தேசிய விருதை வாங்கிவிட்டு.. கேப்டன் நினைவிடத்துக்கு ஓடோடி வந்த MS பாஸ்கர்.. என்ன மனுசன்யா!
சென்னை: நேற்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடு முழுவதும் தேசிய விருதுக்கு தகுதி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கி கௌரவித்தார். பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக MS பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, நேற்று முன் தினம் தேசிய விருதை வாங்கியவர், இன்று அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு வந்து வணங்கிவிட்டுச் சென்றுள்ளார். மேலும் தான் வாங்கிய தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கு சமர்பித்தார்.
திரைத்துறையில் எம்.எஸ். பாஸ்கரின் பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞராகவும், ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகவும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தவருக்கு ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரைதான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சினிமாவில் 'டும் டும் டும்' திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இவரின் திறமை தொடர்ந்து நிரூபிக்கப்பட்டாலும், இவ்வளவு பெரிய நடிகனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். இந்தக் குறை தீரும் விதமாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில், பார்க்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ். பாஸ்கருக்கு கிடைத்தது. பலர் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
தேசிய விருது: இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவுக்கு MS பாஸ்கர் அளித்த பேட்டியில், நடிகர் கமல்ஹாசன் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். "கமல் சார் எனக்கு ஃபோன் செய்து, 'எங்கே என்ன நடக்குது?' என்று கேட்டார். நான் ஷூட்டிங்கில் இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவர், 'நியூஸ்லாம் பார்ப்பது இல்லையா?' என்று கேட்டார். நான் 'ஆமாம் அண்ணா, எனக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள்' என்று சொன்னேன்," என பாஸ்கர் பகிர்ந்துகொண்டார்.

கமல் வாழ்த்து: கமல்ஹாசன் உடனடியாக, "ஏன்?" என்று கேட்டபோது, பாஸ்கர், "ஏன் கொடுத்தார்கள் என்று கேட்கிறீர்களா?" என்று திருப்பிக் கேட்டார். அதற்கு கமல், "இல்லை, ஏன் இவ்வளவு லேட்? இந்த விருது வாங்கியதால், வேலையிலும், நேர்மையிலும் ஒரு குறைவும் வைத்துவிடக்கூடாது," என்று அறிவுறுத்தினார். கமல்ஹாசனின் இந்த வார்த்தைகளுக்கு, "கண்டிப்பாக அண்ணா," என்று பாஸ்கர் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
MS பாஸ்கர் கேப்டன் நினைவிடத்திலும் நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபத்திற்கும் சென்று தனது தேசிய விருதை வைத்து வணங்கிவிட்டு வந்தார். இவரது இந்த செயல் கேப்டன் மற்றும் சிவாஜி ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
நெகிழ்ச்சி: கேப்டன் மறைந்தபோது கூட, " அவர் ஆண் என்றாலும் தாய் என்று கூறி, கண்ணீர் சிந்த பேசியிருந்தார். அவருக்கு தான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். அப்படி சொன்னவர், தேசிய விருதை வாங்கியதும் ஓடோடி வந்து கேப்டன் நினைவிடத்தில் வணங்கிவிட்டுச் சென்றது பலரையும் நெகிழ வைத்துள்ளது. மேலும் கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











