரு படத்தை ஆக்குவதற்கான மூலப்பொருள் படச்சுருள். அதை இறக்குமதி செய்வதிலிருந்து தொடங்கவேண்டும். அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட படச்சுருளில் படம்பிடித்துத் தரும் 'படக்கருவி' (கேமரா) மிகவும் அரிதான அறிவியல் பொருள். அக்கருவியை இயக்க வேண்டிய படப்பதிவாளர் மேனாட்டில் கற்றுக் கரைகண்டவராக இருக்க வேண்டும். அன்று இந்தியாவிலேயே படப்பதிவுக் கலையைக் கற்கும் படிப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை.

Modern Theaters, the first big production house in Tamil cinema

ஒரு படப்பதிவாளர்தான் ஒரு படத்தை உருவாக்குகிறார் என்பதில் இன்றளவும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஏனென்றால் படப்பதிவைக் கருவியை ஓடவிட்டபோதும் அதில் படம் பதிவாகாமல் எத்தனையோ சுடுவுகள் இழக்கப்பட்டிருக்கின்றன. முழுப்படத்தின் சுடுவுச் சட்டகமும் கோணல்மாணலாகியதால் தலையிலடித்துக்கொண்டு அழுதவர்கள் பலர். இன்றைக்குப் படப்பதிவுத் தளத்தில் அங்கே பிடிக்கப்படும் காட்சியை நேரிணைப்பில் உள்ள ஒரு சின்னதிரைப் பெட்டியின் வழியாகச் சரிபார்க்கிறார்கள். ஆனால், அக்காலத்தில் பதிவாக்கப்பட்ட படச்சுருளைக் கழுவிப் பதிவெடுத்து திரையில் ஓடவிட்டுத்தான் சரிபார்க்க முடியும். எனில் அக்காலத்தில் ஒரு படப்பதிவாளரின் பொறுப்பு எத்தகையது என்பதை உணரலாம். பெரும்பொருட்செலவு செய்து எடுக்கப்படும் ஒரு படம் கேமராமேன் என்னும் ஒற்றை ஆளின் கருவி இயக்கத் திறனையே சார்ந்திருக்கிறது.

அக்காலத்தில் திரைப்படத் தொழிலில் ஏன் குதித்தார்கள் என்பதும் களிநயமான கேள்வி. அன்று மக்கள் தொகை குறைவாக இருந்தது. திரையரங்குகளும் பெருகியிருக்கவில்லை. இன்று மாவட்டத் தலைநகராக உள்ள பெருநகரங்கள் அன்று சிறுநகரங்களாக இருந்தன. அங்கே ஓரிரண்டு கொட்டகைகள் இருந்திருக்கின்றன. அவை தவிர வட்டாரச் சிறு நகரங்களில் நகரும் கொட்டகைகள் (டூரிங் டாக்கீஸ்) அமைத்தும் படம் காட்டியிருக்கிறார்கள். இவற்றால் என்ன பெரிய வணிகம் வாய்த்திருக்கக் கூடும் ? பெரிதாய் இருக்க வாய்ப்பில்லை. நிலைமை அவ்வாறிருக்க படத்தயாரிப்பில் எப்படி இறங்கினார்கள்? அங்கேதான் நிலைத்தன்மை என்னும் கூறு குறுக்கிடுகிறது. ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டால் அது அந்தப் பட முதலாளியின் வாழ்நாள் முழுக்க வருமானத்தைத் தந்தபடி வளரும் சொத்தாகிவிடுகிறது. தென்னை மா பலா மரங்களை ஒருமுறை வளர்த்து ஆளாக்கிவிட்டால் அவை தலைமுறை தாண்டியும் பலன் தந்தபடி இருக்கின்றனவே, அவ்வாறே ஒரு திரைப்படமும் நிரந்தர விற்பனைப் பொருளாக இருந்தது. ஏனென்றால் நாடகங்கள் அவ்வாறுதான் நடத்தப்பட்டன.
எடுத்துக்காட்டாக அரிச்சந்திரனைப் பற்றிய மேடை நாடகம் அல்லது தெருக்கூத்து என்றால் அது காலவரம்பின்றி நிகழ்த்தப்படுவது. எஞ்ஞான்றும் களைப்பின்றித் தொடர்ந்து பார்க்கத்தக்க ஒன்பது மெய்ப்பாடுகளாலுமான செவ்வியல் கதைகள். மக்களும் அவற்றையே விரும்பிப் பார்த்தார்கள். நாடக வடிவில் அவற்றைத் திரும்ப திரும்ப நிகழ்த்த வேண்டும். ஆனால், அதையே திரைப்படமாக எடுத்துவிட்டால் காலாகாலத்துக்கும் காட்டிக்கொண்டிருக்கலாம். ஒருமுறை நடிக்கப்பட்ட நடிப்பு, பாடப்பட்ட பாடல், இசைக்கப்பட்ட இசை அழியாப் பதிவாகிவிடுகின்றன. அரங்குகளில் காட்டப்படுகின்றன. மக்கள் விரும்பிப் பார்க்க வந்தனர். இந்தத் தன்மையால்தான் அன்றைக்குப் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார்கள்.

Modern Theaters, the first big production house in Tamil cinema

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மேற்படிப்பு படிப்பு இலண்டன் சென்றவர். சாயமிடும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பைக் கற்றாலும் அவர்க்குத் திரைப்படக் கலைமீது ஆர்வம் பிறந்தது. நாடு திரும்பியதும் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து சில படங்களை எடுத்தார். அப்போது படமெடுப்பதற்காக கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களுக்கு நடையாக நடக்க வேண்டியிருந்தது. நம் ஊரிலேயே இவ்வசதிகளைத் தருவிக்க வேண்டும் என்ற வேட்கை பிறந்தது அவர்க்கு. ஏற்காட்டு மலையடிவாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த நிலத்தை விலைக்கு வாங்கி ஒரு படத்தை உருவாக்குவதற்கு வேண்டிய அனைத்துக் கூடங்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டினார்.

அதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். திரைப்படத் தொழிலைப் பற்றிய மேதைமையால்தான் அவரால் அம்முயற்சியில் துணிந்து இறங்க முடிந்தது. அக்காலத்தில் இருள் மூடிய அரங்குகளுக்குள்ளேதான் படப்பிடிப்பை நிகழ்த்த முடியும். அதற்கு அளவிற்பெரிய மூடுகூடங்கள் (Studio floors) வேண்டும். அவ்விடத்திலேயே படச்சுருள் வினையகங்களும் இருப்பது சிறப்பு. ஒலிப்பதிவுக்கூடங்களும் அங்கேயே இருக்க வேண்டும். நடிகர் நடிகையர் தங்குமிடங்கள், நடனப் பயிற்சி நடிப்புப் பயிற்சிக் கூடங்கள் என ஒருங்கிணைந்த வளாகமாக அத்தளத்தை அமைத்து வென்று காட்டியவர் சுந்தரம். சுந்தரத்தின் வெற்றி மெய்யப்பச் செட்டியார் போன்றோரைக் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளங்களை அமைக்கத் தூண்டியது. பலதரப்பட்டவரும் திரைப்படத் தயாரிப்பில் நுழைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் தமிழ்த் திரையுலகின் முதற்பெரு நிறுவனம்.

English summary
A write up on Tamil Cinema's first ever big production house Modern Theaters

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil