twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உரையாடல்களுக்காகக் கேட்கப்பட்ட திரைப்படங்கள் - திருவிளையாடலும் விதியும்

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    திரைப்படத்தைக் காட்சி ஊடகம் என்று வகைப்படுத்துகிறோம். காட்சி ஊடுகின்ற அகம். கண்ணால் காண்பதன் வழியாகவே அதனை அடைய வேண்டும். மாமேதை சாப்ளினின் படங்களைக் கண்ணால் காண்பதே பேரின்பம். அவற்றுக்கு “வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” என்று துணியலாம். சாப்ளின் படங்களுக்குத் தரப்பட்ட பின்னணி இசையும் பிற்சேர்க்கையே. உடலைக் கொண்டு நிகழ்த்தப்படும் மெய்ப்பாடுகள் அனைத்தும் கண்ணால் கண்டுணரப்பட வேண்டியவை. கலைகள் பலவற்றுக்கும் கண்களே குறி. காண வைத்தால் எவ்வொன்றையும் உணர்த்திவிடலாம்.

    பேசாமொழிப் படங்கள் முகிழ்க்கத் தொடங்கியபோதே திரைத்துறையின் அருஞ்செயல்கள் பலவும் நிகழ்த்தப்பட்டுவிட்டன என்பார்கள். எல்லாக் கலைகளுமே அவை தோன்றிய காலத்திலேயே விரைந்து செவ்வியல் ஆக்கங்களை அடைந்துவிடுகின்றன. பழைமையின் செம்மையைப் புதியனவற்றால் அடைய முடிவதில்லை. இந்தக் கருத்து திரைப்படங்களுக்கு நன்கு பொருந்தும். தமிழின் மிகச்சிறந்த திரைப்படங்கள் கறுப்பு வெள்ளைக் காலத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டன எனலாம். பிற்பாடு வந்த திரைப்படங்கள் பலவும் கலையூடகத்தின் வணிகச் செய்பொருள்கள்.

    movies listened for the dialogues

    தமிழர்க்கு மட்டுமில்லை, இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் அனைவர்க்கும் பாட்டும் பேச்சுமே பொழுதுபோக்குகள். மிகச்சிறந்த கலை என்பது எல்லாரும் ஈடுபடத்தக்க எளிமையோடு இருக்க வேண்டும். அவ்வகையில் பாடலே முதலிடம் பெறுகிறது. அதனால் நம்முடைய திரைப்படங்களில் பாடல்கள் முதன்மையிடத்தைப் பெற்றன. பேசாமொழிப் படங்கள் தொடக்கத்தில் அருமுயற்சிகளாக இருந்தன. அவற்றில் பாடல்களும் உரையாடல்களும் இடம்பெறாமையால் மக்களை ஈர்க்கவில்லை.

    பேசும் படங்கள் வரத்தொடங்கிய பிறகு பாடல்களோடு பாத்திரங்களின் உரையாடல்களும் செம்பங்கு வகித்தன. தொடக்கத்தில் பாட்டுக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையிடத்தினை உரையாடல்கள் எடுத்துக்கொண்டன. ஆடல்களும் பாடல்களும் உரைவீச்சுகளும் சேர்ந்தபின் வெளியான திரைப்படங்கள் முழு வளர்ச்சி பெற்றவையாயின. ஒலிப்பதிவு மேம்பாடுகள் எல்லா வாய்ப்புகளையும் வழங்கின. பின்னணிக்குரல்கள் சேர்க்கப்பட்டன. தொடக்கத்தில் நடிப்பு என்பது தோன்றி நிற்றல், தோன்றிப் பேசுதல் என எளிமையாக இருந்தது. சிவாஜி கணேசனின் வருகைக்குப் பின்னரே தமிழ்த் திரைப்பட நடிப்புக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது எனலாம்.

    நாடகங்களில் பாட்டும் நடிப்பும் கலந்து கலந்து வரும். குரல் நன்றாக இருந்தால்தான் நாடகக் குழுவிற்குள் நுழையவே முடியும். நாட்டு விடுதலைக்கு முன்பு ஏழ்மையைப் போக்கிக்கொள்ள வழியற்றவர்கள் ஒரு நாடகக்குழுவில் சேர்ந்துவிடத் துடிப்பார்கள். அப்படிச் சேர்ந்துவிட்டால் வேளா வேளைக்குச் சோறு கிடைக்கும். வயிற்றுப் பசியாறி வாழ்ந்துவிடலாம். வீட்டின் ஏழ்மை நிலை பொறுக்க முடியாத பெற்றோரே தாம் பெற்ற பிஞ்சுகளை நாடகக் கூட்டத்தினரிடம் சேர்ப்பித்துவிடுவார்கள். நல்ல குரல்வளத்தோன் எனில் சேர்க்கை கிடைக்கும். மேடையிலிருந்தபடி பாடினாலும் பேசினாலும் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவனுக்குக் கணீரென்று கேட்க வேண்டும். அப்படிப் பாடவும் பேசவும் வேண்டும். எம். ஆர். இராதா அண்ணனின் குரல் இளமைக் காலத்தில் மென்மையாகத்தான் இருந்ததாம். நாடகத்தில் தொடர்ந்து கத்திப் பேசியதால்தான் கட்டைத்தன்மை அடைந்ததாம். கே.பி. சுந்தராம்பாளுக்குக் கணீர்க்குரல் எப்படி வந்தது ? நாடகத்தில் அவர் தோன்றிப் பாடினால் பக்கத்து ஊர்களுக்குக் கேட்கும். நேற்று கேட்ட பாடல் நன்றாக இருந்ததே என்று மறுநாள் நாடகக் காட்சிக்குப் புதிய கூட்டம் வரும்.

    தொடக்கக்காலப் படங்களில் பாடகர்களின் சுற்று முடிந்தபிறகு நடிகர்களின் காலம் தொடங்கியது. பாடத் தெரியாவிட்டாலும் பழுதில்லை, நன்கு பேசி நடிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையுண்டாயிற்று. உரையாடலுக்கு வேண்டிய உரைவீச்சுகளை எழுதித் தருவோர் தேவைப்பட்டனர். நன்கு எழுதத் தெரிந்தவர்கள் அரிதாகக் கிடைத்த காலம். இளங்கோவனும் கருணாநிதியும் கண்ணதாசனும் அவ்வெற்றிடத்தினை நிரப்பினர். அவர்கள் எழுதித் தருவதைப் பேசி நடிப்பதைப் தாம் பெற்ற பேறாகக் கருதினர் கலைஞர்கள். திரைப்படத்திற்கு எழுதுவது நல்ல தொழிலாயிற்று. ஆரூர்தாஸ் என்னும் வசனகர்த்தா ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பங்காற்றினார். ஏ.எல். நாராயணன் என்பவர் நூற்றுக்கணக்கான படங்களுக்கு உரையாடல் எழுதினார். பஞ்சு அருணாசலம் எழுதிய படங்கள் எழுபதுகளில் சுணங்கிக்கிடந்த திரைப்பட வாணிபத்திற்குப் புத்துணர்ச்சி அளித்தன. அவ்வாறு எழுதத் தலைப்பட்டவர்களில் சிலர் தரமான இயக்குநர்களாகவும் பெயரெடுத்தனர். தங்கப்பதக்கம் படத்தின் உரையாடல்களால் அறியப்பட்ட மகேந்திரன் சிறப்பான படங்களை எடுத்தார்.

    இன்று வரைக்கும் திரைத்துறையில் பணியாற்றுவதற்கு அழைத்துக்கொள்ளப்படும் எழுத்தாளர்கள் “வசனம்” எழுதச் சென்றவர்களாகவே இருக்கிறார்கள். பராசக்திக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் உரையாடல் எழுதுவதற்குத்தான் தமிழறிந்த எழுத்தாளர் வேண்டும். இன்றைய “அன்றாடப் பேச்சு வழக்குப் படங்களுக்கு” உரையாடல் எழுதவும் எழுத்தாளர் என்னும் படைப்பாளி தேவைப்படுகிறாரா? உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஒரு திரைப்படத்தின் எழுத்துப் படியை எழுதித் தரவே எழுத்தாளர் அழைக்கப்படுகிறார். அவ்வாறு எழுதித் தருகையில் எழுத்தாளரும் கொஞ்சம் தற்பொருளை உள்வைத்துத் தைக்கலாம், திரைக்கதையில் அவருடைய கதைக்கூறுகள் சில இருக்கலாம், அவ்வளவுதான். இயக்குநரின் மனத்திலேயே படத்தின் காட்சி வடிவங்கள் இருக்கின்றன. திரைக்கதைப் படியை எழுதாமலேயே முழுப்படத்தையும் எடுத்து முடித்த இயக்குநர்கள் இருக்கின்றார்கள். அத்தகைய படங்கள் சில வெற்றியும் பெற்றன.

    திரைப்படத்தைப் படமாகவே பார்க்க வேண்டும் என்ற நிலைமாறி ஒலிப்படியாகக் கேட்கவும் விருப்பம் தோன்றியது. 'மனோகரா’ உரையாடல்கள் முற்காலத்தில் ஒலித்தன. திரைப்படத்தைப் போலவே வெற்றி பெற்ற ஒலிச்சித்திரம் என்று திருவிளையாடலைக் கூறலாம். “எந்நேரமும் பாட்டே போட்டுக்கிட்டு இருந்தா எப்படி ? எதாச்சும் ஒலிச்சித்திரம் இருந்தால் போடுங்கப்பா…” என்று விரும்பிக் கேட்பார்கள். உடனே திருவிளையாடல் ஒலிக்கும். திருவிளையாடல் திரைப்படத்தின் உரையாடல்களைப் பலரும் மனப்பாடமாகவே சொல்வார்கள். திருவிளையாடலை முறியடிக்கும் வகையில் ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தின் பெயர் 'விதி’. தமிழ்நாட்டில் மிகுதியாகக் “கேட்கப்பட்ட” திரைப்படம் விதியாகத்தான் இருக்கும். ஆண்டுக்கணக்கில் ஒலித்துக்கொண்டிருந்த ஒலிச்சித்திரம். திருவிளையாடலுக்கு ஏபி நாகராஜனும் விதிக்கு ஆரூர்தாசும் எழுதினார்கள். முந்தானை முடிச்சு, கரகாட்டக்காரன் போன்ற படங்களும் ஒலிவலம் வந்தன. காலப்போக்கில் திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்கள் மதிப்பிழந்தன. இன்று அவை வெறும் நகைச்சுவைத் துணுக்குகளாக எஞ்சி நிற்கின்றன.

    English summary
    Cinema Article about the movies listened for the dialogues
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X