2022 ல் அதிகம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மெகா பட்ஜெட் படங்கள்
சென்னை : புத்தாண்டு தினமான இன்று பிரேம்ஜி நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் தவிர வேறு எந்த படமும் ரிலீஸ் செய்யப்படவில்லை. அதே சமயம், கொரோனாவால் தாமதமாகி வந்த பல டாப் ஹீரோக்கள் மற்றும் மெகா பட்ஜெட் படங்கள் 2022 ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
Recommended Video
2021 ம் ஆண்டிலேயே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் 2022 ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதில் சில படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ள மாதங்களின் விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் மெகா பட்ஜெட் படங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆர்ஆர்ஆர்
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2022 ம் ஆண்டில் முதலில் ரலீசாகும் மெகா பட்ஜெட் படம் இது தான். பிரம்மாண்ட இயக்குனர் என புகழப்படும் ராஜமெளலி இயக்கி உள்ள இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிமை
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சுமார் 150 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகமே எதிர்பார்க்கும் படமாக வலிமை மாறி உள்ளது.

பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் ப்ரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு பொங்கலுக்கே பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கி உள்ள பான் இந்தியன் படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் கிட்டதட்ட ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2
கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள படம் இந்தியன் 2. ஷங்கர் - லைகா இடையேயான பிரச்சனைகள், வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டதால் விரைவில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு, மூன்று மாதங்களில் படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு, ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கிட்டதட்ட 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எதிர்பார்க்கப்படும் படங்கள்
இந்த மெகா பட்ஜெட் படங்கள் தவிர்த்து கமலின் விக்ரம், சூர்யாவின் எதற்கும் துணந்தவன், வாடிவாசல், சிவகார்த்திகேயனின் டான், அயலான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், தனுஷின் மாறன், திருச்சிற்றம்பலம், விக்ரமின் மகான், கோப்ரா, கார்த்தியின் சர்தார், விருமன், உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. இந்த படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











