»   »  'அடடா மழைடா...’ பாட்டுப் பாடி முத்துக்குமாரை வரவேற்ற அமெரிக்க பல்கலை மாணவர்கள்!

'அடடா மழைடா...’ பாட்டுப் பாடி முத்துக்குமாரை வரவேற்ற அமெரிக்க பல்கலை மாணவர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஸ்டின்(யு.எஸ்): டெக்சாஸ் மாநிலத் தலைநகரான ஆஸ்டின் நகரத்திலுள்ள பிரபல 'யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ்' ல் கவிஞர் நா.முத்துக்குமார் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த பல்கலைக் கழகத்தில், 1998ம் ஆண்டு முதல் ஆசியக் கல்வித் துறையின் கீழ் ஒரு பிரிவாக தமிழ்த்துறை இயங்கி வருகிறது.அன்று முதல் பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சங்கரன், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து, ஆராய்ச்சி வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

Na Muthukkumar addresses among University of Texas students

இளங்கலை முதல் ஆராய்ச்சி வரை..

தமிழ் வம்சாவளி மாணவர்களும் ஏனைய மாணவர்களும் தமிழ்ப் பயின்று வருகிறார்கள். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களும் உண்டு.

இங்கே தமிழ் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார்கள். தமிழ் மாணவர்களிடம் கலந்துரையாட வருமாறு டாக்டர் ராதாகிருஷ்ணன், கவிஞர் நா முத்துக்குமாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன், முத்துக்குமார் கடந்து வந்த பாதைகளையும் சாதனைகளையும் எடுத்துரைத்து மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அழகே அழகே.. எதுவும் அழகே...

தேசிய விருது பெற்ற ‘அழகே அழகே' மற்றும் அவருடைய புகழ்பெற்ற பாடல்களான ‘விழி மூடி யோசித்தால்..., அடாடா மழைடா அட மழைடா... , சுட்டும் விழி சுடரே' போன்ற பாடல்களை பாடி மாணவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய முத்துக்குமார், தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை தோன்றிய வரலாறு குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாரதியார் தொடங்கி இன்றைய காலம் வரை புதுக் கவிதைகள் படைத்த கவிஞர்களை நினைவு கூர்ந்தார். முந்தைய மரபுக் கவிதைகள் காலத்தையும் அவர் விவரித்தார்.

தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை திரைப்படங்களில் பாடல்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். வெவ்வேறு காலக் கட்டங்களில் கொடிகட்டிப் பறந்த பாடலாசிரியர்களையும், அவர்கள் பாடல்கள் மூலம் ஆற்றிய சமூக அரசியல் பங்களிப்பையும் விளக்கினார்.

உலகத் தமிழர்களும் திரைப்படப் பாடல்களும்

"எந்த ஒரு மொழி பேசப்படாமல் இருக்கிறதோ, அந்த மொழி காலப் போக்கில் காணாமல் போய்விடும். அந்த மொழி சார்ந்த இனமும் சிதைந்து விடும். ஆனால் தமிழ் மொழி தமிழர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தழைத்தோங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது.

திரைப்படப் பாடல்கள் மூலம் உலகத் தமிழர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறது. யாருமே அருகில் தமிழ் பேசுவதற்கு இல்லையென்றால் கூட பாடல்களைக் கேட்டு, தமிழுடன் உணர்வோடு வாழ்கிறார்கள். உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் மொழியும் இருக்கும்," என்றார் முத்துக்குமார்.

குற்றாலக் குறவஞ்சி பாடிய மாணவர்கள்

தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முத்துக்குமார் பதிலளித்தார். மாணவர்கள் அதிகமான தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்கள் எப்படி எழுத்தாளர்கள் ஆகலாம் என்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கூறினார்.

தங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கியங்களைப் பற்றி சொல்ல விரும்புதாக தெரிவித்த மாணவர்கள், குற்றாலக் குறவஞ்சியை ராகத்துடன் பாடி கவிஞரை ஆச்சரியப்படுத்தி விட்டனர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்த மாணவர்களின் தமிழ் ஆர்வம் தன்னை வியக்க வைப்பதாக குறிப்பிட்ட முத்துக்குமார், "தமிழ் மொழியையும் உங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அமெரிக்க வாழ்க்கை சார்ந்த புதிய இலக்கியம் படையுங்கள். தமிழில் ஆராய்ச்சி செய்யுங்கள்", என வேண்டுகோள் விடுத்தார்.

யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ்(ஆஸ்டின்)

1883 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் (ஆஸ்டின்) பல்கலைக் கழகத்தில் 52 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 40 ஆயிரம் பேர் இளங்கலையும் 12 ஆயிரம் பேர் முதுகலையும் படிப்பவர்கள்.

இவர்களில் 23 சதவீதத்தினர் இந்தியா உட்பட ஆசிய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் முக்கிய பல்கலைக் கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை டெக்சாஸ் பல்கலைக் கழகச் சந்திப்பை முடித்து விட்டு மீண்டும் டல்லாஸ் நகருக்கு முத்துக்குமார் வருகை தந்தார். அங்கு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் கல்விக்கழக பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் மொழிக்கு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான அவசியத்தை வலியுறுத்தினார். டாக்டர் சம்பந்தம், டாக்டர் ஜானகிராமன் என்ற இரண்டு தமிழர்கள் சேர்ந்து ஒரு மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்துள்ள நிலையில், மீதம் தேவையான தொகைக்கு தமிழ் சமுதாயம் மனமுவந்து நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க சித்திரைத் திருவிழா, மிக்சிகன் தமிழ்ச்சங்க விழா, யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் மாணவர் கலந்துரையாடல் மற்றும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் கல்விக்கழக பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட கவிஞர் முத்துக்குமார், டல்லாஸிலிருந்து சென்னை திரும்பினார்.

English summary
Poet Naa. Muthukumar interacted University of Texas students at Austin, Texas, US. Students welcomed Muthukumar by singing his national award winner song and other his super hit songs. Tamil is being taught there for undergraduate, masters students and also students doing research works in Tamil. Dr. Radhakirshnan Sankaran has been teaching and guiding students since 1998, under department of Asian Studies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil