For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாச்சியார்... எதிர்பார்ப்பு இல்லாமல் போகிறவர்களுக்கு வேற லெவல்! #Naachiyaar

  By Shankar
  |
  #Naachiyar Review #நாச்சியார் விமர்சனம் #Jyothika #GVPrakash

  சேது, படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்பாளியாக தன்னை அழுத்தமாகப் பதிவு செய்தவர் இயக்குநர் பாலா. படம் வெளிவந்த ஆண்டு 1999. அதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளில் நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன் இவன், பரதேசி , தாரை தப்பட்டை என ஏழே படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். எட்டாவதாக- நாச்சியார்.

  பொதுவாக பாலா தனது படங்ககளின் கதைக்கும் அதை படமாக்குவதற்க்கும் வருடக் கணக்கில் எடுத்துக் கொள்வார் என்பது மறுக்க முடியாத உண்மை! ஒரு படைப்பாளியாக அவர் எடுத்துக்கொண்ட கால நீளம், நியாயம்தானே என ஆச்சர்யப்படுத்திய படங்களும் உண்டு; 'படுத்திய' படங்களும் உண்டு என்பது அவரை நேசிக்கிற எல்லோருக்கும் தெரியும். அவரும் அதை உணர்ந்திருக்க வேண்டும்.

  Naachiyaar audience review

  2017 மார்ச் மாதத்தில் தொடங்கி, பத்து மாதத்திற்குள் நாச்சியாரை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் தொடங்கப்படுகிற படத்திற்கு இவ்வளவு மாதங்கள் என்பதே அதிகம்தான். ஆனால், இயக்குநர் பாலாவின் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் இது குறுகிய காலத் தயாரிப்புதான். தவிர படத்தின் நீளமும் வழக்கத்தைவிட குறைவு என்பதும் ஆச்சர்யம். இன்னொரு ஆச்சர்யம்- முதல்முறையாக கதைக்கான கருவை இன்னொருவரிடமிருந்து வாங்கிப் படமாக்கியிருக்கிறார். அதனாலேயே வழக்கமாக பாலா படங்களில் வரும் மூர்க்கமான ஆட்கள், குரூரமான காட்சிகளும் நாச்சியாரில் இல்லை, அல்லது குறைவு.

  பணம் இருந்தால், மீத்தேன் மாதிரி அதலபாதாளம்வரை பாய்ந்து அழித்துவிடலாம் என நினைக்கிற சமூக சூழலில், ஒரு எளிய மனிதன் காதலை எப்படி அணுகுகிறான் என்பதை பாலாவுக்கே உரிய நக்கலோடும் நையாண்டியோடும் நெகிழ்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார்!

  Naachiyaar audience review

  களிமண் மாதிரி ஆட்களும் பாலாவின் இயக்கத்தில் நடித்தால் வேற லெவல் நடிகர்களாக பெரு மாற்றம் பெறுவது உண்மை என்பதற்கு, இந்தப் படத்தில் காத்தவராயன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்னொரு சாட்சி! சமையல் ஆட்களோடு சேர்ந்து எடுபுடி வேலை பார்க்கும் எளிய மனிதனாக வாழ்ந்திருக்கிறார். முதல் முறையாக ஹீரோயினை ஷேர் ஆட்டோவில் பார்ப்பது தொடங்கி, க்ளைமாக்ஸ் காட்சியில் 'இதல்லாம் சப்ப மேட்டர்க்கா..'என்று சொல்லிவிட்டு காதலித்தவளை குறையாத காதலோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பணத்தில் கொழிப்பவர்களுக்கு நிச்சயம் வராது!

  அறிமுக நாயகி இவானா,இந்த ஆண்டின் ஆகச்சிறந்த வரவு. இருவருக்கும் காதல் உருவாகும் அந்த தருணத்தில் அவர் காட்டுகிற முகபாவனை தேர்ந்த நடிகைகள் கூட பிரதிபலிக்க முடியாது. ரொம்ப இயல்பாக செய்திருக்கிறார். தன்னை விரும்பியவன் விழுப்புரத்திலிருந்து காசில்லாமல் நடந்து வருகிறான் என்று தெரிந்ததும்,அவனைப் போய் அழைத்து வருவதற்காக பஸ் ஏறுகிறார். நொடிக்கு ஒருமுறை 'அண்ணா, விழுப்புரம் எப்பணா வரும்' என்று விசாரிக்கும் வெள்ளந்தி மனம் என செம!

  இந்தக் காதல் ஜோடிக்கு நடந்த அநீதியைக் கண்டது நியாயம் கிடைக்க நேர்மையாகப் போராடும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தவறு தன்பக்கம் என்றால் மனம் திறந்து மன்னிப்புக் கேட்பதும், தவறு செய்பவர்களை தலைகீழாகக் கட்டி வைத்து உரிப்பதுமாக டெர்ரர் காட்டியிருக்கிறார். உடன் வரும் ராக்லைன் வெங்கடேஷ், தமிழ் குமரன் இருவருக்கும் அட்டகாசமான அறிமுகம். படம் முழுக்க வருகிற சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட நேர்த்தியாக இருக்கிறார்கள். ஒரு காவல் நிலையத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பாலா.

  Naachiyaar audience review

  'எனக்கு மட்டும் ஏன் சார்...இந்த சாமி, இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறான்?!'

  சாமிக்கும் பொழுது போக வேண்டாமா! கொள்ளயடிச்சவன், கொலைகாரன்லாம் மன்னிச்சு விட்ற சாமி நமக்கு வேண்டாம். நமக்கான சாமிய நாமளே ரெடி பண்ணுவோம்'

  'புதிய இந்தியா பொறந்திருச்சு, மீத்தேன் வாயுவால் ஏற்படும் கொடூரம், ஆணவக் கொலைகளைச் செஞ்சுக்கிட்டு ஒரு காட்டு மிராண்டிக் கூட்டம் இருக்கும் அங்க போ, அதான் உனக்கு சரியாக வரும்' என பாலாவுக்கே உரிய 'பொளேர்' வசனங்களும் அங்கங்கே அனல் பறக்கிறது.

  படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும், தனது மௌனங்களாலும் இசையாலும் கதையோடு கலந்திருக்கிறார் இசைஞானி.

  நாச்சியார் - பாலா படம் என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல் போகிறவர்களுக்கு வேற லெவல்.

  - வீகே சுந்தர்

  English summary
  Viewer's review for Bala's Naachiyaar movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X