For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இசை எளிமையானது... அதை சிக்கலாக்கியது நாம்தான்! - இளையராஜா

By Shankar
|

Ilayaraaja
சென்னை: இசை எளிமையான விஷயம்தான். ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் பால்நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில், அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பேசி முடித்த பிறகு, இசைஞானி வழங்கிய ஏற்புரை:

"ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. சின்ன வயதில் வாத்தியார், 'முட்டாளே... அறிவுகெட்டவனே...' என்றார். அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ ஏற்றுக்கொண்டேன். வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள், 'கருவாயா, மடையா, அறிவிருக்கா உனக்கு?' என்று. ஏற்றுக்கொண்டேன். இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன. எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்.

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர். 'அவனை புகழத் துவங்குங்கள். ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும். அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

இதை ஏன் சொல்கிறேனென்றால், புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம். இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இங்கே பேசிய கவிஞர் முத்துலிங்கம் சாதாரணமான ஆள் இல்லை. ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு 'அ.. ஆ...' எழுதிப் படித்த தலைமுறையின் கடைசி ஆள் அவர். ஒரு பாடலில் எப்போதும் கருத்தைப் பளிச் என்று சொல்ல வேண்டும். அப்படி சிறப்பாக எழுதுவதில், இங்கே பேசிய கவிஞர் மு. மேத்தாவும் சரி, கவிஞர் முத்துலிங்கமும் சரி, இருவருமே வல்லவர்கள். பல சிறப்பான பாடல்களை இருவருமே எழுதியுள்ளனர்.

மொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு 'கமல்ஹாசன்' என்று இருக்கும் பெயரை நீங்கள் தலைகீழாக படிக்க முடியுமா? அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? ஆனால் 'ச.. ரி.. க.. ம' என்ற ஸ்வரத்தை 'ம.. க.. ரி.. ச..' என்று பாடலாம். இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம். எதிர்காலத்துக்கும் போகலாம். மேலேயும் போகலாம். கீழேயும் போகலாம். இந்தப் பக்கமும் போகலாம். அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்.. என்று ஆகிவிட்டது இசை. எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாம் ரெடியாக இருக்கிறது. சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது. அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை. தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ... அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது. ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா ஃபாஸ்ட் ஃபுட்'டில் இருக்கிறது? எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய். அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.

நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆனால் எது நம் மனதில் நிற்கிறது? அதுதான் உண்மையான விஷயம். 'இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்' என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர்.

ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. இசை எளிமையானது... அதை நாம்தான் சிக்கலாக்கிவிட்டோம்!

போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது. ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு 'பார்' மட்டுமே. அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று.

அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு ட்ராக்குகளில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 உதவியாளர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கம்போஸர்கள். அவர்களுள் ஒரு பெண்மணி பிராட்வே மியூசிக்கில் கம்போஸ் செய்பவர். நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. "You made it very simple. Music is that much simple. They made it complicated. They wasted the whole day just for 8 Bars" என்றாள் அழுதுகொண்டே!

ஆக, இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது. எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம்? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா? அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் எப்போதாவது உங்களிடம் கேன்வாஸ் பண்ணி சொல்லியிருக்கிறேனா? வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை ஒரு 'தொடராக' எழுதுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன்.

இங்கே எனக்கு என் அம்மாவின் படத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். எந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதை வரைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நான் எடுத்த புகைப்படம். அதை வரைந்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனக்குச் சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாமல் போனதே கிடையாது. ஆனால் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நேரத்தில் எனக்குத் தலைவலி வந்துவிட்டது. முதல்முறையாக அந்தச் சின்னத் தலைவலிக்காக டாக்டர் வந்து வீட்டில் பார்த்துவிட்டுச் சென்றார். 'டாக்டர் வந்தார்' என்றவுடன் அம்மா பதறிவிட்டார்கள். 'ஏம்ப்பா.. உனக்குத் தலைவலியா?' என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள். 'ஏம்மா? இந்தச் சின்ன விஷயத்துக்கு அழுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை' என்று நான் அவர்களைச் சமாதானப்படுத்தி அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்து இங்கே எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தத் தாய் எதற்காக என்னை ஈன்றார்கள் என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய ஆசைகள் இருக்கும். படிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் படித்து என்ன செய்யப்போகிறேன், என்ன உத்தியோகத்துக்குப் போகப் போகிறேன் என்று தெரியாது. இசைகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது. நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. அதனால்தான் 'தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே' என்று நான் சொல்வதுண்டு.

ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே.. அது நன்றாய் இருக்கிறதே.. என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

'அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும். எங்களுக்குப் பணம் கொடுங்கள்' என்று அம்மாவிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள். அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய்?

ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை. இதுதானே கல்வி. இதை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்? எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும்? அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை. அந்தப் பண்பு வரவில்லை. அம்மா.. என்பது அம்மாதான். ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள். அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது!

இதை எல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எதற்கென்றால், பிறந்த நாள் என்று சொல்லி என்னை அழைத்துவிட்டார்கள். இந்த நாளில் என்னைப் பெற்றவளை நினைக்காமல் நான் எப்படி இருக்க முடியும்?

கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நான் எழுதிய பாமரவெண்பா ஒன்றை அடிக்கடிக் குறிப்பிடுவார்...

'வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்

ஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்

ஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்

போதும் பொலம்பும் பொழப்பும்'

வெண்பா என்பது புலவர்களுக்குப் புலி. அதாவது புலி மாதிரி புலவர்களை அடித்துவிடுமாம் இந்த வெண்பா. நானும் எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். பின் மீண்டும் இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணி எழுதிப் பார்த்தேன். வந்துவிட்டது. அதுதான் இந்தப் புத்தகமாக வெளிவருகிறது.

இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது... எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து 'இங்கேயே கிட' என்று என்னைப் பணித்துவிட்டான். அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள். இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. நாம் பாடவேண்டாம். ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது? 'தாலாட்ட வருவாளா'வாக இருக்கட்டும், 'தென்றல் வந்து தீண்டும்போது'வாக இருக்கட்டும், 'அம்மா என்றழைக்காத'வாக இருக்கட்டும், 'ஜனனி ஜனனி'யாக இருக்கட்டும்... பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா? அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா? அதுதான் தியானம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும், ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா? நம் மனது நிற்பதில்லை. ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால், அதை என்னவென்று சொல்வது? இது எப்படி நடக்கிறது? நான் நடத்துகிறேனா? 'நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்' என்று நான் உங்களிடம் சொல்கிறேனா? அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது.

இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது. அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும். சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது. எது சுத்தம், எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது. அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை. ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூரத்தில் இருக்கவேண்டும்.

ஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால், 'இந்த ஆள் எதற்கு வந்தான்?' என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது? அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு. இதயம் என்பது ஒரு சீரான கதியில் துடிக்க வேண்டும். ஒருவருக்கு வேகமாக, ஒருவருக்கு மெதுவாக என ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகவும் அமைதியாக, மனதுக்கு நிறைவாக நடந்தது. என் நன்றிகள்," என்றார் இளையராஜா.

English summary
Maestro Ilayaraaja says that the music is very simple but we made it very complicated.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more