twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தவர்களின் மனதை மதிக்காத நடிகர்கள் விஷால், கார்த்தி... சேரன்

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

    நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், விஷால் தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர். நடிகர் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய சேரன், விஷால், கார்த்தியை கடுமையாக சாடினார். முதல்ல நல்லா நடிக்க கத்துக்கங்க... அப்புறம் பதவிக்கு வர ஆசைப்படலாம் என்று கூறினார்.

    நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் சேரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய போது, விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது.

    Nadigar sangam issue: Director Cheran Apology to Karthi and Vishsal

    எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த சமூகத்திற்கு செய்யும் கேடு என்று நினைப்பவன் நான்.

    அப்படியாகத்தான் நான் சரத்குமாரை ஆதரித்ததும், விஷால் அணியில் சிலர் மீது சாடியதும். 1990களில் இருந்து சரத்குமாரை நன்கு அறிந்தவன் நான். அவசரஉதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற சிறுவனுக்கு இருதய ஆபரேஷனுக்கு, இன்னொருமுறை சம்பத்குமார் என்ற உதவி இயக்குனரின் இருதய ஆபரேஷனுக்கு, பல நேரங்களில் கல்வித்தொகை வேண்டியும். இதுமட்டும் இல்லாமல் அவரின் உழைப்பு அறிந்தவன்.

    நடிகர் சங்க வேலைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விதம், அவரது தொலைநோக்கு சிந்தனை இவையெல்லாம் தீர ஆராய்ந்தபோதும் தான். அதேநேரம் எதிர்முனையில் அவர்களைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை.

    நாசர் எனக்கு நண்பர்தான், நிறைய முறை அவரோடு எங்கள் திரையுலகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்மீதோ, சகோதரர் பொண்வண்ணன் மீதோ அல்லது நண்பர் கருணாஸ் மீதோ எனக்கு எந்த கருத்து வேறுபாடோ, சிந்தனை தொடர்பான சந்தேகங்களோ இல்லை.
    அப்படியிருக்க விஷால், கார்த்தி இவர்கள் மீது மட்டும் எனக்கு கோபம் வரக்காரணம் என்ன என்பதையும் இங்கு நான் பதிவு செய்தாக வேண்டும். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள். நான் இவர்களுக்கு முன் இயக்குநராகி 7, 8 திரைப்படங்கள் முடித்த நிலையில் இவர்களை நடிகர்களாக பார்க்கிறேன்.

    எந்த நடிகரையும் இவர் கண்டிப்பாக என் படத்தில் நடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், இவர் இந்த திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், இந்த திரைப்படம் நிறைய மக்களை போய் சேரும் என ஒவ்வொரு இயக்குநரும் நினைப்பது இயல்புதானே. நானும் அப்படி நினைத்தது சரிதானே.

    பலமுறை விஷாலை தொடர்பு கொண்டு கதை சொல்ல முயன்று ஒருவழியாக ஒருமுறை தாஜ் ஹோட்டலில் அவரையும், அவர் அண்ணனையும் சந்தித்து கதைசொல்ல, கேட்ட அவர்கள் கதை நன்றாக உள்ளது பண்ணலாம் என்று போனார்கள். ஒருவாரம் ஆகியும் பதில் இல்லை. திடீர் என "பாலா படத்தில் விஷால்" என்ற செய்தியை பார்த்தேன்.

    என்னிடம் உங்கள் படம் வேண்டாம் என்று சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதை சொல்லியிருக்கவேண்டும் அல்லவா. இரண்டு மணிநேரங்கள் உயிர் வருத்தி கதை சொன்னவன் முட்டாள் அல்லவே. பிறகு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். ஒரு நான்கு நாட்களுக்கு பிறகு எனக்கு அவரது அண்ணன் பதில் அனுப்பினார், நாங்கள் இப்போது பாலா சார் படம் பண்ணுகிறோம் பிறகு பார்க்கலாம் என... சரி, இன்று நம்மைவிட பாலாவுக்கு மார்க்கெட் உள்ளதால் அதை தேர்ந்தெடுப்பது சரியே என நான் உணர்ந்து அமைதியாகிவிட்டேன்.

    அந்த படம் வெளியான பின்பும் எந்த தகவலும் இல்லை. திரையுலகம் இப்படித்தான் என நானே நினைத்துக்கொண்டு எனது அடுத்த படங்களில் என்னை நுழைத்துக் கொண்டேன். அதற்கு பின்பும், அவர் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு லோக்கல் சேனல் அலுவலகத்தில் திருட்டு விசிடியை எதிர்த்து நியாயமான முறையில் தட்டிக் கேட்டபின்பு அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினேன். ஆனால், அதே செயல்தான் C2H. நான் இரண்டு வருடம் என்னை தொலைத்து திருட்டு விசிடி ஒழிப்புக்காக உருவாக்கிய திட்டம். கிட்டத்தட்ட 3000 இளைஞர்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்டது, எங்கள் திரைத்துறையின் நன்மை கருதி... அன்று ஒரு வீடியோ கடைக்காரரை உதைத்த விஷால் இன்று இவ்வளவு பெரிய முயற்சிக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை. ஆனால் நான் விஷால் கண்டிப்பாக அழைத்து வாழ்த்துசொல்லுவார் என எதிர்பார்த்தேன். அப்போது அவருக்குள் உள்ளது உண்மையான சமூக சிந்தனையா என்ற கேள்வி எழுந்தது.

    அதேபோல கார்த்தி நல்ல பையன், எனக்கு மிகவும் பிடித்த நண்பர் சூர்யாவின் தம்பி. அவர் அறிமுகமான சமயம் ஒருமுறை சந்தித்து கதை சொல்லியிருக்கிறேன், அதை அவர் விரும்பவில்லை. ஆனால் அது நமது கலாச்சாரம் பற்றிய வாழ்வியல் சொல்லும் அண்ணன் தங்கை கதை. சரி காலம் கனிந்து வரும், நல்ல திரைப்படங்களும் பண்ணவேண்டும் என்று உணர்த்தும் என காத்திருந்தேன். நல்ல நடிகர் சில கமர்ஷியல் படங்களில் நடித்து தன் திறமையை வேஸ்ட் பண்றாரே என எண்ணி, மீண்டும் அவரை தொடர்புகொள்கிறேன் அவரது மேலாளர், உறவினர் பிரபு மூலமாக. என்ன காரணமோ தெரியவில்லை, சந்திக்கவோ, கதை சொல்லவோ முடியவில்லை...

    என்னுடைய கேள்வி எல்லாம் நீங்கள் எனது படத்தில் நடிக்க வேண்டாம். உங்கள் பார்வையில் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய இயக்குநராக இல்லாமல் இருக்கலாம். நான்கு தேசியவிருதுகள் மட்டும்தான் வாங்கியுள்ளேன். மேலும், நம் தமிழ் சமூகம் சார்ந்த கதைகளை மட்டுமே எடுக்கத் தெரிந்த இயக்குநர்தான். ஆனால் எந்த மனிதனாக இருந்தாலும் அவனை மதித்து, அவனை சந்தித்து அவன் மனம் நோகாமல் பதிலளித்தால் தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் கூட எழுந்து நடக்கத்துணிவார்கள் என்ற நல்ல சிந்தனை உங்களுள் வராமல் போனதே உங்கள் சமூகப்பணி தொடர்பாக என் மனதில் எழுந்த முதல் கேள்வி.

    இப்படியிருக்க, மூத்த கலைஞர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது எந்த வகையில் என எனக்கு புரியவில்லை. அவர்களின் மன உணர்வுகளைப் பற்றி புரியாமல் நீங்கள் எப்படி உதவுவீர்கள் என்பது எனது அடுத்த கேள்வி. இப்படியாக அவர்கள் மீது எனக்கு இருந்த வருத்தமே அன்று அந்தமேடையில் எனது கோபமாக அவ்வாறு வெளிவந்தது. தவிர, அவர்கள் மீது குறிவைத்து தாக்க வேண்டும் என எண்ணவில்லை. சினிமாவை நேசித்து, அதற்காகவே வாழ்க்கையை தொலைத்து வாய்ப்பு கிடைக்கும்போது வியாபாரம், மார்க்கெட் என்ற பெயரால் ஒருவரின் வாழ்க்கை இழக்கப்படும்போது தான் அந்த வலி தெரியும்...

    அதேபோல ஜே.கே. ரித்தீஷ் பற்றியும் பேசிவிட்டேன். அதுகூட அவர் விஷால் அணி வீடியோவில் ராதாரவியைப் பற்றி தவறாக மிகவும் மரியாதைக் குறைவாக சொல்லியிருந்தார். என்னதான் எதிரணியாக இருந்தாலும் 35வருடம் சினிமாவில் அனுபவம் உள்ள ஒரு மூத்தகலைஞனை அப்படி சொல்வது தவறு என எனக்கு தோன்றியது.

    மேலும் அந்த வீடியோவை அவர்கள் அணியில் உள்ள அனைவரும் பார்த்த பின்புதான் வெளியிட்டிருப்பார்கள், யாராவது அதை தடுத்து அல்லது மாற்றியிருக்கலாம். அதனால்தான் என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். மற்றபடி யாரையும் குறிவைத்து தாக்கி ஓட்டு சேகரிக்க அப்படி சொல்லவில்லை. நான் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன். என்மீது அக்கறை உள்ள எனது ரசிகர்களும், அபிமானிகளும் எடுத்துச் சொல்லும்போது அதை நான் மறுத்தால் நல்லது இல்லை.

    என் சொந்த பிரச்சனையின் போது அரவணைப்பாக இருந்தவர்கள் இப்போது அதட்டி சொல்லும்போது கேட்கத்தான் வேண்டும். தம்பி விஷால், தம்பி கார்த்தி, அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் உங்க மனசு வருந்தும்படி பேசியமைக்கு, காயப்பட்டிருந்தால் இந்தசபையில் வருத்தம் தெரிவிக்கிறேன், மனப்பூர்வமாக...

    இதை அவர்களின் அடுத்த பட தேதிக்காக, என கமெண்ட் போட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று சேரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Cheran, who is known for his uncontrolled speech in Nadigar Sangan issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X