இன்னும் சற்றுநேரத்தில் 68வது தேசிய விருது வழங்கும் விழா… குடும்பத்துடன் டெல்லி சென்ற சூர்யா
டெல்லி: 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (செப் 30) டெல்லியில் நடைபெறுகிறது.
முதன்முறையாக சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வெல்கிறார் சூர்யா.
சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

விருதுகளை குவித்த சூரரைப் போற்று
சூர்யா ஹீரோவாக நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 2020ல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு பதில் ஓடிடியில் ரிலீஸான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் இப்போது இந்தியில் அக்சய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இதனிடையே சூரரைப் போற்று படக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

68வது தேசிய விருது விழா
சூரரைப் போற்று படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதேபோல் சிறந்த பேக்ரவுண் இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா இருவரும் விருது பெறுகின்றனர். மேலும், சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. இதனையடுத்து இன்று நடக்கும் தேசிய விருது விழாவில் கலந்துகொள்ள சூரரைப் போற்று படக்குழு டெல்லி சென்றுள்ளது.

குடும்பத்துடன் சென்ற சூர்யா
சூர்யா தனது கேரியரில் நடிப்புக்காக பலமுறை கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து இன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறவுள்ளார் சூர்யா. முதன்முறையாக தேசிய விருது வாங்கவுள்ள சூர்யா, மனைவி ஜோதிகா, மகள், மகன் ஆகியோருடன் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்ற சூர்யா, ஏர்போர்ட்டில் செய்தியாளர்களுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றார். சூர்யா தேசிய விருது பெறவுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப் போற்று படக்குழு டெல்லியில்
சூரரைப் போற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டார். அதேபோல், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் முதல் தேசிய விருதை பெற டெல்லி சென்றுள்ளார். இந்தமுறை சூரரைப் போற்று 5 விருதுகளையும், மண்டேலா திரைப்படம் இரண்டு விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் மூன்று விருதுகளையும் வென்றுள்ளது. தமிழில் இருந்து மூன்று திரைப்படங்கள் மொத்தமாக பத்து தேசிய விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











