For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மக்கள் இசையின் மாமன்னன் தேவா… ரஜினி ரசிகர்களுக்காக பிஜிஎம்.. கானா பாடலின் முன்னோடி!

  |

  சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

  மெலடி, பிஜிஎம், தீம் மியூசிக், கானா பாடல்கள் என திரையிசையில் பல புதிய முயற்சிகளை சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியவர் தேவா.

  இளையராஜா, ஏஆர் ரஹ்மான் காலங்களிலும் தேவாவின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

  சம்பளம் அதிகம் கேட்ட அனிருத்... தட்டி உட்கார வைத்த லைகா... சீனில் வந்த ஏஆர் ரஹ்மான்… சம்பளம் அதிகம் கேட்ட அனிருத்... தட்டி உட்கார வைத்த லைகா... சீனில் வந்த ஏஆர் ரஹ்மான்…

  தேனிசைத் தென்றல் தேவா

  தேனிசைத் தென்றல் தேவா

  தமிழ்த் திரையிசையின் மும்மூர்த்திகள் என எம்.எஸ்.வி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கொண்டாடப்படுகின்றனர். ஆனால், சரியான விதிகளும் வரைமுறைகளும் இல்லாத இந்த அகர வரிசையை கலைத்துவிட்டால் இங்கே பலருக்கும் ஏதோ ஒருவகையில் இடமுண்டு. அதில் தவிர்க்க முடியாதவர்களில் ஒருவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. இளையராஜாவின் இசை ஆதிக்கம் தலையெடுத்த 80களில் தொடங்கிய தேவாவின் இசைப் பயணம், ஏஆர் ரஹ்மான் உச்சத்தில் இருந்த 2004க்கும் பிந்தைய காலக்கட்டம் வரையிலும் கூட தனித்துவமாக ஒலித்தது.

  மக்கள் இசையின் மாமன்னன்

  மக்கள் இசையின் மாமன்னன்

  தேவா அவரது கலைப் பயணத்தை தொடங்கியது மட்டும் ரசிகர்களின் நினைவுகளில் இருக்குமே தவிர, அவரது இசைக்கு எல்லையும் முடிவும் எப்போது என யாராலும் உறுதியாக கூறிவிட முடியாது. இது எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தக் கூடிய விதியே என்றாலும் தேவா அதில் ரொம்பவே ஸ்பெஷல் எனக் கூறலாம். மண்ணின் இயல்பை அப்படியே மரபுவழி இசையாக திரைக்குள் கொண்டு வந்தது இளையராஜா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதனை ஆர்ப்பாட்டமும் பிரம்மாண்டமும் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றதில் தேவாவுக்கு பெரிய பங்கு உள்ளது. சொல்வழக்கையும் வட்டார மொழிகளையும் மிக இயல்பாக தனது இசைக்குள் கட்டமைத்து விடுவதில் வல்லவர்.

  சூப்பர் ஸ்டார் பிஜிஎம்

  சூப்பர் ஸ்டார் பிஜிஎம்

  புரட்சித் தலைவர் எம்ஜிஆர், செவாலியே சிவாஜி, உலக நாயகன் கமல் என தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு கூட வாய்த்திடாத சிறப்பான அடையாளம் ஒன்று ரஜினிக்கு தேவா மூலம் கிடைத்தது. திரையில் சூப்பர் ஸ்டார் என டைட்டில் வரும் போது அதற்கு அமர்க்களமான பிஜிஎம் கொடுத்து ரஜினி ரசிகர்களையே சிலிர்க்க வைத்தவர் தேவா தான். அது மட்டுமா வந்தேன்டா பால்காரான், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், சிங்கம் ஒன்று புறப்பட்டதே என ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜை எகிற வைத்ததெல்லாம் தேவாவின் மெட்டுக்கள் தான் என்றால் அது மிகையாகாது. முக்கியமாக பாட்ஷா படத்தின் தீம் மியூசிக் இன்றும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், பாட்ஷா படத்தில் ரகுவரனுக்கும் அட்டகாசமான பிஜிஎம் இசைத்து, வில்லன் கேரக்டருக்கு கெத்து காட்டினார்.

  மெலடி டூ வெஸ்டர்ன்

  மெலடி டூ வெஸ்டர்ன்

  கிராமிய இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த அதே தேவா தான் இந்துஸ்தானியில் கொஞ்சம் நவீனத்தையும் நளினத்தையும் சேர்த்து ஏராளமான மெலடி பாடல்களை பரிசளித்துள்ளார். ரஜினியை போலவே கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என 90களின் முன்னணி நட்சத்திரங்களும் தேவாவின் இசையால் திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டினர். முக்கியமாக விஜய், அஜித் இருவரின் ஆரம்ப காலங்களில் தேவாவின் இசை தான் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது. ஆசை, குஷி, வாலி, நினைத்தேன் வந்தாய், முகவரி என மாறி மாறி இருவருக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

  கானாவின் முன்னோடி

  கானாவின் முன்னோடி

  தேவாவின் தனிப்பெரும் அடையாளம் என்றால் அதில் கானா பாடல்களுக்கு முதன்மையான இடம் உண்டு. குன்றத்துல கோயில் கட்டி, மீனாட்சி மீனாட்சி, சலோமியா, விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற கானா பாடல்கள் தேவாவின் சாதனைகள் என்றே சொல்லலாம். கானா பாடல்கள் என்பதால் தாள வாத்தியங்களை அதிகம் பயன்படுத்தாமல், அங்கும் கூட அவ்வளவு நேர்த்தியும் எளிமையும் நிறைந்த இசையை படரவிட்டார். தேவாவின் இசையைப் போலவே அவரது குரல்வளமும் தமிழ்த் திரையிசைக்கு வற்றாத பங்களிப்பைச் செய்துள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் கானா பாடல்களுக்கு தேவா மட்டுமே முன்னோடியாக இருக்க முடியும். அதேபோல், தமிழ்த் திரையிசையும் அதன் ரசிகர்களும் தேவாவிற்கு என்றுமே நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களே. இன்று பிறந்தநாள் காணும் தேவா இன்னும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம், அதுவே தமிழ் ஃபிலிம்பிட்டின் வாழ்த்துகளும் கூட.

  English summary
  Tamil film industry's leading music composer Deva celebrates his 72nd birthday today. In view of this, celebrities and fans have wished Deva on his birthday. Let's see Deva's journey from Melody, BGM, and Gaana songs in Tamil cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X